ஆசை — வித்யாசாகர்

Vinkmag ad

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 12 – ஆசை) வித்யாசாகர்

vidhyasagar1976@gmail.com

 

சை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் வர்ணத்தைக் காணும் மனசு ஆசைக்குள் தான் அடங்கிக்கிடக்கிறது. நடந்தவனை ஓடவைத்ததும், உடம்பில் இலை கட்டி அலைந்தோரை கோர்ட் சூட்டிற்கு மாற்றியதும் ஆசைதான்.

ஆசையில்லையேல் அசைவிலொரு அழகிருக்காது. வாழ்வில் ரசனை கூடியிருக்காது. வெற்றியின் நெருப்பென்று ஒன்று மூளாமலேப் போயிருக்கும். வாழ்பவரை, வெறுமனே மூச்சு விட்டுக்கொண்டு தின்று உறங்கித் திரிந்தோரை வானத்திற்கும் பூமிற்குமாய் குதிக்கவைத்தது ஆசைதான். நினைப்பவனால் நகரமுடிகிறது எனில், முயற்சிப்பாவனால் பத்தடிக்கு மேல் தாண்டமுடியுமெனில்; ஆசைபட்டவனால்தான் முதலிடத்தை அடையமுடிகிறது.

ஆசையில்லையேல் வாழ்வில் வண்ணமேயில்லை, வெள்ளைத்தோலுக்கு வண்ண ஆடை மாட்டியதும், கருப்பு இருட்டிற்கு மிண்ணும் விளக்கை ஏற்றியதும் ஆசைதான். மனிதரை ஞானியாக்கவும், ஞானியைத் தேடி மனிதர் அலையவும் மனதிற்குள் தீ மூட்டுவது ஆசையொன்றே.

காதல் அரும்பியது, வாழ்வின் காட்சிகள் மாறியது, வருடத்திற்கு இத்தனை நாளென கண்டுபிடித்தது வரை அத்தனைக்குள்ளும் ஆசையின் ஒரு துளி தீயேனும் இல்லாமலில்லை. இரவுபகல் மாறி மாறி வருவதைப்போல் ஆசை அதுவாக மனதில் ஊறிக்கொண்டேயுள்ளது. அது நினைப்பதையெல்லாம் ஆசை நடத்திக் கொண்டேயுள்ளது.

ஆசையில்லாதவரை உலகம் ஒரு பென்சில் புள்ளிபோலெண்ணி அலைத்துவிடுகிறது. கைக்குட்டை மடிப்புபோல வாழ்க்கை மடிக்க மடிக்க இரண்டாகும் நிலையை ஆசையற்றோர் அறிவதேயில்லை. வீசும் காற்றைப் பிடித்து வீட்டில் சில்லென்று அடைக்கவும், பாயும் நதியை முடக்கி தடம் மாற்றி ஓடவிடவும் மனிதனுக்கு ஆசையே முதல் விதையாகிறது

இனிப்பென்றும் கசப்பென்றும் அறிய முடிந்த மனிதனுக்கு அதை எழுதிவைக்க ஆசை வேண்டும். அடியென்றும் மேலென்றும் அறிந்த மனிதன் அதைத் தொட்டுப்பார்க்க ஆசை வேண்டும். இருளென்றும் வெளிச்சமென்றும் சுழலும் பூமியை எதுவென்று அறிய ஆசைய வேண்டும்.

ஆசையில்லையேல் ரசமில்லை. துன்பாம் கொண்ட மனிதனை இன்பம் நோக்கி நகர்த்தும் சக்தி ஆசைக்கேயுண்டு. காடுகளை வீடுகளாக மாற்றியதும் வீட்டிற்குள் வெற்றியின் விதைகளைத் தூவியதும் ஆசையொன்றே.

ஆனால் அந்த ஆசைக்கு ஒரு அளவு வேண்டியுள்ளது.

பஞ்சில் எரியும் நெருப்பை இடம் நிறுத்தி வைக்காவிடில் எங்கும் பரவிப்போகும் அபாயம் ஆசைக்குள் உண்டு. எரியும் விளக்கை வீட்டிற்குள் வைப்பதும் கூரையின் மேல் எறிவதும் செய்பவரைப் பொருத்தது எனில் ஆசை நம்மை ஆக்குவதும் அழிப்பதும்கூட நாமதை ஆள்வதைப் பொருத்தேயுள்ளது.

ஆசை ஒரு தீ, பெருந்தீ. அதைக் கொளுத்திவிட்டால் அணைக்கும் ஆயுதம் போதுமெனும் மனசென்று நம்புங்கள். ஆசை வேண்டும் தான், ஆனால் ஆசையோடு ஒரு அளவும் வேண்டும். ஆசை பலாப்பழம் மாதிரி முள்ளும் இருக்கும் பிரித்துண்டால் இனிக்கவும் செய்யும். இனிப்பதை தின்றோமா அல்லது முள்ளின்மேல் விழுந்தோமா என்பது அதைப் பயன்படுத்துபவர் கையிலுண்டு.

புத்தர் என்ன சாதாரண ஆசையினைக் கொண்டவரா ? மகா ஞானத்தையடைய மரத்தடியில் காத்திருந்தவர். மனிதரின் வலியைக் கண்டு வாழ்வைத் துறந்தாலும், சாபம் கொண்டோர் படும் அவதியை மாற்ற ஞானம்கொள்ளும் ஆசையைக் கொண்டார் புத்தர். ஆனால் ஆசை கேட்டதைக் கொடுக்கும், தட்டுமிடத்தைத் திறக்குமென்பதால்தான் ஆசையை ஒழி என்றார். காற்றில் பறக்கவும் காடுகளை எரிக்கவும் முடிந்தவன் மனிதன் என்றறிந்ததால்தான் ஆசையை அடக்கு என்றார்.

“ஆசையே துன்பத்திற்குக் காரணம், ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம், மனம் சொல் செயல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும், எப்போதும் உண்மையே பேசவேண்டும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும், இவையே புத்தரின் போதனைகளாவன என்று மனப்பாடம் செய்தோமே யொழிய எத்தனைப் பேர் அதன்படி வாழ்ந்து பார்த்திருப்போம். வாழ்க்கையின் அணுகுமுறையை, நகர்தலை, வாழ்தலை இதைவிட அளவிட்டுச் சொல்லவேண்டிய அவசியமற்ற ஒரு நிலையை இந்தப் புத்தரின் போதனைகள் அடைந்துவிடுகிறது. அனால் தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கத் தெரிந்த நமக்கு புத்தர் கூட ஆசைக்கு எதிரியானது தான் மிச்சம்.

முதலில் அவர் சொன்ன மற்ற விசயங்களையெல்லாம் நாம் கடைபிடிக்கவேண்டும், அது முடியுமெனில் ஆசையை ஒழிப்பது பற்றி ஆசைப்படவேண்டும். வாழ்வதை இத்தனை எளிதாகச்சொன்ன மகான் ஆசையை ஒழி என்றால் எதற்குச் சொல்வாரென்று யோசிக்க வேண்டாமா?

ஆசையொரு பெருந்தீயில்லையா (?) அது மூள மூள மூளுமில்லையா? எரிய எரிய எரியுமில்லையா ? போக போக அழிக்குமில்லையா ? எனவே அதை அடக்கு என்றார். அழி என்பதன் அர்த்தம் நிறுத்து என்பது. நிறுத்து என்றதன் பொருள் போதுமென்பது. போதுமென்று நின்றால் அங்கே வேண்டுமென்று ஆசை வராது. வேண்டுமெனும் தேவை தீர்ந்தால் அங்கே ஈதல் எனும் தர்மம் பிறக்கும். ஈதல் எளிதாகிவிடின் சுயம் தானாக அழியும். சுயம் அகன்ற வெற்றிடம் ஞானத்தின் கொள்ளிடமில்லையா?

ஆக புத்தர் சொன்னது ஆசையை முற்றிலும் ஒழிப்பது பற்றியல்ல. அது முற்றிலும் ஒழிவதுமல்ல. ஆசையை அடக்குதல் வேண்டும். ஆசையை அணுக வேண்டும். கோபத்தைப் போல பொறாமையைப் போல ஆசையுமொரு உள்ளத்தில் எரியும் நெருப்பு. அதை ஆளத் தெரிந்தவர் ஆசையை தீபமாக்கிக் கொள்கிறார். வீடும் வாழ்க்கையும் ஆசையினால் வெளிச்சமாகிவிகிறது. சிலரதை நெருப்பாக மட்டுமே மனதிற்குள் கொளுத்திப் போடுகிறார், அது அவரையும் வீட்டையும் ஊரையும் இந்த உலகத்தையுமே கூட சேர்த்தெரிக்கிறது.

எனவே புத்தர் சொன்ன ஆசையை ஒழிப்பது என்பது நிர்வாணமாய் திரிவதல்ல, ஒரு சட்டையோடு நின்றுப் போவது. இரண்டு சட்டை கிடைத்தபின் பிறர் நிர்வாணம் பற்றியும் எண்ணம் கொள்வது. பத்து சட்டை பேராசை. நூறு சட்டை கொடிய ஆசை, எனில், ஒரு சட்டை வாழ்தலின் தேவை போல் ஆசையும் ஒரு வாழ்வை வெளிச்சமாக்கும் திரிநெருப்பென்றே உணர்வோம். ஆசையை அளவுபடுத்துவதை நாம் நமது வீட்டிலிருந்து துவங்குவோம். அதிலும் நல்லது நல்லதை’ நமக்கான மாற்றத்தை’ நம்மிடமிருந்தே துவங்குவோம்.

எதையும் முதலில் தன்னிடமிருந்தே துவங்கவேண்டியுள்ளது. வீட்டிற்கு அசையும் மனசு அண்டை வீட்டாருக்கும் அசைகிறது. செய் செய் என்பதை விட செய்து காண்பிப்பது உத்தமம். வாழ் வாழ் என்பதை விட வாழ்ந்துக் காண்பிப்பவனே சாதனையாளன்.

எனக்கு ஒரு கையளவு சோறு போதுமெனில் ஒரு சட்டியை மறைத்துவைத்துக் கொள்பவருக்கே புத்தர் ஆசையை அறு என்றார். அவருக்குத் தெரியும் ஆசை மனிதனை செய்தது. மனிதனைச் செய்வது ஆசைதான் என்று அவருக்குத் தெரியும். ஆசை சேர்ந்த கலவைதான் மனிதன் என்று தெரியும். அதனால்தான் ஆசையை அறுக்கச் சொன்னார். அறுக்கச்சொன்னால் தான் குறைத்தாவது கொள்வான் மனிதன் என்று நம்மைக் காலக்கண்ணாடியில் பார்த்தவர் புத்தர்.

நாமும் அவரை தாண்டி எங்கே போக? ஆசையை அறுங்கள். தனக்குப் போதுமான வரை, தான் வெல்லும்வரை, தன்னோடுள்ளவர் வெல்லும் வரை, அருகாமை மனிதர் அமைதியோடு வாழும்வரைக்கும் போதுமானது போக மீதமுள்ள ஆசையை அறுத்து மனதுள் அடக்கிக்கொள்ளுங்கள். ஆசையை நிறுத்தாதீர்கள். ஆசை வேண்டும். நிற்பதெனில் ஆசையை விட்டு விடலாம். நடப்பதெனில் ஆசை வேண்டும், பறப்பதெனில் ஆசை வேண்டும், வாழ்வது அனைவருக்கும் வசப்பட வேண்டுமெனில் அதற்கென ஆசைப் படுங்கள்.

பசியை அறிந்திருக்கும் அளவு உணவு, உணவு நம்மை எரிக்காத எல்லைக்குப் பணம், பணம் பிறருக்கும் உதவும் வகையில் சொத்து, சொத்து நாமில்லாதபோதும் நம்மொடுள்ளவரை காக்கும்பொருட்டு கல்வி, கல்வி பிறரின் சுதந்திரத்தைப் பிடுங்காதவாறு தொழில், தொழில் அடிமைத்தனத்தை அகற்றி அவரவர் திறமையால் அவரவரை முன்னேற்றும் கண்ணியத்தை பெறுமளவிற்கு ஆசையென ஆசைக்கு ஒரு அளவீடு வேண்டும்.

ஆசை நமக்கென்று இருக்குமெனில் அது நம்மையெரிக்கும் தீயாகவேயிருக்கும், அதுவே பிறருக்கென்றும் உள்ளேப் பூக்குமெனில் அது தீபமாகவும் ஒளிரும். அப்படி பிறரின் நன்மைக்கென ஒளிரும் தீபத்தை ஏந்தித் திரியுங்கள் உறவுகளே. எங்கும் தீப ஒளி புத்தரின் ஞானமெனப் பரவட்டும். ஞாலமெலாம் சுயநல நெருப்பணைந்து பிறர்நல வெளிச்சம் நிறையட்டும். வேகுமொரு நெல்லில் பாதியேனும் பிறருக்காகவும் வேகட்டும். போகுமொவ்வொரு உயிரும் இன்னொரு வாழும் உயிருக்கான எருமூட்டியேப் போகட்டும்..

சுற்றும் பூமிபோல, கொட்டும் மழைபோல, வீசும் காற்றுபோல, ஒளிரும் கதிர்போல, அண்டத்தைக் காத்துநிற்கும் வானத்தைப்போல அனைத்திற்குமாய் நாமும் வாழ்வோம். நமக்கான ஆசை நம்மோடுள்ளவருக்குள் நன்மையை பூப்பிக்கட்டும். நன்னிலமெங்கும் வழும் உயிர்கள் நலமோடு வாழட்டும். வாழ்க்கை வாழுவது இனிது; அதை வாழும்போதே மனிதர் உணர பொதுநல ஆசையைக் கொள்வோம். சுயநல ஆசையை யொழிப்போம்..

காலம் கையளவில் நிறையும் பொருளெனில், அதை பிறருக்காகவும் நிறைப்போம்.. கலங்கமற வாழ்வோம்..

வாழ்க வையகம், வளரட்டும் நல்லாசைகளின் பெருந்தீ..
——————————————————————————————————————-
வித்யாசாகர்

News

Read Previous

ரமழான் பேசுகிறது !

Read Next

பயனுள்ள இணையதள முகவரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *