தன்னை தான் உணர்வதே ஞானம்..

Vinkmag ad

தன்னை தான் உணர்வதே ஞானம்.. (கவிதை) வித்யாசாகர்!

 

முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,
நினைத்ததைச் சாதித்தும்
நடக்காததில் நோகும் பிறப்புகள்;

ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே
நித்தம் வாழ்பவர்கள்,
என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு
என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்;

வந்தவர் போனவர் பற்றியெல்லாம்
பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;
அடிப்பவன் ஓங்கியடித்தால் – அதிர்ச்சியிலேயே
மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்;

எதிலெல்லாம் ஏற்றம் உண்டென
தேடித் தேடியே இருப்பதை தொலைப்பவர்கள்,
இருக்க இருக்க மேலேறி
பேராசையின் பள்ளத்தில்வீழ்ந்து தானேஒழிபவர்கள்;

குடிக்க கஞ்சு போதும்
உடுத்த ஆடை போதும் என்றிருந்திருந்தால்
அடுத்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பதை
அறிந்தும் ஆழ்கடலை தொடாதவர்கள்;

பிடித்தது பிடிக்காதது என்று பகுத்துப் பகுத்தே
உணர்ச்சிகளைக்கூட ஏற்றயிறக்கத்துள் தள்ளியவர்கள்,
பின் தவிக்கத் தவிக்க மூச்சடக்கி
வாழ்க்கையை ஞானம்தேடியே இழப்பவர்கள்;

இருப்பது ஒரு வாழ்க்கை யென்றதே – நாம்
இருப்பதைச் சிறப்பாக வாழ்வதற்கன்றி வேறென்ன? இன்னும்
நீள்வது உண்டெனில் பிறப்புகள் நீளட்டுமே – நாம்
பெறுவதைப் பேறென்று வாழுவமே’ என உணர்தலேப் பேரறிவு;

இருப்பதும் மறைவதும் இயல்பு தானே
கிடைப்பதும் தொலைப்பதும் இயல்பு தானே
பிறப்பதும் அழிவதும் கூட இயல்பு தானே,
இயல்பில் – மாற்றமும் தோற்றமுமே மாறாதது;

ஏற்றத்தை இறக்கத்தை கண்டதும் ஆடாத
கிடைத்ததும் தொலைத்ததும் சட்டென மாறாத
இருப்பதை பகிர்ந்து இருப்பதில் சிறந்து
இயல்பின் அசைவுகளை முடியக் கண்களுள் பார்த்தால் –

மூளும் நெருப்பிலிருந்து பெய்யும் மழை
வீசும் காற்றுவரை தன்னுள் அடக்கமென்று தானே தெரியும்,
அதற்கும் ஆடாத எதற்கும் அசையாத மனமது
எப்போதும் தனித்திருக்கும், ஏகத்திலும் சுகித்திருக்கும்.,

கலங்காத மனம் அறியாமை நோயின்றி
கேட்பதையெல்லாம் பெற்றுத்தரும், எதைக்
கேட்பது கேட்க மறுப்பதென்பதையும்
இயல்பிலடங்கி எண்ணம்வழியே எடுத்தியம்பும்!

எங்கும் அமைதி நிலவும், எவ்வுயிரும் சுகம் பெரும்!!
யாவருக்கும் மங்களம் மங்களமே யுண்டாகும்!!
—————————————————————————————-
வித்யாசாகர்

News

Read Previous

செப்டம்பர் 27 முதல் மேலச்சிறுபோதில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்

Read Next

தேனி மாவட்டம் – வரலாற்றுப் பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *