ஒரு விடியல் காட்ட வா!

Vinkmag ad
ஒரு விடியல் காட்ட வா!
=========================================ருத்ரா
எரிமலைக்கு ஏது
பிறந்த நாள்?
அது ஒவ்வொரு கணமும்
கனல் வீசும் பாட்டாகி
அழல் தெறிக்கும் அலையாகி
மூச்சாகி
பேச்சாகி
நம்மிடையே
கிளர்ந்து நிற்கும்
தமிழாகி அல்லவா நிற்கிறது.
ஓ! பாரதி!
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த‌
நிலை கெட்ட மனிதரை
நினைந்து விட்டால்”
என்று
அன்று நெஞ்சம் கொதித்தாயே
அந்த செங்குமிழிகள்
எங்கள் மண்ணில் இன்னும்
நெருப்புக்கடலை
கடைந்து கொண்டிருக்கிறது.
பாற்கடலின் புளித்துப்போன அந்த‌
புராணப்புளுகுகளை
இன்னும் எங்கள் மீது
கொட்டிக்
கவிழ்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
சாக்கடையின் சாதி மத நாற்றங்களை
பன்னீர் என்று
தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரம்மத்தைத்தோலுரித்துப்பார்த்த‌
வேதங்கள் எல்லாம்
வெம்பிப்போய் உதிர்ந்த பின்னே
அந்த “பிணம் தின்னும் ” சாத்திரங்களை
வைத்துக்கொண்டு
வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
விடுதலை விடுதலை என்று
எல்லோருக்கும் நீ பாடினாயே
அதை காற்றில் பறக்கவிட்டு
உயர் சாதி பூதங்கள் என்று
பூச்சாண்டிகள் பல‌
காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
“ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா”
என்றாயே!
அந்த ஒளியை மழுங்கச்செய்யும்
குல தர்ம அநீதிகளைக்கொண்டு
கொடியேற்றி
ஆளத்துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாரதி எனும்
செம்புயல் பாட்டே
சீறி எழுந்து வா!
இருண்டு போன வானத்தைக்
கீறி ஒரு விடியல் காட்ட‌
வா! வா! வா!.

News

Read Previous

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு

Read Next

துணிந்து செய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *