பிளாஸ்டிக் தடை பலன் அளிக்க என்ன செய்ய வேண்டும்?

Vinkmag ad
பிளாஸ்டிக் தடை பலன் அளிக்க என்ன செய்ய வேண்டும்? 
பேராசிரியர் கே. ராஜு

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பாடினார் பாரதியார். எங்கும் பிளாஸ்டிக் தடை என்பதே இன்றைய பேச்சாக மாறிவிட்டிருக்கிறது. இன்று தமிழகமும் மகாராட்டிரமும் மட்டுமல்ல, 18 மாநிலங்கள் ஏதோ ஒரு வகையான பிளாஸ்டிக் தடைச் சட்டங்களைப் பிறப்பித்திருக்கின்றன. நமது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் நிரம்பி வழியும் பிளாஸ்டிக் பொருட்களைப் பார்த்தால் தடைச் சட்டங்கள் எல்லாம் எப்படி நிறைவேறப்போகின்றன என்ற மலைப்புதான் எழுகிறது.

பிளாஸ்டிக்கிற்கு எதிரான போர் இந்தியாவில் 1999-ம் ஆண்டே தொடங்கிவிட்டது. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளை மத்திய அரசு அப்போது அறிவித்தது. குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக்கைப் பிரிப்பது, கையாள்வது, மறுசுழற்சி, பயன்பாட்டைக் குறைப்பது ஆகிய அம்சங்களில் பிளாஸ்டிக் தயாரிப்போர், உபயோகிப்போர், உள்ளாட்சி அமைப்புகள் மீதான பொறுப்பை 2016-ம் ஆண்டில் மாற்றப்பட்ட விதிகள் வலியுறுத்தின.
ஆனால் இந்த விதிகள் ஏன் அமுலுக்கு வரவில்லை? பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக ஏதாவது தடை வரும்போதெல்லாம் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி விதிகள் நீர்த்துப் போகும்படி செய்வதில் வெற்றி பெற்று விடுவார்கள். உதாரணமாக, மகாராட்டிர அரசு தடை பிறப்பித்த ஒரு வாரத்திற்குள் ஒரு முறை பயன்படுத்திக் கழிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமுல்படுத்தும் கால அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.. விநாயகர் சதுர்த்தியின்போது அமைக்கப்படும் பந்தல்களை அலங்கரிக்கப் பயன்படும் தெர்மோகோல்களுக்கு விதிவிலக்கு கொடுத்தாயிற்று.. மீன்களை வைத்துப் பாதுகாக்கும் பெட்டிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.. இன்னும் மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வைக்கும் பெட்டிகள், திடக்கழிவுகள் அடங்கிய பெட்டிகள், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பெட்டிகள் என விதிவிலக்குகள் தொடர இருக்கின்றன. அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையவழி விற்பனையாளர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, கழிவுகளை அவை சேகரிக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தொடர அனுமதி அளிப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. அரசா, பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளா என்ற கேள்வி எழும்போது யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி சிறு பிள்ளைகளுக்கானது.
இந்தியர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட நுகர்வு வருடத்திற்கு 11 கிலோகிராம், அமெரிக்கர்களின் தனிப்பட்ட நுகர்வு வருடத்திற்கு 100 கிலோகிராம் என்ற புள்ளிவிவரம் முழு உண்மையையும் சொல்லவில்லை. மொத்தமாகப் பார்க்கையில், பிளாஸ்டிக்கை உலகிலேயே மிக அதிகமாக உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஒரு நாளில் 26,000 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா உருவாக்குவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. ஆனால் உற்பத்தியாகும் பிளாஸ்டிக்குடன் இந்த விவரம் பொருந்திவரவில்லை. 2017-ல் வெளியான எஃப்.ஐ.சி.சி.ஐ. அறிக்கையின்படி  இந்தியாவின் பிளாஸ்டிக் உற்பத்தி 2020-க்குள் ஓர் ஆண்டிற்கு 20 மில்லியன் டன்களைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டிற்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. 30,000-க்கும் அதிகமாக தயாரிப்பு ஆலைகள் உள்ளன. 11 லட்சம் வேலைவாய்ப்புகளை இத்தொழில் உருவாக்குகிறது. பொருளாதாரரீதியாக இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தொழிலில் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்விளைவு இருப்பது இயல்புதான்.
பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைப்பதிலும், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்களை பொறுப்புடன் செயல்பட வைப்பதிலும், மாற்று வழிகளைத் தேடுவதிலும் அரசியல் உறுதி மிகமிக அடிப்படையானது. பொட்டலம் அல்லது பெட்டி தயாரிப்பில் உலகின் மிகச் சிறந்த இயற்கையான  பொருளான சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு இந்தியா. ஆனால் விலை மலிவான பிளாஸ்டிக்கும் அதற்கு அரசு கொடுத்த ஆதரவும் சேர்ந்து சணல் தொழிலுக்கு சமாதி கட்டிவிட்டன. பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளைத் தேடும்போது சணல், துணி, பேப்பர், கண்ணாடி, உலோகம், பாக்கு மட்டை, மூங்கில், பனை போன்ற பல்வேறு பொருட்களைப் பற்றி நாம் பரிசீலித்தாக வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பிளாஸ்டிக்கிற்கு எதிராக சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும். சிக்கிம் நம்மைவிட மிகச் சிறிய நாடுதான். ஆனால் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் நமக்கு வழிகாட்டுகிறது. மிகப் பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் கொள்கை முடிவுகளும் அந்த நாட்டில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன. இந்த விஷயத்தில் மிக விரைவில் இந்தியா சிக்கிமாக மாறாவிடில், வால்-ஈ படத்தில் வருவதுபோல, மனிதர்கள் வாழத் தகுதியில்லாத டிஸ்டோப்பியன் பூமியை நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

(உதவிய கட்டுரை ; 2018 ஜூலை 1 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் திரு.ராகவன் ஸ்ரீனிவாசன் எழுதிய கட்டுரை).

News

Read Previous

வாழ்த்துவம் யாமே வாழிய வையகம்!!

Read Next

ரத்தம் வற்றிப்போகும் நிலம்

Leave a Reply

Your email address will not be published.