மழையின் தாண்டவம் !

Vinkmag ad

மழையின் தாண்டவம் !

கவிஞர். மஸ்கட் மு. பஷீர்

 

நான் மழையைப் பார்த்து

ஆவேசமாய்க் கேட்டேன்

ஏன் இப்படிப் பொழிந்து எங்களை

சின்னாபின்ன மாக்கிவிட்டாய் என்று !

 

தாகத்துக்குத் தண்ணீர் கேட்டோம்

தரணி செழிக்க

தாவரம் செழுமை கொழிக்க

வயலும் வளமும்

வண்ணமிகு சோலையும்

அணையும் ஆறும்

அளாவாய் நிரம்பி

 

குடிநீரும்

குளிக்க தண்ணீரும் பெற்று

குடியாய் வாழத்தானே

மழையே உன்னைக் கேட்டோம் !

 

நீயோ மானாவாரியாய்

பெய்தாய்…

ஏரிகள் உடைபட

ஆறுகள் அறுபட

சேரிகள் மிதந்திட

மாடிகளும் மூழ்கிட

 

பாதையே தெரியாத பரிதாபம்

திரும்பிய இடமெல்லாம்

தீவுகளாய்

 

சுற்றிலும் நீர்ப்பிரவாகம்

சொம்பில் மோந்து குடிக்கக்கூட

நந்நீரற்றுப் போன பரிதாபம் !

 

உனக்கு ஏன் இந்தக்கோபம்

மழையே உன்னால்

அமிழ்ந்ததொரு பட்டணம்

நனைந்து சிதைந்ததொரு மாநிலம்!

*

மழை சிரித்தது

வார்த்தை உதிர்த்தது…

என்னை வருணபகவான் என்கிறாய்

நான் வரத்தாமதித்தால்

என்னால்தான் வறட்சி என்கிறாய்!

 

கொஞ்சம் பெய்து சென்றால்

கஞ்சன் பொய்த்தேன் என்கிறாய்

பக்கத்து மாநிலத்தில்

நீருக்காய் கெஞ்சுகிறாய் !

 

உன்மேல் பரிதாபப்பட்டு

நான் வரப்போகிறேன்

வந்து மழையாய் கொட்டப் போகிறேன்

என்று வானிலையை ரமணன்வழி

முன்கூட்டியே சொல்லி

வந்திங்கு வாரி இறைத்தால் என்னை

வைந்து கொல்கிறாய் !

 

 

மேகமெத்தையில் கார்மேகக்

கம்பளம் விரித்து

சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தேன் !

 

வருணன் வேண்டுதலால்

வந்துனைக் குளிர்வித்தேன் !

இதில் என் தப்பேது மனிதனே !

 

 

 

நீ வழக்கமாக நான் உலாவரும்

பாதைகளில் வீடுகள்கட்டி

என்வரவைத் தடுக்கிறாய் !

 

மாடிக்கட்டிடங்களால்

வழி மறைக்கிறாய்

வழித்தடங்களில் தடுப்புப் போடுகிறாய்

என் ஆற்றின் கரைகளை

ஆக்கிரமிக்கிறாய்

அவற்றை நீ தூர்வாரி

அழகுசெய்வதுமில்லை

நீர் செல்ல அனுமதிப்பதுமில்லை !

 

அணைகளைக் கட்டி எனக்குத்

தங்குமிடம் தருவதுமில்லை

ஆனந்தமாய் நான் பயணிக்க

புதிய ஆறுகள் தருவதுமில்லை !

 

ஆங்காங்கே ஓய்வெடுக்க

ஏரிகளை வெட்டுவதில்லை

சிறிதான குளங்களையும்

கட்டுவதுமில்லை !

 

ஒன்றையுமே செய்யாது

வருணனே வா! என்கிறாய்

வரிசையாய் யாகம் செய்கிறாய்

ஆடுமாடு பலிகளும்

அக்கினியாகமும் செய்து எனை

அழைக்கிறாய் !

 

ஆர்வத்துடன் அவரசரமாய் வந்து

பெய்தால் இப்போது

அழுது புலம்புகிறாய் !

 

நான் இனியும் வருவேன்…

இடைவெளி விட்டு விட்டு வருவேன்

வானிலை  நிலையம்

மொழி சொல்ல வருவேன் !

 

 

என் பாதைகளை நீ விசாலமாக்கு

எனக்கு மட்டும்

ஏரிகளை இருப்பிடமாக்கு

 

ஆறுகளை என் அணிகலனாக்கு

குளங்களை எனக்கு

கொள்ளும் இடமாக்கு

அணைகளைக் கட்டி  எனக்கு

துணையாக்கி அழகுசெய்

 

என் வழித்தடங்களில்

ஆக்கிரமிப்புகளை அகற்று

நான் ஓடியாடிச் செல்லும்

பாதைகளில் உயர்ந்துள்ள

கட்டிடங்கள் அகற்று

 

என் நிலத்தில்

பட்டா போடுவதை விட்டுவிடு

என்பாதையில்

தடைபடாத வழித் தடம் தா !

 

நீ கேட்டாலும்

கேட்காது விட்டாலும்

நான் மழையாய் வருவேன்

உன் தாகம்தீர்க்க துணையாய்

வருவேன் !

 

ஆவேசமாய் கட்டளையிட்டு

மழை தற்காலிகமாய்

கலைந்து சென்றது !

 

மழையின் பேச்சில் நியாயம்

இருப்பதால் என்மனமும்

அதன் வழியே இணைந்து சென்றது !

 

கவிஞர். மஸ்கட் மு. பஷீர்

muscat.basheer@gmail.com

Best Regards,

 

Basheer M

http://www.facebook.com/kavignar.basheer

http://palaipookal.blogspot.com/

http://basheermohd.blogspot.com

News

Read Previous

“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி

Read Next

தமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *