தொழுகை ஓர் உடற்பயிற்சி

Vinkmag ad
தொழுகை ஓர் உடற்பயிற்சி
தொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருத்துவமாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்கு தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது.
இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம்.
நமது உடல் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கும்போது மட்டுமே முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். உண்பது, உட்காருவது, படுப்பது என்ற நிலையில் வாழ்க்கையை நகர்த்தினால் உடல் நலம் கெடும். உடல் எடை கூடும். பல்வேறு நோய்கள் தாக்கும் கூடாரமாக நமது உடல் மாறி விடும்.
எனவே நாம் அனைவரும் ஏதேனும் உடற்பயிற்சியோ, தேவையான நடைபயிற்சியோ கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற உடல் உழைப்புகளால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து உடைபட்டு சக்தியாகவும், வெப்பமாகவும் வெளியேறுகின்றன. இதன் காரணமாக உடலில் இருந்து அதிக கலோரிகள் செலவிடப்பட்டு உடல் பருமன் ஆகாமல் தடுக்கப்படுகிறது. கொழுப்பும் குறைகிறது.
சூரிய உதயத்திற்கு முன்பு நிறைவேற்றப்படும் தொழுகை ‘சுபுஹு’ தொழுகையாகும். அந்தத் தொழுகையை நிறைவேற்றுவதில்  நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் இடம் பெறுவதால் உடல் நலம் பெறுகிறது.
தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு நடந்தே செல்வது அதிக நன்மை பயக்கும். மதீனாவில் உள்ள மஸ்திதுன் நபவீ பள்ளிவாசலுக்கு அருகே சில இடங்கள் காலியாக இருந்தன. மிகத் தொலைவில் குடியிருந்த பனூ சலிமா குலத்தார் அந்த பள்ளிவாசலுக்கு அருகே குடியேறத் திட்டமிட்டனர்.
இதை அறிந்த நபிகளார், ‘பனூ சலிமா குடும்பத்தாரே! உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
‘மக்களில் கூலி அதிகம் பெறுபவர், தொழுகைக்காக வெகு தூரம் நடந்து வருபவர்தான்’ என்பது நபிகளாரின் கூற்று.
எல்லாவித வேலைகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்கு நிறைய ஆக்சிஜன் அவசியம். மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. உடம்பின் எடையில் மூளை ஐம்பதில் ஒரு பங்கு &அதாவது 2 சதவீதம் தான். இருந்தபோதிலும் உடல் பயன்படுத்தும் மொத்த ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது.  ஆக்சிஜன் கொஞ்ச நேரம்  இல்லாவிட்டாலும்கூட மூளையின் ‘செல்’கள் பழுதடைந்து விடும். அல்லது இறந்து விடும்.
உயிர் வாழும் பொருட்கள் அனைத்தும் காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்கிறது. நமது உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் எல்லாவற்றுக்குமே ஆக்சிஜனே ஜீவாதாரம்.
அதிகாலை சூரிய உதயத்திற்கு 40 நிமிடத்திற்கு முன்புதான்  மூளையின் செயலாற்றும் திறன், மிக அதிகபட்ச அளவான 70 சதவீதம் வரை வெளிப்படுகிறது என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் வெளிப்பாடு. அந்த நேரத்தில்தான் முஸ்லிம்களின் அதிகாலைத் தொழுகை தொடங்குகிறது. இதில் பங்கேற்பதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.
பார்வை, கண்களால் நிகழ்வது. கண் என்பது ஒரு ‘கேமரா’ போலத்தான். அதற்குள் ஒரு ‘லென்ஸ்’ இருக்கிறது. ஒளிக்கதிர்கள் ‘கார்னியா’ வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. இது குறைந்த வெளிச்சத்தில் பெரிதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும்.
நமது முன்னோர்கள் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சியோடு அன்றாட வேலைகளைத் தொடங்கி விடுவதால் உடல் நலத்தோடு நீண்ட நாள் வாழ்ந்தனர். அந்தக் காலத்தில் கண்ணாடி போடும் மனிதர்களைக் காண்பது அரிதாக இருக்கும்.
அதிகாலைத் தொழுகையில் பங்கேற்கச் செல்லும்போது சுத்தமான காற்றை நமது நுரையீரல் அதிகபட்சமாகச் சுவாசிக்கிறது. அதிகாலை நேரத்தில் பள்ளிவாசலில் வைகறையின் அழகிய சூழல் மனதிற்கு அமைதியை அளிக்கிறது. இத்தகைய காரணங்களால் அதிகாலைத் தொழுகை, கண்களுக்கு மட்டுமல்ல, உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை பயக்கிறது.
அதிகாலைத் தொழுகை (சுபுஹு) தவிர பகல் நேரத் தொழுகை (லுஹர்), மாலை நேரத்தொழுகை (அஸர்), அந்தி நேரத்தொழுகை (மக்ரிப்), முன்னிரவுத் தொழுகை (இஷா) ஆகிய தொழுகைகளும் மிதமான உடற்பயிற்சி என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
தொழுகையில் நிமிர்ந்து நிற்பது, குனிவது, நெற்றியைத் தரையில் வைத்து வழிபடும் நிலை என பல நிலைகள் உள்ளன. தொழுகையில் இரு கைகளையும், இரு முழங்கால் மீது வைத்து குனிந்து நிற்கும் நிலை ‘ருகூ’ எனப்படும்.
தொழுகையில் நெற்றி தரையில்படும்படி செய்யப்படும் சிர வணக்கம் ‘சஜ்தா’ எனப்படும். தொழுகை இருப்பில் ஓதப்படும் ஒரு வகைப் பிரார்த்தனை ‘அத்தஹியாத்’.
நின்று குனிந்து நிமிர்ந்து தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகள் தொழுகையில் இடம் பெறுகின்றன. இதனால் தொழுகை அனைவருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
தொழுகை, இதயத்திற்கு இதமளிக்கிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது.

News

Read Previous

பழகு!

Read Next

சமையற்குறிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *