மன்னித்துக்கொள் மானுடமே..

Vinkmag ad

மன்னித்துக்கொள் மானுடமே.. (கவிதை) வித்யாசாகர்!

காலம் சில நேரம்

இப்படித்தான் தனது தலையில்
தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது..
ஆம்
காலத்தை நோவாது
வேறு யாரை நோவேன்.. ?
பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை
மனிதரின் தீமைகளே பெருகிநின்று
காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில்
நாற்றம் நாற்றமே எங்குமெனில்
நான் யாரை நோவேன்..?
யார் யாருக்கோ வரும் மரணம்
எனக்கு வந்தால் சரி
என்று வலிக்கிறது மனசு.,
எல்லாம் பொய்யிங்கே;
அன்பு பொய்
அறம் என்று கத்துவது பொய்
அழகு கூட மெய்யில்லை,
எல்லாமே
அப்படித் தெரிவதாக இருக்கிறது,
இல்லையேல்
ஒரு சிறுபிள்ளை அவர்களுக்கு
அழகாய் தெரிவாளா?
ஒரு கிழட்டிற்கு ஆசை எழுமா ?
வயதாக வயதாக
வாழாதவர்களாகவே நம்மை நாம்
அறிவதால்தான் ஆசைகளும்
உள்ளே பச்சைப் பச்சையாய்
பச்சைப் பச்சையாய் இருக்கிறது..
பிறந்தபோது மேலூரிய
கவிச்சி வாசத்தை மனம் கொண்டு
கழுவுவதேயில்லை
நம்முள் சில முற்றிய மனிதர்கள்..
அவர்களால் தான்
இந்தக் காற்றும் நமை கொல்கிறது
இந்த மழையும் நமை கொல்கிறது
வெளியே அமைதியாக நிற்கும்
மரம் செடி கொடிகளெல்லாம்
நமை அப்படி இழிவாகப் பார்க்கிறது..
நாம் தான்
நரகமென்பதைக் கேட்டுக் கேட்டு
வீடுகளுக்குள்
அமைத்துக்கொள்கிறோம்..
கொஞ்ச கொஞ்சமாய்
மாறி மாறி
மரணத்திற்கு எட்டும் வாழ்வை
மரணத்திலிருந்து துவங்குவதாகவே
அன்றன்றையப் பொழுதுகளை தரிசிக்கிறோம்..
அரசியலே சூதாகி போனப்பின்
அறிவியலே கேடாக ஆனப்பின்
ஆசைகள் பணமாகி
பணம் மருந்தாகவும்
தொழில் படிப்பாகவும்
சில்லரைகளே கோவிலையும் சிலைகளையும்
விலைபேச இடம் கொடுத்தப்பின்
மண்ணில்
மாண்பெங்கே ? மறமெங்கே ?
எல்லாம் பொய்
பொய்
உண்மைகளை விழுங்கிக்கொள்ளும்
பொய்யுலகு இது,
பொய் முளைத்து; பொருள் சேர்த்து
ஆள் கொன்று; ஆசை பெருத்து
ஒரு சமத்துவ எண்ணமே இல்லாமல்
சார்ந்து சார்ந்து சாகும் இழிபிறப்புகளாகிப்
போனோமே..
எப்போது கைநீட்டி
பிறர் உழைப்பை வாங்கத் துணிந்தோமோ
எப்போது கால்மடக்கி அமர்ந்து
பிறர் வியர்வையில் உண்ணத் துவங்கினோமோ
எப்போது அறம் மறந்து
விடியலை விலைக்குப் பெற்றோமோ
எப்போது தனக்கு தான் பெரிதானதோ
அப்போதே விலைபோய்விட்ட
மரணக் குப்பைகளாகிப் போனோம்..
நமக்கு மிச்சமிருப்பது
நேரடியாக
நம்மை நாம் வெட்டி
நம் வீட்டில் சமைக்காமல் இருப்பதொன்றே..
———————————————————————-
வித்யாசாகர்

News

Read Previous

இவன் ஒரு காந்தாரி

Read Next

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *