முதுமையின் முனகல்கள்

Vinkmag ad
(பீ. எம் . கமால், கடையநல்லூர்)
நாங்கள்
அனுபவங்களைச்
சேமித்து வைத்திருக்கும்
உண்டியல்கள் !
எங்களைப் பிள்ளைகளே !
உடைத்து விடாதீர்கள் !
எங்களின் உயிர்ப்பேனா
முதுமையை மட்டுமே
உயிலாக எழுதி வைத்திருக்கும்
கசங்கிப் போன
காகிதங்கள் நாங்கள் !
அதற்காகப் பிள்ளைகளே !
எங்களை நீங்கள்
குப்பைக் கூடையில்
எறிந்து  விடாதீர்கள் !
உங்கள்
மழலை மொழிகளை
ரசித்த எங்கள்
உளறல் மொழிகளை
உதாசீனம் செய்யாதீர்கள் !
நோய் சுமக்கும்
சுமைதாங்கி நாங்கள் !
எங்களைப்
பாய் சுமக்க விட்டுவிட்டு
பதுங்கி விடாதீர்கள் !
பிள்ளைகளே!
உங்களுக்கு  நாங்கள்
நிழலாக இருந்தோம் !
எங்களுக்கு நீங்கள்
வெயிலாகி விடாதீர்கள் !
நீங்கள்தான் எங்களுக்கு
சொத்தும் சுகமுமாக
இருந்தீர்கள் !
எங்களின்
வீடுமனை வாசல்களை
விளைநிலத்தைஎல்லாம்
ஒரு
கைநாட்டில் அபகரித்துக்கொண்டு
முதியோர் இல்லத்து
மூலைகளில்  எங்களை
முடக்கி விடாதீர்கள் !
எங்கள்
பிள்ளைப் பயிர்களே !
உங்களை வளர்ப்பதற்கு
தண்ணீரை அல்ல
எங்கள்
 கண்ணீரை அல்லவா
காலமெல்லாம்
ஊற்றி வளர்த்தோம் ?
வற்றி  வறண்டுபோன
எங்கள்
கண் நீர்க் குளங்களில்
தூர்  அள்ளுவதற்குத்
துணிந்து விடாதீர்கள் !
கல்வி அஸ்திவாரம்
கட்டித் தந்துங்களை
வாழ்க்கை வீட்டில்
வசதியாய்க் குடிவைத்தோம் !
எங்களைக்
கோவில் குளக்கரையில்
பள்ளிவாசல் படித்துறையில்
கை ஏந்தச்  செய்யக்
கருதிவிட வேண்டாம் !
பாச மழைபொழிந்து
பகலெல்லாம் நோன்பிருந்து
வாச மலர்களாய்
வளர்த்தோம் உங்களை !
எங்களை
அந்நியன்  தோட்டத்தில்
அரளிப் பூவாக்கிடாதீர் !
பிள்ளைகளே ! நாங்கள்
ஆலமரமாக ஆதரித்து
நிழல் தந்தோம் !
எங்களைப்
பனைமரத்து நிழலில்
படுக்கவைத்து விடாதீர்கள் !
நாங்கள்
மெழுகுவத்திகள்!
உங்கள்
பிறந்த நாள்
கொண்டாட்டத்தில்
எங்களையும்  ஊதி
அணைத்து  விடாதீர்கள் !
எங்களுக்கு நீங்கள்
செய்வதொன்றே வேண்டுகிறோம் !
விலாசம் தந்த
எங்களின் மண்ணறை
விசாலம் பெற்றிட
வேண்டுங்கள் இறைவனை !

News

Read Previous

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

Read Next

கல்வி நல்லோர்களின் சொத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *