ரத்தம் வற்றிப்போகும் நிலம்

Vinkmag ad
  • ரத்தம் வற்றிப்போகும் நிலம் – உமா மோகன்

இரவின் நித்ய அமைதியைக் கிழித்தபடி

நீங்கள் விரைவீர்கள் அந்தப்பாதையில்

உங்கள் தாகத்திற்காக ,பசிக்காக

பத்தடிக்கு ஒரு கடைக்கொத்து வளர்ந்திருக்கும்

கும்பகோணம் டிகிரி காப்பி பலகைகள்

வழிமறித்துக் கொண்டேயிருக்கும்

பரோட்டாக்களுக்கு ஊற்றும் எண்ணெய் தெறித்த

தரையடியில் சீறும் பெருமூச்சு கேட்காதபடி காக்கும்

வாகனங்களின் ஹாரன் ஒலி

உங்கள் வாகன நலனுக்காக

பள்ளியைக் கைவிட்ட சிறுவர்கள்

திருப்புளிகளோடும் எண்ணைப் பிசுக்கேறிய ஆடைகளோடும்

குத்துக்காலிட்டிருக்கும் குருவிடம்

உதைபட்டுக் கொண்டிருப்பார்கள்

துண்டுமண்ணை நம்பிப் பிழைத்த

அவர்களது அப்பன்மார் அதோ

ஆரியபவன் வாசலில்

உங்கள் வாகனத்தை நிறுத்த வண்ணக்கொடி நீட்டி

அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்

பால்யத்தின் திருவிழாவில் விசில் ஊதிய

அனுபவம் ஐந்தோ பத்தோ பெற்றுத் தருவது

அமோகம்

அலுமினியக் குண்டான்களோடு 

குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு 

நகரத்தின் சாக்கடையோரங்களைத்

தேடிக் கிளம்பிவிட்ட உறவுகளை  நினைத்தபடி 

மல்லி மல்லி என்றோ

கொய்யாப்பழம் சப்போட்டா மாங்காய் என்றோ

உங்கள் பயணங்களில்

எல்லாம் கிடைக்கச் செய்யவென்றே

தங்கிவிட்ட பெண்டிர் வாய் ஜாலம் பற்றி

பெரிய அலுப்பு உங்களுக்கு

ரத்தம்வற்றிப்போன அந்த நிலம் தன் பழமை நினைத்து

நெல் கரும்பு வாழை மா புளி இஞ்சி மஞ்சள்

என்றெல்லாம் கனவு கண்டபடி சமாதிநிலையில் கிடக்கும்

சாலையோர வணிகத்துக்குத் துணை செய்ய!

நம்ப முடியாத விலையில் 

என்றொரு ஆச்சர்யக்குறியோடு

உள்நிலத்துக்கு உலைவைத்த பலகைகள் பார்த்தபடி

வந்துவிட்டது வளர்ச்சி என்றபடி

எட்டு பத்து பதினாறு

வழிப்பாதைகளால் கல்லா நிரப்பியவர்கள்

கட்டிய கல்லறைகளின்

கதையறியாது

ஒன் வே, ரிடர்ன் என்று சுங்கம் கட்டிக்கொண்டு

அதன் மேல் ஓடும் உங்கள் வாகனங்கள்.

***********

News

Read Previous

பிளாஸ்டிக் தடை பலன் அளிக்க என்ன செய்ய வேண்டும்?

Read Next

கதாநாயகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *