காக்கை குருவி…..

Vinkmag ad
காக்கை குருவி…..
=================================================ருத்ரா இ.பரமசிவன்
காக்கை குருவி எங்கள் சாதி..நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்.
………
“புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கிய”
அந்த புதுச்சேரி கடற்கரையில்
உன் பேனாவை கால் நனைத்து
எழுதிய வரிகள் அல்லவா இவை!
மனித வக்கிரங்களின்
வர்ணங்கள் வேண்டாம் என்று
கவிதைகளின் தேசத்திற்கு
ஒரு குயில் பாட்டை அல்லவா
தேசிய கீதம் ஆக்கினாய்!
இருப்பினும்
மனிதக்குரல் முழக்கும்
பெருங்கவிஞனே!
மனித‌ மூச்சுக்குள்
இயற்கையின் நுரையீரல் அல்லவா
பதியம் ஆகியிருக்கிறது.
அதனால் தான் நீ
இறைவனை காதலாக்கி
அந்த காற்றுவெளியிடையில்
தேடி தேடி பாடுகிறாய்.
நாங்களோ கோடரியோடு
அலைகிறோம்
பச்சை மரங்களை பலிவாங்க!
காங்கிரீட் கரங்களைக் கொண்டு
ஆற்று மணல் அள்ளி தின்கின்றோம்.
“ஊற்றுப்பெருக்கையே”
உலை வைத்து உண்கிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று
நீ பொங்கி வெடித்தாயே!
அந்த வரிகளைக்கூட வெறும்
பொங்கல் இட்டு விழாவாக்கி
குத்தாட்டம் போடுகிறோம்.
சுதந்திரம் வந்த பின்
“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?”
செல்லாததாய் ஆகி போய்விடும்
என்று நம்பினோம்.
ஆனால்
இன்னும் அந்த‌
வாக்குப்பெட்டியின் இருட்டறைக்குள்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
வாக்குப்பெட்டியையே நம் கையில்
இலவசமாய் கொடுத்து விட்டு
நாட்டையே விழுங்கி ஏப்பமிடும்
சூதுகள் கவ்வும் இந்த
புண்ணிய பூமியில் மிகவும்
புண் பட்டுத்தான் கிடக்கின்றோம்.
வெள்ளம் வந்தபோது தான்
ஆறுகள் ஏரிகள் எல்லாம்
துகிலுரியப்பட்ட துர்சித்திரங்கள் கண்டோம்.
வானம் கூட பாடியது
உன் “பாஞ்சாலி சபதத்தை”!
இயற்கை சீற்றமே ஆடையாகி வந்த போது
மனிதனின் நிர்வாணம் கண்டு
உள்ளங்கள் கூசினோம்.
நிவாரணங்களைக்கொண்டு மறைத்த போதும்
இந்த‌ சுரண்டல் வக்கிரத்தின்
சமுதாய ஆபாசமே
எங்களை தலைகுனியச்செய்து கொண்டிருக்கிறது.
பாரதி என்ற எரிமலையே!
எட்டய புரத்தில் நீ
எட்டிப்பார்த்த போதும்
இந்த தேசமே உன் அனல் வீச்சில்
எழுந்து கொள்ளப்போகிறது.
உன் பாடல்கள்
அச்சு மையில் அடி பட்டு
புத்தகங்களின் மார்ச்சுவரியில்
புதையுண்டு போகவா
அவதாரம் செய்தன?
இல்லை இல்லை..
பிஞ்சு உள்ளங்கள் கூட‌
அதோ ஒலிக்கின்றனவே!
உன் எழுத்துக்களில் எப்போதுமே
உதயம் ஆகுவது
புதுப் புது யுகங்கள் தான்!
அதோ அவை ஒலிக்கின்றன..
“ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!”

 

News

Read Previous

முதுவை சங்கமம் 2015

Read Next

துபாயில் நடந்த முதுவை சங்கமம் 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *