நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
6. வள்ளல் வளர்ந்தார் !
(பக்கம் – 69)
 
 
O
இரண்டு வருடம்
இனிதே நிறைந்தது …
முகம்மது
பால் குடிப்பதை நிறுத்தினார் …
இயற்கைக்குப் பருவங்கள்
இறக்கைக் கட்டித் திரும்புகின்றன.
வருடம் வந்தால் வசந்தம் வரும்.
மனிதனுக்குத்தான்
கடந்துபோன பருவங்கள்
நடந்துகூட வருவதில்லை !
பால் குடி மறந்த பாலகன் !
பால்குடி மறந்த முகம்மதுவை
‘ஹலீமா’
அம்மா ஆமீனாவிடம்
ஒப்படைத்தாள்.
கட்டி முடிக்கப்பட்ட அணைக்கட்டு
திறக்கப்படுகிற அன்றைக்கு
ஊரே மகிழும் !
ஆனால் …
அடுத்த வேலைக்காகக்
காத்திருக்கத் தொடங்குகிற
தொழிலாளர்களைப் போல
துன்பமடைந்தாள் ஹலீமா
O
இங்கே …
குளிர்காலத்தில்
ஆமைக்கு வேர்க்கிறது
கோடை காலத்தில்
நெருப்புக் கோழிகளுக்கு
சளி பிடித்துக் கொள்கிறது …
“பருவம் சீராகிற வரை
குழந்தையைப்
பாதுகாத்துக் கொள்”
என்றாள் ஆமினா …
ஹலீமாவின் மனதிற்குள்
ஆடிப்பெருக்கு
ஆயிரம் குடங்களோடு
அணிவகுத்தது !
அப்போது
முகம்மது அவர்களுக்கு
மூன்றே வயது.
O
தாயே – என்
சகோதரர்கள் எங்கே? என்றார்
ஒருநாள் …
ஹலீமாவின்
பிடித்து வைத்த
பிரதிகளைத்தான்
முகம்மது – சகோதரர்கள் என்று
சாற்றினார்.
அன்பே!
அவர்களெல்லாம்
ஆடுமேய்க்கப்
போயிருக்கிறார்கள் …
வியர்வையால்
விதியை எழுதும் கதிரவன்
மேற்குப் படித்துறைகளில்
சலங்கைகளை அவிழ்க்கும்
சாயங்காலத்தில்
அவர்கள் திரும்புவார்கள்
என்றாள் !
___________________________________________________

News

Read Previous

தமிழகத்தின் கிராமியக் கலைகள்

Read Next

வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..

Leave a Reply

Your email address will not be published.