கணவன்

Vinkmag ad

 

’கண்’ அவன் என்றதால்தான்

கணவன் என்று பெயர்பெற்றாயோ?

என்னமாயம் செய்தாயோ?

ஈன்றெடுத்தோரை மறந்தேன் !

 

உண்டுகளித்த உடன்பிறந்தோரை

நான்மறந்து போனேன் !

சேர்ந்து படித்த

சிநேகிதிகளையும் துறந்தேன் !

 

கடமை அழைத்ததால் – உன்

உடைமையான என்னை

தனிமையில் விட்டுவிட்டு

அயல்நாடு வந்துவிட்டாய் !

 

அமைதியிழந்த நான்

அனலிலிட்ட புழுவானேன் !

அத்தனை உறவுகளும்

அந்நியமாகிப் போயின !

 

உன்னுடன் நானிருந்தவேளை

ஒருநாள் கூட நிமிடமாகியது !

நீயில்லாத நேரங்களோ

வினாடிகளும் யுகங்களானது !

 

வாய்ப்புக் கிடைத்தது

’விசா’ என்னும் வடிவத்தில் !

விசாரணை ஏதுமின்றி

விமானம் ஏறிவிட்டேன் !

 

உன்னருகே நான்வந்தநேரம்

கோடைகூட குளிர்கிறது

வாடைக்காற்று வசந்தமாகியது

பாலைகூட பசுஞ்சோலையாகியது !

 

நம்சந்தோஷ வாழ்வின்

சுகமான ராகங்கள்

தித்திக்கும் தேனாக

நம்முக்கனிக் குழந்தைகள் !!

 

நீ எனக்காக எழுதிடும்

கவிதைகள் காவியம் கண்ணா !

வடித்திடும் வரிகளோ

நான்பெற்ற பாக்கியம் அன்பே !

 

கல்லையும் மெழுகாக்கும் – உன்

கவிதைப் புதையலுக்கு முன்

கனிவான என் மனதால்

என்ன செய்யக்கூடும் !

 

பிரிவே நம்வாழ்வில்

இனிவேண்டாம் அன்பே !

கணவன் நீ கவிதைபோல்

காலமெல்லாம் என்னுடனிருப்பாய் !

காதல் நிறைந்த கணவனுக்காக…

காரைக்குடி பாத்திமா ஹமீத்

ஷார்ஜா

 

நன்றி :

தமிழ்த்தேர்

ஆனி மாத இதழ்

ஜுன் 2012

News

Read Previous

தேர்தல்

Read Next

ஈரம்

Leave a Reply

Your email address will not be published.