சுஜித்……….

Vinkmag ad
சுஜித் என்றொரு சிறுவன்
இறைவா…
நடுக்காட்டுப்பட்டி மக்களின்
ரத்தத்தில் தோய்ந்து வருவதுதான்
 இந்த  உயிர்ப்பிச்சை கேட்கும் விண்ணப்பம்
ஏற்றுக்கொள்!
இறைவா…
உன் பெயர் சொல்லி
உன்னைப்போல் என்று சொல்லி
ஊர் வளைப்பாரெல்லாம்
உற்ற துணையோடு
உறங்கச் சென்று விட்டார்கள்…
கோவணங்களின் கஷ்டங்களைத்
தீர்க்காதவர்கள் தான்
இங்கு ஆவணங்களை
ஆள்வோராக இருக்கிறார்கள்…
காவலுக்குக் கட்டிவிட்ட வேலிகளே
வெள்ளாமையை விற்கிறார்கள்…
அந்த துரோகங்களால்
இப்படி தினக்கூலிகளே மடிகிறார்கள்…
முதலைக்கண்ணீரைப் பார்த்த நமக்குத்
துக்கத்தில் சிந்தும்
கண்ணீரையே சில முதலைகள்
முதலாக்குகிறார்கள்…
நிலவைத் தொட்டுக்காட்டி
சாதனை என்கிறார்கள்…
நூறடி ஆழத்தில் ஊசலாடும் உயிரை
என்னவென்பார்கள்
வாய் நாறுவதை மறந்து
வெறும் புகழ் பாடுகிறார்கள்…
இறைவா…
இங்கு
நடப்பதெல்லாம் கண்கெட்டபின்னே
நடக்கும் சூரிய நமஸ்காரங்கள்…
நடந்தகதை முடிந்தகதை  எனக்
கடந்த காலத்தைத் திருப்பினால்
ஆண்டுக்கு சில சுஜித்கள்
அஞ்சலி கண்ணீரில்…
“மாபெரும் சபையினில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்”
என்ற கனவு சுஜித்தின் தாய்க்கும் உண்டு…
இறைவா…
மீட்டெடுக்கும் போராட்டம்
நாம் நடத்தினாலும்
மீட்டுத் தரும் வலிமை
உன்னிடம் மட்டுமே…
கண்விழி…
காப்பாற்று…
— கவிஞர் அமீர்

News

Read Previous

சுகமாய் எழுந்து வா, சுர்ஜித்

Read Next

மலர்மிசை ஏகினான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *