காக்கிச் சட்டை

Vinkmag ad

காக்கிச் சட்டை
~~~~~~. கவிக்கோவின் கவிதை

உங்கள் தாலியைச்
சுமப்பவள்தான் நான்
இருந்தாலும்
உங்கள் காக்கிச் சட்டையை மட்டும்
துவைக்கச் சொல்லாதீர்கள்
என்னை

இந்த
இரத்தக் கறைகளில்
கூக்குரலைக் கேட்கிறேன் நான்

கூக்குரலை என்னால்
கழுவ முடியாது

இந்த இரத்தக் கறை
என் குங்குமத்திடம்
நியாயம் கேட்கிறது

சட்டைக் கறைகளையாவது
கழுவிவிடலாம்
உங்கள் மீது படிந்த கறைகளை
எப்படிக் கழுவுவீர்கள் ?

ஆடை
மனிதனின் அடையாளம்

ஆனால்
உங்களுடைய ஆடை ?

இதை உடுத்தும்போது
நீங்கள்
நிர்வாணமாகிறீர்கள்

இதை அணியும் போது
இதயத்தை ஏன்
கழற்றி வைத்துவிடுகிறீர்கள்

கடமைக்குக் கண்ணீர் இல்லை
ஒப்புக்கொள்கிறேன்
கண்கூடவா இல்லை ?

ஆடுகளுக்குத்தான்
உங்களைக்
காவலாக வைத்தார்கள்.
ஆனால்
ஓநாய்களுக்கல்லவா
நீங்கள்
பற்களாகிவிட்டீர்கள்

சட்டம்
-அந்த அநாதைப் பெண்-
அவளுக்கல்லவா நீங்கள்
பாதுகாவலர்கள்?
பலாத்காரம் செய்கிறவர்களுக்கல்லவா
நீங்கள்
பக்கத் துணையாய் இருக்கிறீர்கள் ?

மூட்டைப் பூச்சிகளை
நசுக்கிவிடும்
உங்கள் கை
ரத்தக் காட்டேரிகள் என்றால்
கும்பிடுகிறதே?

என் கூந்தலுக்குப்
பூக்கள் வேண்டும்தான்
ஆனால் அதற்காகப்
புன்னகைகளைப்
பறித்துக்கொண்டு வராதீர்கள்

என் நெற்றிக்குக்
குங்குமம் வேண்டும் தான்
ஆனால் அதற்காக
ரத்தத்தை கொண்டுவராதீர்கள்

என் பசிக்குப்
பருக்கைகள் வேண்டும்தான்
ஆனால் அதற்காகக்
கண்ணீர்த் துளிகளைக்
கொண்டுவராதீகள்

உங்கள் துயரங்களைப்
பகிர்ந்துக்கொள்ளத்
தயாராயிருக்கிறேன்
ஆனால் உங்கள்
கறைகளுக்கும் என்னைப்
பங்காளி ஆக்கிவிடாதீர்கள்

காக்கிச் சட்டை
சட்டத்தின் கவசம்;
சில சாமியார்களின்
காவியுடைபோல்
இதையும்
வேஷமாக்கிவிடாதீர்கள்
( கடந்த ஆண்டு 02.06.2017 அன்று ரமழானில் நம்மைவிட்டு மறைந்த அண்ணன் கவிக்கோவின் இந்தக் கவிதையை இன்று இலக்கியக் கழகத்தின் வாட்ஸ் அப் குழுமத்தில் பதிவிட்ட நண்பர் அசன்ஷேக் அவர்களுக்கு நன்றி) https://m.facebook.com/story.php?story_fbid=1998721400444281&id=100009193222659

News

Read Previous

ஹாங்காங் தமிழ் மலரின் மே 2018

Read Next

பனஞ்சர்க்கரையைப் பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *