சமையற்குறிப்பு

Vinkmag ad
கவிதைச் சமையற்குறிப்பு:
சாடல் நெருப்பைச்
சட்டென மூட்டி
பாடல் பதியும்
பாத்திரம் வைப்பாய்
அறிவால் அறிந்த
அனைத்துப் பொருட்களும்
நிறைவாய்ப் பகிர்ந்து
நிறைநெய்த் தமிழிடு
கருவிளம் என்னும்
கறிவேப்பிலையும்
தரு(ம்)மணம் என்றும்
தனியாய்ச் சுவைக்கும்
சீரசை  பிரித்தல்
சீரகம் தரும்குணம்
நேரசை புரிதல்
நேசமாய் நறுமணம்
சாம்பலைப் பிரித்தல்
சோம்பலைத் துறத்தல்
சோம்புடன் மிளகும்
சேர்த்திடச் சுவைக்கும்
எதுகை மோனை
ஏலம் கிராம்புமாய்
விதிகள் பாவில்
வீசும் நறுமணம்
கருவாய் அமையும்
கருத்தை அழகாய்த்
தருவாய்ச் சமையல்
தகிக்கும் தருவாய்
புளிமா கொஞ்சம்
பதமுடன் கலந்தால்
புளிபோல் மிஞ்சும்
புதுசுவை உணர்வாய்
தேமாங்காய் போன்ற
தேங்காய்ப் பாலுடன்
மாமாங்காய்க் கீற்றும்
மாற்றும் பாவினம்
“அசலாய்” சேர்த்த
அறிவுப் பெட்டக
”மசலா” கொஞ்சம்
மணக்கச் சேர்த்திடு
சுண்டி இழுக்கும்
சுவைமிகு உவமை
கிண்டிக் கிளறும்
”கரண்டியின்” பெருமை
ஒற்றுப் பிழைபோல்
உப்பின் குறைதான்
கற்றுத் தருவர்
கல்வி நிறைந்தோர்
ஆவி அடங்க
ஆறப் போட்டிடு
கூவி அழைத்து
கூடிச் சாப்பிடு
மாசிலா வாழ்வை
மணத்துடன் வாழ
மாசிபோல் தூய
மரபினைப் போடு
பாலும் பருப்பும் பசுநெய்யும் சேர்ந்தது
போலுன்றன் பாடலைப் போடு
(இக்குறட்பா போலிருக்கும் அப்”பா”யாசம்)
அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

தொழுகை ஓர் உடற்பயிற்சி

Read Next

நீரிழிவை கட்டுக்குள் கொண்டுவர …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *