இவன் ஒரு காந்தாரி

Vinkmag ad
இவன் ஒரு காந்தாரி
~ ஆ.காந்திநாதன்~
லண்டனில் இருந்து புறப்பட்டுச் சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ராஜசேகர் தன் மனைவி சாருலதாவுடனும் 4வயது மகன் சரவணனுடன் மகிழ்ச்சியாக விமானம் எப்போது சென்னையைச் சென்றடையும் என்று ஆவலுடன் இருக்கையில் அமர்ந்து, சன்னல் வழியாக வான வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தான். சென்னையில் நடக்கும் திருமணத்திற்குச் சென்று கொண்டு இருந்தான். தன்னை எப்போதும் ராஜூ அண்ணா என்று அழைக்கும் அன்பு உள்ளம் கொண்ட தம்பி சங்கரின் திருமணம்.
சங்கர் அவன் உடன்பிறந்தவன் இல்லை. ஆனால், சிதம்பரத்தில் ஒரே வீட்டில் குடியிருந்தவர்கள். இன்னும் சொல்லப் போனால் சங்கருக்குச் சொந்தமான வீட்டில் ஒரு பகுதியில் தன் பெற்றோருடன் குடியிருந்தவன் ராஜசேகர். சங்கரின் பெற்றோருக்குப் பக்கம் பக்கமாக மேலும் இரண்டு வீடுகள், சிதம்பரத்தின் மேல வீதியில் இரண்டு கடைகள். இவற்றின் வாடகை வருமானம் அவர்களின் தேவைக்கு அதிகமாகவே வந்து கொண்டு இருந்தது.
ராஜசேகரின் தந்தை ஆறுமுகம் சிதம்பரத்தில் தையல்கடை வைத்திருந்தார். ராஜசேகர், அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவர்களுக்குப் போதும் என்ற அளவுக்கு வருமானம். தந்தையின் விருப்பப்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் படித்துக் கொண்டிருந்த நேரம், சங்கர் ஆறுமுக நாவலர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். நேரமும் காலமும் யாருக்காகவும் எப்போதும் காத்திருந்ததில்லை. திரும்பிப் பார்ப்பதற்குள் பலவருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. நினைவுகள் மட்டும் என்றும் மறையாமல் மனதில் நிலைத்திருக்கும்.
இப்போது தன் நினைவுகளையும் நிகழ்வுகளையும் இந்த ராஜசேகரன் தானே கூறுகிறான். . .
நான் வணிகவியல் பட்டம் முடித்து எனது தந்தையின் நண்பர் மூலம் சென்னையில் ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்து, வேலை செய்து கொண்டே சி.ஏ. படித்து வந்தேன். சி.ஏ. முடித்து நல்ல சம்பளத்தில் வேலையில் சேரும் சமயம் என் தந்தை மாரடைப்பில் காலமாகி விட்டார். இறுதிவரை தன் சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்து முடித்துவிட்டார். நான் எனது தாயை அழைத்துக் கொண்டு சென்னை வந்துவிட்டேன். சங்கர் அவன் தந்தை முத்துக்குமார், தாய் சரோஜா எங்களைக் கண்ணீருடன் அனுப்பி வைத்தனர். சங்கர் பட்டம் பெற்று ஐ.ஓ.பி வங்கியில் காசாளராக வேலைபார்த்து வந்த செய்தியைப் பிறகு அறிந்தேன்.
சென்னையில் எனது தாயின் தூரத்து உறவினரின் பெண்ணுடன் எனக்குத் திருமணம் நிச்சயமானது. வேலைப் பளு காரணமாக நேரில் செல்லமுடியாமல் எனது திருமண பத்திரிக்கையைத் தபாலில் அனுப்பி வைத்தேன். அவன் வங்கி வேலையில் பம்பாய்க்கு மாற்றலாகிச் சென்று விட்டதால் பத்திரிக்கை தாமதமாகச் சென்று  அவன் எனது திருமணத்திற்கு வர முடியாமல் போய்விட்டது, வாழ்த்து தந்திதான் வந்துசேர்ந்தது.
எனக்கு மகன் பிறந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் என் தாயாரும் காலமாகி விட்டார். எனது நிறுவனத்தின் தலைமையகம் லண்டனில் உள்ள எங்கள் கிளை அலுவலகத்தின் மேலாளராக என்னை நியமித்து அனுப்பி வைத்தது. புதுநாடு புதிய அனுபவத்துடன் வாழ்க்கை மகிழ்வாக  இரண்டு ஆண்டுகள் கடந்தன. அப்போதுதான் சங்கரின் திருமண அழைப்பு அறிவியலின் வியக்கத்தகு முன்னேற்றத்தால்  மின்னஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி வழி  வந்தது.
சென்னை விமானநிலையத்தில் விமானம் தரை இறங்கும் போது எங்கள் மூவரிடமும் இனம் புரியாத புத்துணர்ச்சி . எங்கள் மாமா வீட்டிற்குச் சென்று குளித்து உடை மாற்றி அன்று மாலை வரவேற்பிற்கும், மறுநாள் திருமணத்திலும் உற்சாகமாகக் கலந்து கொண்டோம். சங்கருடைய தாய் சரோஜா, தந்தை முத்துக்குமார், சங்கர் அனைவருக்கும் எங்களைக் கண்டதில் அளவற்ற மகிழ்ச்சி. சங்கர் தன் மனைவியை எங்களுக்கு அறிமுகப்படுத்தினான். சிதம்பரத்தில் இருந்த மூன்று  வீடுகளில் இரண்டை விற்று சென்னையில் கே.கே. நகரில் புதிய வீடு வாங்கி உள்ளதை அறிந்தேன்.  வீட்டிற்கு வரும்படி சங்கர் அழைப்பு விடுத்தான். திருமண சடங்குகள் விருந்து உபசாரங்கள் முடியட்டும், நாங்கள் லண்டன் திரும்பும் முன் வருகிறோம் என்று உறுதி கூறி வீடு திரும்பினோம்.
மாமாவின் காரை இரவல் பெற்று கே.கே. நகரில் உள்ள சங்கரின் வீட்டை அடைந்தேன். போகும் முன் நான் வருவதைக் கைப்பேசி மூலம் முன்பே தெரிவித்துவிட்டுத் தான் சென்றேன். சங்கரும் அவன் மனைவி புவனா மட்டும் தான் வீட்டில் இருந்தார்கள். புவனா அழகாக அடக்கமாக இருந்தாள் மிகவும் அன்புடன் பேசினாள், சுவாரசியமாகப் பேசிக்கொண்டு இருந்தோம். இருவரையும் தேனிலவை சாக்கிட்டு லண்டன் வரும்படி அழைப்பு விடுத்தேன்.
ராஜூஅண்ணா நானும் புவனாவும் நான்கு நாட்களுக்கு முன்புதான் இது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். புவனா படித்த காலம் முதல் லண்டன் பாரிஸ் மற்றும் சுற்றி உள்ள நாடுகளைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறாள். நேற்று தான் நாங்கள் இருவரும் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்துள்ளோம். பாஸ்போர்ட் கிடைத்தபின் வங்கியில் விடுமுறை பெற்று எப்படியும் இரண்டு மாதத்தில் வருவதாகக் கூறினான்.
புவனாவும் ஆமாம் மாமா நிச்சயம் வருவோம். அந்த நாளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றாள். நான் விசாவிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி கூறி, நாளை  லண்டன் திரும்புகிறேன் என்று  விடைபெற்றேன். நாங்கள் லண்டன் திரும்பினோம்.
நான் என் வேலையில் கவனம் செலுத்தியதால் பிறகு சங்கரிடம் பேச முடிய வில்லை. மூன்று மாதங்கள் கடந்தும் சங்கரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லாததால் நானே பேசுவது என்று தீர்மானித்தேன். திடீரென்று ஒருநாள் அவனிடம் இருந்து தொலைபேசி வந்தது. மகிழ்வுடன் பேசினேன். ராஜூ அண்ணா என் மனைவி கருவுற்று இருக்கிறாள் என்றான். நான் இதைக் கேட்டு அகம் மகிழ்ந்து வாழ்த்துக் கூறினேன். அண்ணா அவள் மிகவும் சோர்வாக இருக்கிறாள் இப்போது அவ்வளவு தூரம் பிரயாணம் செய்வது சரியில்லை என்று அவளைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவர் கூறி இருக்கிறார்.  குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதத்தில் நாங்கள் மூவரும் அவசியம் வருகிறோம் என்றான்.
ஆறுமாதம் சென்ற பின் சங்கர் கைப்பேசியில் அழைத்து தனக்கு அழகான ஆண் குழந்தை நேற்று தான் பிறந்தது. புவனாவும் குழந்தையும் நலம் என்று கூறிய செய்தி என் மனதிற்கு நிம்மதி அளித்தது. தன்மகனுக்கு ஆறு மாதம் ஆனவுடன் தன் மனைவி புவனாவுடன் வருவதாகக் கூறியிருந்தான். ஆண்டு இரண்டாகியும் வரவில்லை போன் செய்தாலும் விரைவில் வருகிறோம் அண்ணா என்று தான் கூறுகிறான்.
எனக்கு அவன் எதையோ மறைப்பதாகத் தோன்றியது அவன் சென்னையில்  கே.கே. நகரில் உள்ள வீட்டில் தான் இருப்பதாகக் கூறியிருந்தான் நேரில் சென்று வருவது என்று தீர்மானித்து என் மனைவியிடம் விவரங்களைக் கூறி விட்டு நான் மட்டும் சென்னை சென்றேன். அவர்கள் வீட்டில் நுழைந்தவுடன்  ஹாலில் சங்கரின் தந்தை முத்துக்குமார் தன்பேரன் அரவிந்தனுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தாய் சமையல் அறையில் இருந்தார். இருவரும் என்னைப் பார்த்தவுடன் வாப்பா என்ற ஒற்றை வார்த்தையைக் கூறினர்… ஆனால் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி ஏதும் இல்லை.
நான் நாற்காலியில் அமர்ந்த சிறிது நேரத்தில் சங்கர் படுக்கை அறையில் இருந்து வந்தான். என்னை ஆச்சரியத்துடன் பார்த்து எப்போது வந்திங்கண்ணே. வீட்டில் அண்ணியும் சரவணனும் நலமா என்ற விசாரிப்புடன் என் அருகில் அமர்ந்தான். புவனா எங்கே காணவில்லை என்று மனதில் கேள்வியுடன் அவனைப் பார்த்தேன். அண்ணே முதலில் டீ சாப்பிடுங்கள் அவள் அறையில் இருக்கிறாள் நாம் சென்று பார்க்கலாம் என்றான். அவள் வருவாள் என்று கூறுவதற்குப் பதில் நாம் சென்று பார்க்கலாம் என்று கூறுகிறானே என்று எனக்குத் தோன்றிய குழப்பத்துடன் அவனைப் பார்த்தேன். அவள் அறையில் நான் கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அன்று நான் கண்ட என் அன்பு தம்பியின் மனைவி இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். அருகில் ஒரு பெண் உதவியாளர் அவளுக்கு  ஸ்பூனில் உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். ஒரு கை ஒரு கால் இயங்க முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்தேன்.இருப்பினும் முகத்தின் அழகும், அன்பும், சிரிப்பும் அப்படியே இருந்தது. ஒரு கையால் வணக்கம் செய்தாள். அந்த நிலையிலும் வாங்க மாமா சாருவும் சரவணனும் நலமா என்றாள். எண் கண்கள் குளமாயின, என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் அவளால் பேச முடிந்ததைப் பார்த்து மனம் ஓரளவு அமைதி அடைந்தது.
நான் அங்கேயே அமர்ந்து சங்கரைப் பார்த்தேன். அவன் நான் வங்கிக்குச்  செல்ல வேண்டும் வாருங்கள் பேசிக் கொண்டே செல்லலாம் என்று வெளியில் அழைத்து வந்துவிட்டான். அங்குள்ள சிவன் பார்க்கில் வண்டியை நிறுத்தி விட்டு என்னை உள்ளே  அழைத்துச் சென்றான். கடந்து போன நாட்களின் நடந்த சோகக் கதையைக் கூறினான். குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல் தாக்கியதாகவும் மருத்துவர் அளித்த தவறான அதிவீரியமுள்ள மாத்திரைகளால் புவனா இந்த நிலைக்கு ஆளானதாகவும் கூறினான். பிறர் உதவி யின்றி இயங்க முடியாத நிலை. சிதம்பரத்தில் இருந்த நாங்கள் வசித்த வீட்டையும் மேல வீதியில் இருந்த கடைகளையும் விற்றுவிட்டதாகக் கூறினான். தன் மனைவி மீண்டும் பழையபடி எழுந்து நடமாட அவன் படும்பாட்டையும், செய்யும் செலவையும் கண்டு அவன் மீது பெருமதிப்பு வந்தது. நான் அவனிடம் எனக்குத் தகவல் தெரிவித்து இருந்தால் வேண்டிய பணத்தை அனுப்பியிருப்பேனே அநாவசியமாக இடங்களை விற்று விட்டாயே எனக்கேட்டேன். அண்ணே நான் அப்படிக் கேட்டிருந்தால் அது அன்பையும் உறவையும் பாதிக்கும் அதனால் அப்படிச் செய்யவில்லை என்றான்.
இப்போதும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் விரைவில் புவனா நலம் பெறுவாள். நாங்கள் அவசியம் லண்டன் வருவோம். இதை நான் கூறவில்லை. ஆனால் புவனா நம்புகிறாள் என்றான். நம்பிக்கை தான் வாழ்க்கை ஏதேனும் அவசியம் என்றால் உடன் போன் செய்யும்படி கூறி விடைபெற்று லண்டன் திரும்பினேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து அவன் தந்தையிடம் இருந்து எனக்குப் போன் வந்தது சங்கரின் தாயாருக்கு வீட்டில் வேலை செய்ய முடியவில்லை. சங்கரும் வேறு திருமணம் செய்துகொள்ள மறுக்கிறான் அவன் மனைவியும் புவனா வீட்டாரும் சம்மதித்தும் அவன் மறு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். புவனாவை அவள் வீட்டார் தங்களுடன் அனுப்பிவிடும்படி கூறியும் அதற்கும் மறுக்கிறான். நீ கூறினால் அவன் கேட்பான் அவனிடம் தயவுசெய்து பேசு என்று கூறி போனை வைத்துவிட்டார்.
அவரின் வற்புறுத்தலால் நான் சங்கருக்குப் போன் செய்து அவன் விருப்பத்தைக் கேட்டேன். அண்ணா, அவர்கள் கூறியபடி நான் செய்தால் அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். நான் அவள் மீது கொண்டுள்ள அன்பும் பாசமும் பொய்யாகிவிடும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி போனை வைத்துவிட்டான்.
ஆண்டுகள் பல கடந்தன. சங்கரின் தாய் தந்தை இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர். தற்போது சங்கர் மகன் பொறியியல் கல்வி படித்து முடித்து வேலை பார்த்து வருகிறான். சங்கரும் பேங்க் வேலையில் ஓய்வுபெற்று பென்ஷன் பெற்று வந்தான். அவன் மனைவி இப்போது ஓரளவு உடல் நலம் தேறி தானே எழுந்து சிறிது தூரம் நடப்பதாகக் கூறினான். இப்போதும் அவர்கள் பேச்சில் லண்டன் வரும் நம்பிக்கை இருந்தது. இங்கு என் மகனும் பொறியியல் படித்து நல்ல நிறுவனத்தில் வேலையில் இருந்தான். அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய கடமை  மட்டும் தான் எனக்கும் எனது மனைவிக்கும் இருந்தது.
இச்சமயத்தில் தான் என் மகன் ஒரு ஆலோசனை கூறினான். சங்கரின் மகனுக்குத் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று கூறி மின்னஞ்சல் மூலம் அவன் கல்வித்தகுதி வேலை அனுபவம் ஆகியவற்றைப் பெற்று அவனுக்கு வேலை வாங்கினோம். வேலைக்கான உத்தரவு விசா மற்றும் டிக்கட் ஆகியவற்றை அனுப்பி வைத்தோம். சங்கரிடம் இருந்து போன் வந்தது. புவனா உற்சாகமாகப் பேசினாள். தன்னால் சக்கர நாற்காலியின் உதவியில்லாமல் வர முடியும் என்றும் பல ஆண்டு கனவு நிறைவேறப் போவதாகவும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து 10 நாட்களில் வந்து விடுவதாகக் கூறினாள்.  எனக்கும் என் வீட்டாருக்கும் மிகவும் சந்தோஷம். அவர்கள் வரும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தோம்.
ஆனால் எப்போதும் நாம் நினைப்பது ஒன்று இறைவன் நடத்துவது வேறு. ஒரு வாரம் கழித்து எங்களை உலுக்கி எடுக்கும்படியான செய்தி. ஆம் என் அன்பு தம்பி சங்கரின் மனைவி அந்த அன்பான அழகான பெண் மாரடைப்பால் இறந்துவிட்ட செய்தி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தோம். மூவரும் சென்னை செல்லத் தீர்மானித்தோம். ஆனால் என்னால் மட்டும்தான் வர முடிந்தது. அதுவும் நான்கு நாட்கள் கழித்து எப்படி சங்கரை சந்திக்கப் போகிறேன். அவன் என்னைப் பார்த்தவுடன் கோ என்று கதறி அழுவான் என்ற கவலையுடன் வீட்டில் நுழைந்தேன். வரவேற்பு அறையில் சங்கர் அமர்ந்து இருந்தான். என்னைப் பார்த்தவுடன் அழவில்லை, கதறவில்லை, கத்தவில்லை வாங்கண்ணே என்று அமைதியாக அழைத்தான். ஒரு யோகியைப்போல் அமர்ந்து இருந்தான். அரவிந்தன் மட்டும் என்னைப் பார்த்தவுடன் அழுதுவிட்டான் அவனைச் சமாதானப்படுத்தினேன். நான் பத்து நாட்கள் காரியம் முடியும் வரை அவனை விட்டு எங்கும் செல்லவில்லை. என் மாமா வீட்டிற்குக் கூட செல்லவில்லை. காரியங்கள் முடிந்தவுடன் அவன் மகனுடன் கலந்து பேச்சை ஆரம்பித்தேன்.
சங்கர் வரும் புதன் இரவு நாம் லண்டன் செல்ல வேண்டும். ஏற்கனவே டிக்கட்டும் விசாவும் அரவிந்தனுக்கு உள்ளது. நான் வரும் போதே உனக்கும் டிக்கட்டும் எடுத்துக் கொண்டு  வந்து விட்டேன்.  நான் ஏற்கனவே என் மாமாவிடம் பேசிவிட்டேன். இந்த வீட்டைக் காலி செய்யும் பொறுப்பையும் வாடகைக்கு விடும் பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார். லண்டனில் நீங்கள் இருவரும் என் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம், என்ன வரும் புதன் புறப்படலாம் அல்லவா என்றேன்.
ராஜூ அண்ணே நீங்கள் அரவிந்தனை அழைத்துச் செல்லுங்கள். நான் லண்டன் வரும் யோசனை எனக்கு கிடையாது. நான் இங்கேயே இருந்துவிடுகிறேன் என்றான்.
என்னப்பா நீ இப்படிக் கூறுகிறாய். நீ இங்குத் தனியாக இந்த வீட்டில் எப்படி இருப்பாய் வருத்தமாக இல்லையா என்றேன். அதற்கு அவன் கூறிய பதில் என்னை வியக்க வைத்தது. நான் தனியாக இருப்பதாக யார் கூறியது. அதோ அந்த அறையில் என் புவனா இருக்கிறாள். என்னைப் பார்த்துக் கொண்டு எனக்குத் துணையாக இருக்கிறாள். நீங்கள் யாரும் கவலைப்படவேண்டாம் என்றான். அது சரி, உன் நம்பிக்கை ஏற்புடையதுதான், நீ  உன் மகனுடன் ஒரு முறையாவது லண்டன் வந்து சுற்றிப் பார் விரும்பினால் வா,  அங்கேயே இரு இல்லை திரும்ப வந்துவிடு என்றேன். அதற்கு அவன் கூறிய பதில் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
ராஜூ அண்ணே என்னைவிட அவள்தான் லண்டனையும் சுற்றியுள்ள நாடுகளையும் பார்க்க விரும்பினாள். அவள் இறப்பதற்கு முதல் நாள் வரை லண்டன் செல்ல முடியும் என்று நம்பிக்கை கொண்டு இருந்தாள். அந்த இறைவன் அவள் நம்பிக்கையையும் ஆசையையும் நிறைவேற்றாமல்  அவள் வாழ்க்கையை முடித்துவிட்டார், அவள் செல்ல விரும்பிய நாடுகளை, அவளால் செல்லவும் பார்க்கவும் முடியாமல் போய் விட்ட நாடுகளுக்கு நான் மட்டும் வரவும் விரும்பவில்லை பார்க்கவும் விரும்பவில்லை. நான் மட்டும் அப்படி வந்தால்  நான் இவ்வளவு நாட்கள் அவளுடன் இறுதி வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அதனால் நீங்கள் என் மகனை அழைத்துச் செல்லுங்கள் நான் வர விரும்பவில்லை என்றான்.
அவன் பெருமதிப்பிற்குரிய சிறந்த கணவனாக அரிய மனிதனாக எனக்குத் தோன்றினான். எனக்கு மகாபாரதம் தான் உடன் ஞாபகத்திற்கு வந்தது. அதில் வரும் திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரியை நினைத்துக் கொண்டேன். அவள் தன் கணவன் பிறவிக் குருடன் இவ்வுலகைக் காண முடியாது  என்பதை அறிந்து தன் கணவன் பார்க்க முடியாத உலகை நான் மட்டும் பார்ப்பதா? என்று இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு  உலகை இருட்டாக்கிக் கொண்டாள். அவளைவிடச் சிறந்தவன் என் தம்பி சங்கர். தன் மனைவி உயிருடன் இருக்கும் போது, அவள் உடல் நலத்தைக் காரணம் காட்டி எல்லாரும் வற்புறுத்தியும் மறுமணம் செய்து கொள்ளாமல் ஒரே மனைவியுடன் ராமனைப் போல் வாழ்ந்தான்.
அவள் இறந்த பிறகு காந்தாரியைப்போல் தன்மனதை கட்டி மூடிக்கொண்டான். எனக்கு என் அன்பு தம்பி சங்கர் காந்தாரியாக அவளைவிட ஒருபடி மேலாகத் தோன்றினான். ஆமாம், இவன் ஒரு காந்தாரி. புதன் இரவு ஏதோ ஒரு இனம்புரியாத மனநிறைவோடு அவன் மகன் அரவிந்தனுடன் லண்டன் புறப்பட்டேன். லண்டனில் புவனாவின் ஆன்மா மகன் மூலம் பார்க்கும் அவள் ஆன்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையுடன் விமானம் ஏறினேன்.
_________________________________________________
தொடர்பு: காந்திநாதன் (sahityan2@gmail.com)

News

Read Previous

மது கோப்பையில் அஸ்தமித்த சூரியன்

Read Next

மன்னித்துக்கொள் மானுடமே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *