வாழ்க்கை நலம்

Vinkmag ad

8. வாழ்வாங்கு வாழ்வோம்!
 

      வாழ்தல், அறிவியல் சார்ந்த கலை, உளவியல், சமூகவியல், தாவரவியல், வேளாண்மையியல், கால்நடையியல், கட்டுமானவியல், தொழிலியல், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய அறிவியல் துறைகள் அனைத்தும் சங்கமித்த தனிச்சிறப்புடைய வாழ்க்கையே வாழ்க்கை! மானிட வாழ்வியல், விலங்குத் தன்மையுடையதல்ல.

 

      மனிதன், மிருகமும் அல்ல; மனிதனும் அல்ல. விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை அடையக்கூடிய படைப்பு! மனிதனாகிய பிறகு, அதிமானுடத் தன்மை அதாவது இறைத்தன்மை அடைய வேண்டிய படைப்பு! இந்தப் பரிணாம வளர்ச்சி, முறையாக நிகழ்ந்து நிறைவெய்துதலே வாழ்கையின் குறிக்கோள்; பயன்! இத்தகு மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழாத வாழ்க்கை, வாழ்க்கையாகாது. “வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே!” என்பது திருவாசகம்.

 

      வாழ்க்கை என்பது தற்செயலாக ஏற்பட்டதல்ல. வாழ்வியல் திட்டமிட்டதே! அற்புதமான ஒழுங்கமைவுகளுடன் அமைந்ததேயாம். ஆதலால், சிறந்த முறையில் வாழ முயற்சி செய்வதும் ஒருவகை அறிவியல் முயற்சியேயாகும். ஏன்? சீராக வாழ்ந்து – வாழ்ந்த காலத்திற்கும் தலைமுறைக்கும் ஏற்றம் தரும் வகையில் வாழ்ந்து முடித்தால் அஃது ஓர் அறிவியற்சாதனை என்று கூட பாராட்டலாம்.

 

      வாழ்க்கையென்பது பல்வேறு பொறிகளைக் கொண்ட, புலன்களால் அமைந்த உடலைக் கருவியாக்கிக் கொண்டு வாழப்பெறுகிறது; இயக்கப் பெறுகிறது. உடம்பின் இயக்க ஆற்றலின் பாதுகாப்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இந்த உடம்பின் அனைத்துப் பொறிகளையும் புலன்களையும் சிறப்புற இயக்கிப் பயன் கொள்வதன் மூலம் வாழ்க்கை பயனுடையதாகிறது; முழுமையாகிறது.

 

      இத்தகைய முழு வாழ்க்கைக்குத் தொடக்கம் இல்வாழ்க்கை, காதல் ஒருத்தியுடன் கூடி வாழ்க்கையை நடத்துதல் என்பது, ஒரு கூட்டு வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் மூலம் தென்புலத்தார் பேணப்படுகின்றனர்; தெய்வம் பூசிக்கப் பெறுகிறது; விருந்தோம்பும் வேளாண்மை நிகழ்கிறது; துறந்தவர்களுக்குத்  துய்ப்பனவும் உய்ப்பனவும் வழங்கப் பெறுகின்றன.

 

      துய்த்து மகிழும் வாய்பிழந்தார்க்கெல்லாம் துய்ப்பன வழங்கப் பெறுகின்றன. இரந்தாருக்கும், இறந்தாருக்கும் ஏற்ப உதவிகள் செய்யப் பெறுகின்றன. தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையாக, சமூக வாழ்க்கையாக, நாட்டு வாழ்க்கையாக வளர்கிறது! இதுவே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி! இங்ஙனம் வாழ்தலே வாழ்க்கை!

 

      “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”

 

    வானத்திற்கு என்று ஒரு தனிவாழ்க்கை முறை இல்லை. இந்த வையகத்தில் வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துபவர்களை நோக்கி வானகம் வந்துவிடும். வானத்தை இந்த மண்ணிலேயே காணலாம். இங்கேயே – இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம். வாழ்வாங்கு வாழ்தல் மூலம் மட்டுமே அமர வாழ்வு கிட்டும்! அறிவியல் சார்ந்த வாழ்க்கை வாழ்வோமாக! அறிவறிந்த ஆழ்வினை இயற்றுவோமாக! பொருள்களைச் செய்து குவித்து இன்பத்துடன் வாழ்வோமாக!

வாழ்க்கை நலம் – குன்றக்குடி அடிகள் எழுதியது

News

Read Previous

அழிவின் விளிம்பில் பறவைகள் சரணாலயம்

Read Next

வளர் இளம் பெண்களுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *