கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

Vinkmag ad

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
-( பி எம் கமால் , கடையநல்லூர் )

கடவுளே பதில்சொல்வாய் !
(கவிக்கோ அப்துல்ரகுமான்)

எங்கள் சரித்திரத்தின்
இருண்ட !காலமது
ஏகத்துவச் சுடர்
எண்ணெய் இன்றி
இருட்டுப் போரில்
இளைத்துக் கொண் !டிருந்தது
கிரகண நோயில்
கிரணங்கள் அழுக
செங்கதிர் மெல்லச்
செத்துக்கொண் டிருந்தது !
கலங்கரை விளக்குகள்
கருப்பாய் எரிந்தன !
கண்களை இமைகள்
கடித்துத் தின்றன !
புதியதோர் விடியல்
புலருமா என்றே
இந்த பூமி
ஏங்கிய போது
ஜீலானில் உதித்ததோர்
ஜீவஜோதி !
விண்ணின் பரிதியும்
வெட்கிக் குனியும்
மண்ணின் புதிய
மகத்துவக் கதிர் அது !

அந்தகாரத்தில் அழுக்காகிப் போன
விளக்கையே கழுவிய
விந்தை விளக்கது !
அந்த ஞான தீபம்
ஞாலத்தில் வரவில்லையேல்
எங்கள் பகல்களே
இருண்டுபோ யிருக்கும் !
அன்று-
அந்தத் திருச்சுடர்
அரும்பும் முன்னம்
இறைவனின் நெறியில்
எங்கும் முட்கள்
உதட்டில்தான் கலிமா
உட்கார்ந்திருந்தது
இதயங்களிலோ
எத்தனையோ சிலைகள் !
பள்ளிகள் இருந்தன
பக்தர்கள் இல்லை !
பாங்கொலி கேட்டது !
வரவேற்பில்லை !
ஒழு இருந்தது
உடல் மட்டும் கழுவ !
தொழுகை நடந்தது –
தோற்றச் சடங்காய் !
சஜ்தாத் தழும்புகள்
இருந்தன; அவையோ
மனிதரின் கால்நகம்
பட்ட வடுக்கள் !

ரமழான் நோன்புகள்
ராத்திரி விருந்தாய்
உண்ணும் வேளையில்
மட்டும் மாற்றம் !
அளவோ மற்ற
மாதத்திலும் அதிகம் !

பகலில் வயிறு மட்டுமே
பட்டினி கிடந்தது !
ஆண்டுதோறும்
ஹஜ்ஜும் நடந்தது !
வழிபட அல்ல !
வணிகத்திற்காக !
உல்லாச யாத்திரை
ஊர்வலமாக !

ஏழை வரியும்
ஈந்தனர் அதற்கு
கடவுளிடமே
கள்ளக் கணக்கு !

வல்லவன் திருமறை
வாக்கிய வீதியில்
வாய்மட்டும் நடந்தது –
வாழ்க்கை அல்ல !

உயர்நபி ஹதீதுகள்
உபயோகப் பட்டன –
மேடைப் பேச்சின்
மேற்கோள்க ளாக !

இறைச் சட்ட அறிஞரின்
எழுது கோல்கள்
ஆளுகின்ற
அதிகார வர்க்கம்
நட்டுவம் செய்ய
நாட்டியம் ஆடின !

ஈமான் என்ற
இரும்பின் மீது
சுயநலம் என்ற
துருப்பிடித் திருந்தது !

இஸ்லாமிய வேஷத்தில்
இபுலீசு இருந்தான் !
இறையவன்உணர்த்திய
இலட்சியத் திருநெறி
காலத்தால் அல்ல;
கவலையால் கிழண்டது !

ஆதரிப்பாரின்றி
அநாதை ஆனதால்
நரை திரை தோன்ற
நரம்புகள் உலர
உரைதடு மாற
உடல் நடுநடுங்க
கண்ணொளி மழுங்க
காதொலி மறுக்க
வியாதிப் படுக்கையில்
வீழ்ந்து கிடந்தது
செத்துக்கொண்டிருந்த
தீன்னெறி காத்துப்
புத்துயிர் அளிக்கஓர்
புனிதர் தோன்றினார் !
ஜீலானில் உதித்த
ஜீவ ஜோதியின்
திருக்கரம் பட்டதும்
தீனுயிர்த் தெழுந்தது !
வயோதிகம் மறைந்து
வாலிபம் நிறைந்தது !
துவண்டமேனி
தூண்போல் நிமிர்ந்தது !
அதன்
விழிகளில் சூரிய
வீரியம் ஜொலித்தது !
உதிரத்தில் நெருப்பின்
உணர்ச்சி கிளர்ந்தது !
குரலில் இடியின்
குமுறல் கேட்டது !
ஆன்மீக அரசின்
அரியா சனத்தில்
உலகம் அதனை
உட்கார வைத்தது !
கொடுங்கால மானாலும்
கொடுத்துவைத்த காலமது !
அதற்கோர் முஹ்யித்தீன்
அகப்பட்டார் !
அக்கால பகுதாதின்
அவல நிலைதானே
இக்கால உலகத்தின்
இழி நிலை ?
இன்னுமோர் முஹ்யித்தீன்
எப்போது வருவார் ?
காலம் கேட்கிறது !
கடவுளே ! பதில் சொல்வாய் !

News

Read Previous

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்

Read Next

பிறந்த நாள்

Leave a Reply

Your email address will not be published.