நிரந்தரமாக ஒழித்திடுக குடி!

Vinkmag ad

நிரந்தரமாக ஒழித்திடுக குடி!

கவிஞர் இரா. இரவி !

குடிக்க பணம் கேட்டு
கொல்கிறான் தந்தையை
மகன்!

தனக்குத் தானே
தீ வைத்துக் கொள்கிறான்
மது போதையில்!

குடித்துவிட்டு தன்படம் எடுத்து
தவறி விழுந்து இறந்தனர்
இணையர்!

மிதப்பதாக நினைத்து
மூழ்கி விடுகின்றனர்
போதையில்!

குடிபோதையில் வாகனம் ஓட்டி
தானும் செத்து
மற்றவரையும் சாகடித்தான்!

கணவரின் குடியால்
பெருகியது மணவிலக்கு
தேவை மதுவிலக்கு!

பள்ளியின் இருக்கையை
விற்றுக் குடித்த
மாணவ குடிமகன்கள்!

ஆண்களின் குடிபழக்கம்
தொற்றிக் கொண்டது
சில பெண்களுக்கும்!

குடிபோதையில்
பெற்ற தாயைக் கொன்ற
குடிமகன்!

குடும்பத்தின் குதூகலம்
முடிவிற்கு வந்தது
குடியால்!

மது போதையில்
மனைவி மக்களைக்
கொன்ற குடிமகன்!

மதிப்பை இழந்து
அவமதிப்பைப் பெறுகிறான்
குடிகாரன்!

என்ன செய்வதென்று அறியாது
எதுவும் செய்திடும்
குடிமகன்கள்!

குடியால்
குடும்பங்கள் அழியுது
மூடுங்கள் மதுக்கடைகளை!

நாளிதழ்களில்
நாளும் வரும் செய்தி
குடியின் கேடு!

காந்தியடிகள் இருந்திருந்தால்
கண்ணீர் வடித்திருப்பார்
குடிமகன்களைப் பார்த்து!

மது ! கவிஞர் இரா .இரவி !

குடிக்க குடிக்க
உயிர் குடிக்கும்
மது !

திரவ வடிவில் உள்ளது
திராவகத்தை விட கொடியது
மது !

இன்று மட்டும் என்று தொடங்கி
என்றும் என்றாகும்
மது !

துக்கம் மறக்க என்பாய்
துக்கத்தில் முடிக்கும்
மது !

வன்முறையின் காரணி
வம்புகளின் ஆரம்பம்
மது !

ஒழுக்கத்தின் எதிரி
ஒழுக்கக்கேட்டின் நண்பன்
மது !
.
சிற்றின்பம் என்பாய்
பெருந்துன்பம் தரும்
மது !

முதலில் கோப்பை மோதல்
பின் நண்பர்கள் மோதல்
மது !

தேசப்பிதா வெறுத்தது
பித்தனாய் ஆக்குவது
மது !

பேதைமை வளர்ப்பது
பெண் இனம் வெறுப்பது
மது !

கடமையில் தவறி
மடமையில் வீழ்த்துவது
மது !

அடிமையாக்கி
அழித்து விடும்
மது !

இலவசமாக வழங்கி நண்பன்
பகைவனாக மாறுவான்
மது !

கூடி கும்மாளமிட்டு குடித்து
சண்டையிட்டு பிரிவில் முடிக்கும்
மது !

காலம் மாறிவிட்டது என்பாய்
நீ காலமாக வழி வகுக்கும்
மது !

நாகரிகம் என்று தொடங்கி
அநாகரிகத்தில் முடிக்கும்
மது !

ஆற்றலை அழிக்கும்
அறிவை சிதைக்கும்
மது !

அறிவாளியை முட்டாளாக்கும்
முட்டாளை மூடனாக்கும்
மது !

உயிர்க்கொல்லி பானம்
உள்ளே எய்திடும் பாணம்
மது !

மதிப்பை இழப்பாய்
மதியையும் இழப்பாய்
மது !
மது ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

அதனை நீ குடிக்க
அது உன் உயிர் குடிக்கும்
மது !

இலவசமென்றாலும் வேண்டாம்
உனைக் கொல்லும் நஞ்சு
மது !

என்றைக்காவது என்றுத் தொடங்கி
என்றும் வேண்டும் என்றாகும்
மது !

நண்பனுக்காகக் குடிக்காதே
நண்பனைத் திருத்திடு
மது !

சிந்தனையைச் சிதைக்கும்
செயலினைத் தடுக்கும்
மது !

மதித்திட வாழ்ந்திடு
அவமதித்திட வாழாதே
மது !

இன்பத்தைக் கொண்டாட
துன்பம் எதற்கடா
மது !

சோகத்தை மறந்திட
மருந்தன்று
மது !

நன்மை ஏதுமில்லை
தீமை ஏராளம்
மது !

இழப்பு பணம் மட்டுமல்ல
மானமும்தான்
மது !

இல்லத்தரசிகளின்
முதல் எதிரி
மது !

திறமைகளை மறக்கடிக்கும்
ஆற்றலை அழித்துவிடும்
மது !

உடலுக்குக் கேடு மட்டுமல்ல
ஒழுக்கக் கேடு
மது !

வீழ்ந்தவர்கள் கோடி
வீழ்வது தெருக்கோடி
மது !

அடிமை ஆக்கும்
அடி மடியில் கை வைக்கும்
மது !

மனிதனை மிருகமாக்கும்
பகுத்தறிவை மழுங்கடிக்கும்
மது !

குற்றவாளியாக்கும்
கொலைகாரனாக்கும்
மது !

நிதானம் இழந்து
நிலத்தில் வீழ்த்தும்
மது !

வாய் மட்டுமல்ல
வாழ்க்கையும் நாறும்
மது !

உழைத்தப் பணத்தை
ஊதாரியாக்கும்
மது !

குடி குடியை மட்டுமல்ல
சமுதாயத்தையும் கெடுக்கும்
மது !

கேடியாக மாறுவாய்
ஜோடிஇன்றி வாடுவாய்
மது !

தொடவே தொடதே
தொட்டால் பற்றிக்கொள்ளும்
மது !

மட்டமாக்கும் உன்னை
மடையனாக்கும் உன்னை
மது !

கேளீக்கை என்று தொடங்கி
வாடிக்கையாகிவிடும்
மது !

மது ! கவிஞர் இரா .இரவி !

இரண்டு எழுத்து எதிரி
ஆக்கிடும் ஒரு மாதிரி
மது !

உன்னை மறந்து
உளறிட வைக்கும்
மது !

இடமாற்றம் செய்யும்
ஆறிலிருந்து ஐந்திற்கு
மது !

மெல்லக் கொல்லும் விசம்
மேனியைச் சிதைக்கும்
மது !

மதிப்பை இழப்பாய்
மண்ணில் வீழ்வாய்
மது !

வருமானம் அழிக்கும்
வேதனை விளைவிக்கும்
மது !

உறவுகள் வெறுக்கும்
உணர்வுகள் மங்கும்
மது !

என்றாவது என்று தொடங்கி
என்றும் என்றாகும்
மது !

வாழ்நாளைக் குறைக்கும்
வழியை மாற்றும்
மது !

வன்முறைக்கு வித்திடும்
நன் மறைக்குப் பகைவன்
மது !

பாவங்கள் செய்வாய்
சாபங்கள் பெறுவாய்
மது !

ஒழுக்கம் சிதைக்கும்
உயிரை உருக்கும்
மது !

அரவத்தை விட விசம்
கொடிய திரவம்
மது !

வேலைக்குப்பின் என்று தொடங்கி
வேலைக்குமுன் என்றாகும்
மது !

திறமையை அழித்து
தீமையைத் தரும்
மது !

விளையாட்டாக ஆரம்பித்து
வாழ்க்கையில் விளையாடும்
மது !

இலவசம் என்று குடித்தால்
தன் வசம் ஆக்கிவிடும்
மது !

ஊடகங்களில்
கற்பிக்கப்படும் தீங்கு
மது !

நல்லவர்கள் தொடுவதில்லை
தொட்டவர்களை விடுவதில்லை
மது !

இன்பம் என்று தொடங்கி
பெருந்துன்பத்தில் முடியும்
மது !

துட்டனைக் கண்டால்
தூர விலகு
மது ! .
மது ! கவிஞர் இரா .இரவி .

கண்மூடி குடிக்கின்றாய்
விரைவில் கண் மூடுவாய்
மது !

உள்ளே போனதும்
உன்னை இழப்பாய்
மது !

இரண்டும் அழியும்
பணம் குணம்
மது !

இறங்க இறங்க
இறங்கும் உன் மதிப்பு
மது !

குடலை அரிக்கும்
உடலை வருத்தும்
மது !

மனக்கட்டுப்பாடு இருந்தால்
மனம் நாடாது
மது !

மற்றவர்கள்
து என துப்புவார்கள்
மது !

உழைப்பை வீணடிக்கும்
இறப்பை விரைவாக்கும்
மது !

குற்றவாளியாக்கும்
சிறைக்கும் அனுப்பும்
மது !

சூது ஆடுவாய்
சொத்து இழப்பாய்
மது !

மாது வெறுப்பாள்
துணையை இழப்பாய்
மது !

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் !கவிஞர் இரா .இரவி

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்

குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்

பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்

இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே

குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்

இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்

போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்

குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு

மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்

பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்

குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்

மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்

சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய் !

News

Read Previous

தொலைந்து போகும்வரை

Read Next

தமிழ் தாத்தா உ.வே.சா. நினைவு தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published.