நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!!

Vinkmag ad

நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!!

-எசேக்கியல்காளியப்பன்-

மச்சுதான் நாடு! மற்றிப், 
புத்தகம் மக்கள்! அன்னார் 
குச்சுதான் பெட்டி; கொண்ட, 
சொற்களே பேச்சு! வேறு என் 
இச்சைதான் சட்டம்; எந்தன், 
எழுத்துதான் திட்டம், திட்டத் 
தச்சனும் நானே! ஆட்சித் 
தலைவனும் நானே! காண்பாய்! 

புலவரே முன்னோர்; காணும் 
புலமையே மொழியாம்! தோன்றும் 
கலவரம் இல்லை; எந்தக் 
கருத்துமே என்முன்; எல்லாம் 
பலவிதம் பேசும் பக்கம் 
பகருவார் உண்டு! பாதை 
விலகுவார் உண்டு! ஆனால் 
விலங்கினார் இல்லை;இல்லை; 

பலவிதச் சோலை ; பாடல் 
ஒழுக்குநீ ரோடை! பாடும் 
கலைகளே பண்கள் ; காலம் 
கடந்தவை இல்லை! என்றும் 
நிலைப்பவை நெஞ்சுள்; நீங்கா 
நினைவுகள் செல்வம்! நிற்கும் 
மலைகளோ எண்ணம்; சொல்லின் 
மகிழ்வுதான் இன்பம் கண்டாய்! 

இறக்குவ துண்டாம்! ஏற்று 
மதிகளும் உண்டே! நல்ல 
மறப்பொருள், காதல், விஞ்ஞா 
னத்துடன் மறைகள் உள்ளச் 
சிறப்பு,அதன் செயல்கள், ஞானம் 
செறிந்த,சித் தந்தம் கற்றே 
நிரப்புதல் செய்தொ ழில்கள் ; 
நிகழ்வரு மானம் இன்பம்! 

பயிரிடல் விரித்து ரைப்பார்! 
பாவுநூல் நெசவு சொல்வார்; 
உயர்மனை அறிவு சேர்ப்பார்! 
உயிர்க்கலை நுணுக்கம் தேர்வார்! 
செயல்படும் சிந்த னைக்குச் 
சேர்ந்திட அச்சில் வார்ப்பார்! 
துயரிலாது இவர்கள் கூடத் 
தோற்றிடா ஏற்றத் தாழ்வே! 

கருத்திலே உயர்வு; காணும் 
கண்ணிலே தெளிவு;நெஞ்சை 
உறுத்துதல் இல்லை; உள்ளத்து 
உணர்விலே வெண்மை! எல்லாம் 
நிறுத்தவோர் அறிவு! நெஞ்சுள் 
நிலைக்குமோர் ஏற்றம்; என்ற 
மறுத்தொடாக் கொள்கை மக்கள்! 
மற்றியான் அவர்கள் மன்னன் ! 

 

News

Read Previous

நெட்டெழுத்து: இணையத்தில் வழிகாட்டும் தமிழக ஆசிரியர்!

Read Next

வெற்றிக்கான ஜப்பான் மந்திரம்

Leave a Reply

Your email address will not be published.