பெருமை….!

Vinkmag ad
பெருமை….!
கரைந்துண்ணும் காகத்தில் ஒற்றுமை தனைக்  கரைத்தாய்
கானத்தில் குயிலோசை கேட்கையில்  இசை மறைத்தாய்
ஆடும் மயிலழகின் அற்புதத்தில் அதிசயித்தாய்
ஓடுபுலி  மான்வேகம் உள்மனதில் கணக்கிட்டாய்…
கொக்கின் வேட்டையிலே தவம் செய்யச்  சொன்னது யார்
கூடும் தேன்கூட்டில் பொறியியலைக் கூட்டியதார்
மூடும் மேகத்திடை மோகமழைத் தூவியதார்
வாடும் இரவுகளில் வளர்பிறையை வைத்தது யார்….
மீனின் துடுப்பழகில் படகுகளைச் செலுத்தியதார்
கூடும் குளிர்மலையில் எதிரொலியைக் கூட்டியதார்
பூவில் தேனுண்ணும் புத்திமதி  புகன்றது  யார்
காலைப் பறவைகளில் கடமைகளை வைத்தது யார்….
எறும்பில்  சுறுசுறுப்பு  யானைகளில் கடுமுழைப்பு
கரும்பில் தனி இனிப்பு   கற்கண்டில் தித்திப்பு
விடியல்ஒளிப் பிழம்பு   வியக்கின்ற அருட்சிரிப்பு
கறவைப் பாற் கறப்பு  கணக்கின்றிப் பெறும் உவப்பு…
சொல்லும் அத்தனையும் சொந்த உன் படைப்பில்லை
சொல்லும் இயற்கையினை வெல்ல ஒரு  வழியில்லை
கொல்லும்  போருலகைக் கொண்டு வந்தாய் உன்போல
கொல்லும் சிறுமையினைப் பெருமையெனப்  பீற்றுகிறாய்…!
அடுத்தவர்  துன்பத்தில் அகமகிழ்ந்து போகின்றாய்
கொடுத்துதவும் உதவியினைக் கொல்லும்  வரைச் சொல்லுகிறாய்
கெடுத்தல் தொழிலென்று கொலை களவு புரிகின்றாய்
சிறுமைகளைப் பெருமை என மனமரித்து ஆடுகிறாய்…
உன்னை நீ மறந்து உச்சிலே ஏறுகிறாய்
ஏறுகிற போதெல்லாம் நூறுமுறை இறங்குகிறாய்
பொன்னைப் போற்றுகிறாய் பெண்மை சீரழிக்கின்றாய்
தன்மை  இறுமாப்பின் பேரென்று காட்டுகிறாய்…!
அத்தனையும் இயற்கையிலே  அறிந்து மனம் திழைக்கின்றாய்
அத்தனையும் சடுதியிலே மறந்து மனம் சலிக்கின்றாய்
விந்துக்குள் வித்தைதனை வைத்தவனை அறியாமல்
சிந்தனயில் பெருமையெனப்  புதுக் கவிதைப் படிக்கின்றாய் …!
ஒற்றுமை உடைத்தெறிந்தாய் மனிதத்தை மண்புதைத்தாய்
பெற்றோரை மடத்தில் வைத்தாய் மடமையென நீயானாய் கல்வியை விற்கின்றாய் கற்பினைக் கற்பனை என்றாய்
சொல்லில் செயல்முறையில் நரகத் தீ விறகானாய்…!
மண் வளம் பொசுக்கின்றாய்  மாசுகள் நிறைக்கின்றாய்
விண் நலம் சிதைக்கின்றாய் விரிகடல் எரிக்கின்றாய்
பெண்மையை நசுக்கின்றாய் பெரியரை ஒதுக்கின்றாய்
உண்மையில் கேட்கின்றேன் எதைப் பெருமை என்கின்றாய்…?
இயற்கைப் படைப்பென்பாய் இறைவன் படைப்பை யெலாம்
இயற்கையில் புகழ்பெருமை இறைவனுக்கே உரியதுவாம்
மயற்கை விலகையிலே மனதுக்குள் ஒளியாகும்
முன்றுபார் நீ கொஞ்சம் உன் சிறுமை தெளிவாகும்…!
மனிதம் உன்னிடத்தில் இருந்தால்தான் நீ மனிதன்
புனிதம் உன்னிடத்தில் புகுந்து விட்டால்  நீ புனிதன்
தன்னை அறிதல்போல் தத்துவத்தை நீ அறிந்தால்
எல்லாம் உன்வசமாகும் இறையவனின் அருளாகும்….!
(மயற்கை = மயக்கம்)
 காவியக் கவிஞர் அத்தாவுல்லா….

vfathavullah@gmail.com

 

News

Read Previous

உருளைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !

Read Next

அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் !!- உங்களுக்காக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *