சரஸ்வதி துதி

Vinkmag ad
சரஸ்வதி துதி
****
நாமகளே வந்திடுக நன்மையெலாம் தந்திடுக
…..நாடிவரும் எனைப்போற்றி நாளுமிங்கே வாழ்த்திடுக!
பூமகளின் கருணையினால் பூத்திட்டேன் இவ்வுலகில்
…..புண்ணியமும் சேர்த்திடவே உன்பாதம் பற்றிட்டேன்
பாமரனின் வாக்கினிலே பைந்தமிழாய் வந்திடுக
…..பக்தியோடு உன்வாக்கை பாரெங்கும் சேர்த்திடுவேன்!
தேமதுரத் தமிழோசை தென்றலெனத் தீண்டிடுக
…..தெய்வத்தின் ஆசியோடு தீந்தமிழர் வென்றிடவே!
கானலுக்கும் காண்பதற்கும் காட்சியறி வில்லாமல்
…..கண்டதனை மெய்யெனவே கருத்தேறி நிற்பவரை
ஆனமட்டும் தடுத்தாலும் ஆகாத வீணரையே
…..சேனையெனக் கொண்டவரைச் செப்புமொழிப் பொருளுணர்த்தி
வானமட்டும் உயர்த்திடவே வழிசொல்லு சரஸ்வதியே!
…..வாழ்வெல்லாம் கடன்படுவேன் வையகத்துப் பிறப்பினிலே!!
தேனமுதத் தமிழாலே தித்திக்கப் பாடிடுவேன்
…..தேர்ந்தோரைக் கொண்டாடி தேய்வோரைக் காத்திடுவேன்!
இறைவனவன் மொழியாக தீந்தமிழ்தான் இருப்பதையே
…..எவருமிங்கே உணர்வதில்லை; ஏற்றுமொழி உரைப்பதில்லை!
மறைகூடப் பிறக்குமுன்னே மாண்புரைத்த மதுரமொழி
….திரைபோட்டு உனைமறைக்க திக்கற்றோர் நினைத்தாலும்
நிறைமதியை வானத்தில் நீக்கத்தான் முடியுமோ?
…..வியநீரைக் குடித்திடவே விழைகின்றார் இயலாதே!!
சிறைவைத்துப் பூட்டியதால் சிங்கமென எலியாமோ?
…..சிறுமையை விலக்கிடுக! சிறப்பினையே வளர்த்திடுக!’
ஈடெதுவும்   இல்லாமொழி   இதுவேயென உணராதார்
…..வேடிக்கை பார்க்காமல் வேண்டுவன செய்திட்டு!
ஏடெடுத்துப் படித்தாலும் ஏற்காத தமிழெல்லாம்
…..எண்ணத்தில் சேர்த்திடுக! எண்திசையும் ஒலித்திடவே!!
வீடெங்கும்  உனைப்போற்றி  வீதியெங்கும் பண்ணொலித்து
….. பார்போற்ற த்  தமிழ்வாழ்வை பாங்காக  மீட்டிடுவோம்!
நாடெங்கும் யாவருமே நலமுடனே வாழ்வதற்கு
…..நாமகளே நற்றமிழாய் நாவசைத்துப் பேசிடவே!
என்தாயே உனையல்லால் ஏற்றதொரு துணையுண்டோ?
…..உன்மடியில் விளையாடும் உன்னதத்திற் கிணையுண்டோ?
தென்பொதிகை மலைவளர்ந்த தென்பாண்டி நகர்வளர்ந்த
…..நான்மாடக் கூடலிலே நற்சங்கம் தானமைத்து
என்னுயிரில் கலந்திருந்து இன்பமெலாம் தருபவளே
….என்னவேண்டும் எனக்கேட்டால் எண்ணத்தில் நீயிருந்து;
மன்னுபுகழ் எய்தவேண்டும்! மக்களெலாம் இன்புறவே!!
…..இன்னுமண்டம் உள்ளமட்டும் இனிதாக வாழ்ந்திடவே!!
-சுரேஜமீ
9.6.2018 இரவு மணி 7:45 pm GMT + 3

News

Read Previous

என்றும் வாழும் வான்மறை

Read Next

கவிச்சூரியன் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *