ரமழான் பேசுகிறது !

Vinkmag ad
 
பீ. எம். கமால், கடையநல்லூர்)
இதோ
நான் வருகிறேன்
உங்கள் பசியினைப்
 பங்கு வைக்க !
சுட்டெரிக்கும் நெருப்பைச்
சுமெந்தெடுத்துக்கொண்டு
 நான் வருகிறேன் !
பாவங்களை மட்டுமல்ல
உங்கள்
பகைகளையும்
சுட்டெரிக்கப்
பாசமுடன்  வருகின்றேன் !
நீங்கள்
மணலைக்  கயிறாக்கும்
மந்திரம் கற்றவர்கள் !
உங்கள்
பொய்களைச் சுட்டெரிக்கப்
புறப்பட்டு வருகின்றேன் !
நீங்கள்
 சாத்தானின் கடையில்
சாமான்களை  வாங்கி
ஈமானை விற்று
 இலாபம் பார்ப்பவர்கள் !
உங்களிடம்
அசலைக் கொடுப்பதற்கு
 ஆர்வமுடன் வருகின்றேன் !
நீங்கள்
நெருப்பை நீரென்று
நினைத்து ஏமாறுபவர்கள் !
உங்களிடம்
சுவனத்து நீர்சுமந்து
குளிப்பாட்ட வருகின்றேன் !
நீங்கள்
உலகத்து ஆசைப்
போகத்துவத்தில்
புகுந்திடாதிருக்க
ஏகத்துவத்தை
எடுத்துவரு கின்றேன் !
நீங்கள்
கஞ்சத்தனத்தில்
கைநனையா  திருக்க
தர்மத்தைச் சுமந்து
தரவரு கின்றேன் !
நீங்கள்
நூலாம்படையைக்
கயிறாகத்  திரித்து
ஒற்றுமைக்  கயிறென்று
ஒத்துக் கொண்டிருப்பதைப்
பிடுங்கி எறியப்
பிரியமுடன் வருகின்றேன் !
சுவனத்து வாசனையைச்
சுமந்தெடுத்துக்  கொண்டு
அல்லாஹ்வின் கயிறை
அளிப்பதற்கு வருகின்றேன் !
பசியோடு அதனைப்
பற்றிப் பிடித்துக் கொண்டால்
பாலம் கடப்பதற்கு
பயன்படும் உங்களுக்கு !
கண்வலை வீசிஎன்னைக்
கண்டு “பிடிப்பதற்கு”
காத்திருக்கும் பக்த
சிரோன் மணிகளே  !
உங்கள்
ஆன்மாவை வெளுப்பதற்கு
சவுக்காரம்கொண்டு வருகின்றேன் !
பாவ இருட்டை நீங்கள்
பக்குவமாய்க்   கழுவுங்கள் !
என்னை விருந்தாக்கி
ஏளனம் செய்யாமல்
மருந்தாக்கி என்னை
மனம் மகிழச் செய்யுங்கள் !
கொடுத்து வாழ்வதைக்
கொள்கையாக் கிக்கொண்டு
கெடுத்து வாழ்வதை
எடுத்து எறியுங்கள் !
என்பதைச் சொல்ல
மன்பதைக்கு வருகின்றேன் !
சாத்தானை எதிர்த்துப்
போராட உங்களுக்கு
முப்பது அம்புகளை
முதுகில் சுமந்து வருகின்றேன் !
அம்பெய்து அவனை
அப்புறப் படுத்துங்கள் !
நான்
போனபின்பு அவனிடம்
கள்ளத் தொடர்புகொண்டு
கைகுலுக் காதீர்கள் !
அவன்  உங்களை
நரகத்திற்குக்
காட்டிக் கொடுக்கும்
ஐந்தாம்படை மட்டுமல்ல –
துடைப்பதற்காக
தொட்டுவிட்டால்
ஒட்டிக்கொள்ளும்
நூலாம்படையும் அவன்தான் !
இதோ -அவனைத்
 துடைத்துத் தூக்கியெறிய
நான் ஒட்டடைக்கோலோடு
உங்களிடம் வருகின்றேன் !
எச்சரிக்கை!
என்னதான் அவனை
இறைவன்
விலங்கிட்டு விட்டாலும்
அவனின்
உற்ற தோழர்கள்
அவனிடம் ஆசி
பெற்ற  சீடர்கள்
ஆலிம் வேடமிட்டு
அலைந்து திரிவார்கள்!
நஞ்சை அமுதமென்று
நயந்து சொல்வார்கள் !
அவர்களின்
 பேச்சு மகுடிக்குப்
பின்னால் போகாமல்
நேர்வழி ஒன்றிலேயே
நிலைத்து வாழுங்கள் !
ஈமான் தாரிகளே !
என்னை வரவேற்க
இதயத்தை
 விரித்து வைத்திருக்கும்
உதய நிலா நாயகத்தின்
உம்மத்துக்களே !
என்னை உங்கள்
நல்லமல்களால்
கவுரவப் படுத்துங்கள் !

News

Read Previous

பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய சுதந்திர போர்

Read Next

ஆசை — வித்யாசாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *