நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
(பக்கம் 101-104)
போகமாட்டேன் என்று
பொழுது –
அடம்பிடித்து அழுததைப்போல்
போகவில்லை
பொழுது என்பர்
‘பொறி’ இல்லா இளைஞர் சிலர் …
அன்றைய அரேபியாவின்
இன்றைய வார்ப்புகள் !
முகம்மதுவோ …
பொழுது போகவில்லை
என்று எண்ணாமல் –
பொழுது போதவில்லை
என்பார்.
“காலக்குரல்”
பொம்மையாய் விழுந்த
மனிதக் குழந்தை
பொம்மையின் காலில்
பொழுதும் விழுந்தது.
பொம்மை உணர்த்தும்
பெரியோன் இருக்க –
பொம்மையே பெரியோன்
என்றது உலகம் !
படைத்தற்கெல்லாம்
குழந்தை மனிதன்
படியாய் விழுந்தான்.
பாவம் மனிதன் !
சிலையைச் செய்தான் …
சிலையின் காலில்
இவனே கிடந்தான் !
பணத்தை வடித்தான்…
இவனுக்கே அது
வினையாய் விடிந்தது !
எல்லோருக்கும்
விலை வைத்தான் …
பிறகு –
மலிவு விலையில்
மனிதன் கிடைத்தான் !
இயந்திரம் கண்டான்.
இறுதியில் இந்நாள்
இயந்திரத்தாலே
மனிதன் இவனே
இடம் பெயர்கின்றான் !
ஆட்சியை அமைத்தான்;
அடுத்த தேர்தல்
வருகிற வரைக்கும்
ஆட்சியாளரின்
அடிமையாய் ஆனான் !
படைத்ததற்கெல்லாம்
அடிமையாய் ஆனான்
பாவம் மனிதன் !
சேர்ந்தவரெல்லாம்
சிலைகளை வணங்கினர் ;
முகம்மதுவோ
முகத்தைத் திருப்பினார் !
சிலைகளின் முன்னால்
உணவினைப் படைத்தனர்.
அவைகளைச்
சிலைகள்
செரித்து விட்டிருந்தால் …
மறுநாள் உணவினை
படைப்பவர் வருவரா ?
இப்படிப் படைத்த
உணவினை உண்டனர் ;
 உவந்தே களித்தனர்.
முகம்மது இவற்றை
அறவே வெறுத்தார் !
இந்த ஞானம்
முகம்மது நபிக்கு
இயல்பாய் வந்தது !
அறிவு என்பது …
புறத்தே இருந்து
புகுத்தப்படுவது !
ஞானம் என்பது …
தன்னில் இருந்து
தானே விளைவது !
[தொடரும் . . . ]
___________________________________________________

News

Read Previous

நோய்கள் உருவாகும் இடங்கள் !

Read Next

அகற்றிவிடல் அவசியமே !

Leave a Reply

Your email address will not be published.