மெளனமாய் இருக்கின்றேன் !

Vinkmag ad

மெளனமாய் இருக்கின்றேன் !
( எம். ஜெய்ராமசர்மா … மெல்பேண் )

இலைகொடுப்பேன் காய்கொடுப்பேன்
இனிமையொடு கனிகொடுப்பேன்
எல்லோர்க்கும் உதவுவதே
என்னோக்காய் கொண்டுவிட்டேன்

மங்கலங்கள் நடந்தாலும்
அமங்கலங்கள் நடந்தாலும்
தங்குதடை ஏதுமின்றி
தொங்கிநிற்கும் என்னிலையே

பொங்கல்பொங்கும் பானைதனை
புதுப்பொலிவு ஆக்குதற்கு
மங்கலமாய் என்னிலையே
தொங்கிநிற்கும் பானையிலே

என்கனியை உண்பதற்கு
ஏக்கமுடன் காத்திருப்பர்
இனிப்பாக இருந்தவர்க்கு
எப்போதும் சுவைகொடுப்பேன்

குழந்தைகளும் சுவைப்பார்கள்
குமரர்களும் சுவைப்பார்கள்
அரசர்முதல் ஆண்டிவரை
அனைவருமே சுவைத்திடுவார்

மல்கோவா எனவழைப்பார்
மனமெல்லாம் விருப்புடனே
சேலத்தின் பெயர்சேர்த்தும்
சிறப்புடனே அழைத்திடுவார்

ஈழத்தில் இருப்பவர்கள்
என்கனிக்குப் பேர்கொடுப்பர்
எத்தனைபேர் பெற்றிடினும்
இனிப்பேயென் நிலைப்பாகும்

முக்கனியில் என்கனியே
முன்னிற்கும் கனியாகும்
அக்கனிகள் அத்தனையும்
அபிஷேகப்  பொருளாகும்

நல்லதொரு நாடகத்தை
நாரதரும் நடத்துதற்கு
நன்றாக உதவியதே
நான்கொடுத்த கனியன்றோ

நான்கொடுத்த கனிதானே
நாதன்மகன் மலையேற
நற்கதையாய் அமைந்தனை
நாடெல்லாம் அறிந்ததன்றோ

வேண்டும்வரம் கிடைப்பதற்கு
விநாயகரை வழிபடுவோர்
விருப்பமுடன் கொடுப்பதும்
விதம்விதமாய் என்கனியே

ஓமம் வளர்ப்பதற்கு
உடன்விறகாய் ஆகிடுவேன்
உட்கார்ந்து இளைப்பாற
உதவுவதும் என்னியல்பே

உயிரோடு இருக்கும்வரை
உதவிடுவேன் யாவர்க்கும்
உயிர்விட்டுப் போய்விடினும்
உதவிடுவேன் விறகாய்நான்

காய்கொடுப்பேன் கனிகொடுப்பேன்
கடைசிவரை உதவிடுவேன்
கல்லெறியும் எனக்குவிழும்
கண்களைநான் மூடிநிற்பேன்

என்மீது கல்லெறிவார்
என்றுமே விருப்புடையார்
என்றுநான் எண்ணியெண்ணி
இன்னுமே உதவுகின்றேன்

மண்மீது உள்ளவர்கள்
மனமெனக்குப் புரிந்தாலும்
மாமரமாய் இருப்பதனால்
மெளனமாய் இருக்கின்றேன் !

News

Read Previous

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Read Next

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மதுரை சொற்பொழிவு

Leave a Reply

Your email address will not be published.