நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
[பக்கம்: 37-39]
 
அதோ அந்தப் பாலைவனம் …
மணல் வரிக்கவிதை
O
இது
அரேபியப் பாலைவனம்.
சூரியச்சேவல்-தனது
நெருப்பு வயிற்றை
நிரப்புவதற்காக …
நீர்முத்துக்களைக்
கொத்தி எடுப்பது-இங்கே
எப்போதும் நடப்பது.
இந்த
நிழல் நாடகத்தின்
நிரந்தர ஒத்திகைக்கு …
இங்குதான்
கால்களைக்கழற்றி விட்டு
சலங்கைகளைக் கட்டுகிறார்கள்.
O
இது
நிச்சயமின்மையை
உடுத்திக் கொண்டிருக்கிறது …
நித்தியத்தைக்
கிழித்துக்கொண்டே இருக்கிறது.
இது
இற்றுப்போன இரும்புக்கு
பண்டமாற்றாக
பேரீச்சம்பழங்களை
இடது கையால்
தந்துவிட்டுப் போகிற …
தர்மபுத்திரர்களின்
தாருகாவனம்
O
இது
நோன்பிருக்கிற
மேகங்களுக்கு எதிராக
கோழிவிதைகளைக்
கொத்திக் கொண்டிருக்கிற …
இடதுபக்கம்
திரும்பிப்படுக்க இயலாத
இந்தியாவின் அரசியல்கட்சி
இந்தப்பாலைவனம் …
சூரியச் செலவாளியிடமிருந்து
நதிகளைச்சேமித்து வைத்திருக்கும்
மண்வங்கிகளின் மைதானம்
O
இது-
நீர்த்தவளைகளின்
நிரந்தர வெளிநடப்பு
இது-
வெட்டுக்கிளிகளின்
திறந்தவெளிச் சிறைச்சாலை.
இது-
வாழ்க்கை முழுவதும்
அடித்துத் திருத்தப்பட்டு
மரணத்திற்குப்பிறகும் படிக்கப்படாத
மணல்வரிக்கவிதை.
________________________________________________

News

Read Previous

லெனின் விருது – 2017

Read Next

நட்பு

Leave a Reply

Your email address will not be published.