சுதந்திர தின வாழ்த்து

Vinkmag ad

சுதந்திர தின வாழ்த்து

எழுபத்தி நாலாவது வயதில் அடியெடுத்து வைக்கும்
என்னருமை பாரதத்தாயே , வணங்குகிறேன் , வாழ்த்துகிறேன் .
முழுவதும் சுதந்திரத்தை அனுபவிக்க முனைந்தாலும்
முட்டுக்கட்டைகள் பல முனைந்து  தடுக்கிறதே .
வளர்ச்சியின் பாதையில் விரைந்து  செல்ல நினைக்கையில்
தளர்ச்சியடையச் செய்யும் கொரோனாவுக்கடிமையானோம்.
கருத்துச்  சுதந்திரம் என்ற பெயரில்  கயவர்கள்
கலகம் விளைவிக்கும் சூழ்நிலைக்கடிமையானோம்.
மத சுதந்திரம் என்ற பெயரில்  ஒரு சாரார் மக்களை
மதமாற்றம் செய்யும் இழிசெயலுக்கடிமையானோம்.
அரசியல் சுதந்திரம் என்ற பெயரில்  , கட்சிகளின்
அக்கிரமங்களுக்கும்  , அராஜகத்திற்கும்  அடிமையானோம் .
சம உரிமைப்போராட்டம்  என்ற பெயரில் , சனாதன
சமயநெறிகளைக் குலைக்கும் சதிகளுக்கடிமையானோம் .
சாதிகளை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே  ஒவ்வொரு
சாதிக்கும் சலுகை கேட்கும்  சதிச்செயலுக்கடிமையானோம் .
அமைச்சர் முதல் அடிமட்ட ஊழியர்வரை பரவியுள்ள
நமைச்சல் கொடுக்கும் லஞ்ச ஊழலுக்கடிமையானோம்.
ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில்  ஊடுருவி
கேடுகள் பரப்பும் கீழ்மைக் கடிமையானோம்.
நீதிதேடிப்  போனால் , நெடுங்காலம் இழுத்தடிக்கும்
நீதித்துறையின்  நெறிமுறைகளுக்கடிமையானோம் .
தொழில்துவங்க முனைவோர்க்குத் தொல்லைகள் பலதந்து
வழிப்பறியாளர்போல் நடக்கும்  கயவர்களுக்கடிமையானோம் .
இந்தத் திட்டமென்றாலும் எதிர்த்துக் குரல்கொடுத்து
அந்தத்திட்டத்தை ஒழிக்கும் அறிவிலிகளுக்கடிமையானோம்.
வருமானத்திற்காக அரசாங்கமே நடத்தும் விற்பனையால்
அவமானம் தருகின்ற மதுவிற்கடிமையானோம்.
சுதந்திரமாய்த் தேவையான கல்விகற்க உரிமையின்றி
தந்திரமாய்த் தடுக்கும் தலைவர்களுக்கடிமையானோம்.
நதிநீர் பங்கீட்டிற்கும் ,  நாடிணைக்கும்சாலைகட்கும்
எதிராகக்குரல் கொடுக்கும் எத்தர்களுக்கடிமையானோம்.
லட்சக்கணக்கானோர் போராடிப்பெற்ற சுதந்திரத்தின்
லட்சணம் இதுதான் தாயே , லஜ்ஜையின்றிக் கூறுகிறேன்.
இந்தத் தடைகள் நீங்கி , இயல்பான சுதந்திரம் கிடைத்தால்
வந்தே மாதரம் என்று  வாழ்த்தி வணங்கிடுவேன் .
 சுதந்திர தின வாழ்த்துக்களுடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

கோடரிகள்

Read Next

மனம் விட்டு சிரியுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *