பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மதுரை சொற்பொழிவு

Vinkmag ad

14-1-1962
இடம் – மதுரை
நோக்கம் – தேர்தல் பிரச்சாரம்
சிறப்புரை – தேவர் திருமகன் பசு்ம்பொன் திரு.உ. முத்துராமலிங்கம் அவர்கள்.

அன்பிற்குரிய மகா ஜனங்களே!
நீண்ட நாட்களாகிவிட்டன. அடியேன், மனிதத் தெய்வங்களாகிய உங்களின்
ஒருமிப்பு சக்தியின் மத்தியில் நின்று பேசி!
1959இல் ஆண்டவனை நம்பி மதித்து இயங்குகிற நான் ஆண்டவனின் பிரதி
பிம்பங்களான உங்களைச் சந்தித்தேன். அன்றும் இதே போல் லட்சம் லட்சமாகக்
கூடினீர்கள். பூரித்தீர்கள். ஆரவாரித்தீர்கள்!. இன்றும் அதே ஆர்வப்
பெருக்கோடு, நல்ல எதிர்காலத்தைக் காணும் ஆசையோடு லட்டம் லட்சமாய்க் கூடி
இருக்கிறிரீகள்.
இம்மாதிரி மனிதத் தெய்வங்களின் ஆர்வத்தையும், அபிலாஷைகளையும் இயன்றவரை
தீர்த்து வைப்பதற்கென்றே என்னை அர்ப்பணித்துக் கொண்டவன் நான்.
எப்பொழுதுமே எனக்கு மனித தெய்வங்களின் ஆதரவு எந்த நிலையிலும் குவிந்து
நிற்கும் என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான்!
அன்று – 1959இல் உங்களைச் சந்தித்தபோது நான், நம்மால் உணவு கொடுத்து, உடை
கொடுத்து உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக்
குற்றம் சாட்டப்பட்டு, அதை நீதி ஏற்காமல் விடுவித்து, மனிதத்
தெய்வங்களின் புனிதமான தொண்டன் என்ற அந்தஸ்தோடு அடியேன் உங்களைச்
சந்தித்தேன். அதன் பிறகு நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் உங்களை நான்
மட்டுமல்ல, ராஜாஜி அவர்களும் சேர்ந்து சந்திக்கிறோம். இது ஒரு சுபசகுனம்!
என்னளவில் எனது சக்தியைக் கடந்தும் கூடப் பாடுபட்டு எந்தக் காங்கிரசை
வளர்த்தேனோ, அதே காங்கிரஸ் என்மீது கொலைக் குற்றம் சாட்டிற்று. அதை
ஸ்தாபிப்பதற்காக முறை மீறிய செயல்களையெல்லாம் செய்து பார்த்தது. ஆனால்
அடியேனுக்கு அதில் ஆத்திரமெதுவுமில்லை.
ஆண்டவனை முழுக்க முழுக்க நம்புகிற நான், என்னைச் சூழும் கேடுகளையும்
ஆண்டவனிடமே முறையிட்டு விட்டுச் சும்மா இருந்தேன். அவர்கள் எவ்வளவோ
முயன்றார்கள். உண்மைகளைப் பச்சை பச்சையாக வெளியிட்டு மக்களுக்கு சாதகம்
புரிகிற ஒரே குற்றத்தைச் செய்கிற அடியேன், ஆளும் கூட்டத்தாருக்கு
வேண்டியவனாக இருக்க முடியாதென்பது எனக்குத் தெரியும். அதன் மூலமும் பல
கேடுகளைச் சூழ விடுவார்கள் என்பதையும் அறிவேன்.
அதிகார ஆசையின்றி மக்களுக்கு நலன் புரிவதில் நாட்டமுள்ள எவருக்கும்
தொந்தரவுகள் தொடர்வது சகஜம். மக்களுக்காக எத்தனையோ தொல்லைகளைச்
சகித்திருக்கிறேன். சகிக்கவும் செய்வேன்.
மனிதத் திறமையை நம்பாமல், கொலை வழக்குகளில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க
நமது சர்க்கார் இப்பொழுது நாய்களை நம்புகிறது. நாய்களின் மோப்ப சக்தி
மூலம் பல கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிகிறோம். ஆனால், என்
மீது போடப்பட்ட வழக்கில் மட்டும் அந்த நாய்கள் பயன்படுத்தப்படவில்லை.
பயன்படுத்தி இருந்தால் அவை வேறு வீடுகளில் நுழைந்திருக்கும்.
ஏனெனில் மிருகங்களுக்குக் கட்சி கிடையாது. அவை எந்தக் கட்சியையும் சேரா!
எப்படியோ- என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஆனால் நீதியிடம்
ஒப்படைக்கப்பட்ட அடியேன், அதே நீதியால் குற்றமற்றவனாகி
விடுவிக்கப்பட்டேன் – வெளியே வந்தேன் – பல கூட்டங்கள் – ஓயா உழைப்பு –
சிறைவாசம் – எல்லாம் சேர்ந்து எனது உடலை நலியச் செய்து கடந்த 2, 3
வருடங்களாய் உட்கார வைத்துவிட்டது. இன்னும் உடல் நிலை சரிவரவில்லை.
என்றாலும் காலத்தின் தேவையும் தேசியத்தின் இழைப்பும் அடியேனை வெளியே
கொண்டு வந்துவிட்டது.
இன்று நானும் ராஜாஜி அவர்களும் கோவிலுக்கு வருவோம் என்று அங்கு
பல்லாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். அங்கு போால் குறைந்தது 2 மணி
நேரமாவது பிடிக்கும். அதுவரை இங்கே கூடியுள்ள மனிதத் தெய்வங்களைக் காக்க
வைப்பது கூடாது என்று கருதி கோயில் செல்லும் நிகழ்ச்சியை ரத்து
செய்துவிட்டு இங்கு வந்துவிட்டோம்.
தேசத்துக்காக ஏதேனு்ம் சொந்த உடைமையிலிருந்து கொடுக்க வேண்டுமே என்று
நினைத்துக் கொடுத்தவன் தான் அடியேனேயன்றித் தேசத்திடமிருந்து, செய்த
சேவைக்காக ஏதேனும் பலன் பெற்றவனல்ல. தேசத்துக்காக எவ்வளவோ உடைமைகளைக்
கொடுத்திருக்கிறேன். உழைப்பைக் கொட்டி இருக்கின்றேன்.
அதோடு நமது உழைப்பால் பெற்ற சுதந்திர சர்க்காரின் பதவி வகிக்க
விரும்புகிறவர்களுக்கு வழி விட்டு விட்டு, அவர்கள் நல்ல முறையில் ஆட்சி
செய்ய வேண்டுமென்று விரும்புகிறவன் நான்! பதவியை நான் நினைத்தவனுமல்ல,
நினைத்திருந்தால் அது என்னைப் பொறுத்தவரை மிக மிக எளிது, நீங்களும்
அறிவீர்கள்.
தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்ல நான் –
தேசத்தக்கு இயன்றதைக் கொடுத்துச் சேவையும் செய்யும் கூட்டத்தைச்
சேர்ந்தவன் நான். இதில் என்னை எதிரியாகக் கருதுகிறவர்கள்கூட மாறுபட
முடியாது. எதிரிகள் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டதில்லை. நான் எவரையும்
எதிரியாகக் கருதுபவனுமல்ல. தேசியத்துக்குக் கேடு புரிகிறவர்களைக்
கண்டிப்பேன்.
அதில் நான் எந்தக் காலத்திலும் பின்பட மாட்டேன். தவறுகளைக் கண்டிக்கிற
என்னை, யாரேனும் எதிரியாகப் பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
தேசத்திற்காக உண்மையைச் சொல்லி உழைத்து வருவதன் பயனாய்ச் சிலர் என்னை
எதிரியாகக் கருதலாம். ஆனால் அந்த எதிர்ப்பை, நான் தேசத்துக்கு எதிர்ப்பு
என்று கருதுவேனேயன்றி, என் சொந்த எதிரியாக ஒருக்காலும் கருதமாட்டேன்.
ஏனெனில் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே
தேசத்திற்கேயன்றி எனக்காக அல்ல. எனக்காக நான் எதையும் செய்து கொள்வதில்லை
என்பதில் திட்டவட்டமாகிவிட்ட எனக்கு சொந்த முறையில் யார் எதிரியாக இருக்க
முடியும்? முடியவே முடியாது.
“பலர் வாழ சிலர் தியாகம் செய்து – கஷ்டப்படுவது” புனிதமான அரசியல். இந்த
அடிப்படையில்தான் நாம் கடந்த காலத்தில் பாடுபட்டோம். ஆனால், அந்தப் புனித
அரசியலை அப்படியே மாற்றி, சிலர் வாழ, பலர் மாய வேண்டும் என்ற அநாகரிகக்
கதிக்குக் கொண்டு போய் விட்டார்கள்.
“ஒரு கிராமத்தில் முளைக் கொட்டு என்றால், இரண்டு ரூபாய் எடுத்துக்
கொண்டுபோய் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்றால் நான்கு ரூபாய்
எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு 5 ரூபாய்
செலவிட்டுப் போய் பார்த்து வருகிறீர்கள். ஆனால் தேர்தலில் ஓட்டு
போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா?”
“என் உடல்நிலை, எனது ஆர்வத்துக்கு இடமளிப்பதாக இருந்தால், நான் கிராமம்
கிராமமாக வந்து மக்களை மகிழ்விப்பதில் ஒருபோதும் பின்படமாட்டேன். எனக்கு
என்னைவிட மக்கள் முக்கியம்”

என்று பேசி மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டார் தேவர் திருமகன்.
அருப்புக்கோட்டை தேர்தலில் வழக்கம் போலத் தொகுதிக்கே செல்லாமல் மகத்தான
வெற்றி பெற்றார். நோயின் தீவிரம் அதிகமானது. வேலூரில் அறுவை சிகிச்சை
செய்தால் நோயைக் குணப்படுத்தலாம் என்று வெள்ளைக்கார மருத்துவர் சொன்னார்.
“ஆண்டவன் ஊனமில்லாத உடலைக் கொடுத்தான். அந்த உடலை அவனிடம் திருப்பிக்
கொடுக்கும்போதும் ஊனமில்லாமலேயே கொடுக்க விரும்புகிறேன்” என்றார் தேவர்
திருமகன்.
30-10-1963இல் மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட தேவர்
திருமகன் தன் வாழ்நாளெல்லாம் வணங்கிய முருகனின் திருவடியை அடைந்தார்.

மதுரை தொடங்கி பசும்பொன் கிராமம் வரை இறுதிச் சடங்கில் பங்கு கொள்ள
மக்கள் வெள்ளமெனத் திரண்டு பல லட்சம் கண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மற்றுமொறு செய்தி

இமானுவேல் கொலைவழக்கு, சிறைத்தண்டனை – தீர்ப்பு இவற்றைப் பற்றி தேவர்
திருமகனாரே “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். கங்கையே சூதகமானால்
எங்கே மூழ்குவது? மனிதன் தவறு செய்தால் அரசன் கேட்பான். அரசனே தவறு
செய்தால் ஆண்டவன்தானே கேட்க முடியும்” என்று, “எல்லாம் ஆண்டவன் செயல்”
என்ற தலைப்பில் சொற்பொழிற்றி அன்றைய அரசின் செயலைக் கண்டித்தார்.

23.1.1949 மதுரை திருவிழாக் கோலம் பூண்டிருந்த மாபெரும் மேடை…
மங்களகரமான அலங்கரிப்புகள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின்
பிறந்தநாள் விழா. சிறப்புப் பேச்சாளர் தேவர் திருமகனார். வழக்கம்போல்
தேவரின் தேனுரையைக் குடிக்க மக்கள் கூட்டம் வண்டுகளாக நிரம்பிக்
கிடந்தார்கள்.
“மக்களே… நேதாஜி சுபாஷ் பாபு விமான விபத்தில் இறந்துபட்டுப் போனார்
என்று சொல்வது பொய். நேதாஜி அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். எனக்குச்
சுபாஷ் பாபுவோடு செய்தித்தொடர்பு இருக்கிறது. விரைவில் அவர் நாட்டு
மக்கள் முன்பு வருவார்.” என்று கர்ஜித்தார்.

தேவரின் தியாக வரலாறு – முகவை மேத்தா எழுதிய நூலிலிருந்து

சுந்தரராஜன் ஜெயராமன்
கோயம்புத்தூர்

News

Read Previous

மெளனமாய் இருக்கின்றேன் !

Read Next

அதிக நேரம் நீங்கள் கணினி முன் வேலை செய்பவரா ?

Leave a Reply

Your email address will not be published.