உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

Vinkmag ad
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

 

பொங்கல் திருநாள் -தைப் பொங்கல் திருநாள் .

உழவர் திருநாள்  – அது அறுவடைத் திருநாள் ,
ஆதவனுடன் எழுந்து ஆண்டு முழுவதும் உழைத்து
அறுவடையின் பயனறிந்து ஆனந்தக்கூத்தாடும்
உழவர் திருநாள் – அது உன்னதத்திருநாள் .
உலகோர்க்கு உணவளித்து உயிர்காக்கும் பணிசெய்யும்
உழவரைப்போற்றவரும் உயரிய  திருநாள்  .
உழவுப்பணி சிறக்க  உயிரோட்டமான அந்த
ஆதவனைக்கும்பிட்டு,அவனுக்குப் பொங்கலிட்டு ,
உழவுக்கு உறுதுணையாம் மாடுகளைக் கொண்டாடி
நன்றி சொல்லும் திருநாளே உழவர் திருநாள்.
சுழன்றும் ஏர்ப்பின்னதுலகமென்று சொல்லிவைத்தார் வள்ளுவரும் .
ஏருழவன் வாழ்வில் ஏற்றம் கண்டாலன்றோ
பாரிலுள்ளோர் தமது பசிதீர்த்தல் சாத்தியமாம் .
விளைபொருளுக்கு உரியவிலை கிடைத்தால்தான்
விளைச்சல் பெருகிவிடும் விவசாயம் தழைத்தோங்கும்.
அரசாங்கம்  அந்தந்த விளைபொருளுக்குரிய
விலைதன்னை நிர்ணயித்து கொள்முதல் செய்வதொன்றே
கொள்ளைகளைத் தடுக்கும். உழவனையும் வாழ வைக்கும்
இடைத்தரகர் ராஜ்ஜியத்தை  இல்லாமல் செய்வதனால்
 உழைத்தவன் கைகளுக்கு உரிய பயன் சென்றடையும் .
விவசாயம் இந்நாட்டின் முதுகெலும்பு ,அதனை
முறிக்காமல் காப்பதுவே முழுமுதற்கடமையாகும் .
பாசனவசதிகளைப் பங்காகச் செய்வதுவும் ,
விதை, உரம் ,கருவிகளைத் தரமாகத் தருவதுவும்
அரசின் கடமை , அதைப்புறக்கணித்தல் மடமை .
 வரப்புயர நீர் உயரும் , நீர் உயர நெல் உயரும் ,
நெல் உயரக்  குடி உயரும், குடி உயரக் கோனுயர்வான்
அவ்வை சொன்னதின் ,அரும்பொருள்தனையுணர்ந்து
செவ்வனே நடந்தால் , செங்கோல் நிலையாகும் .
விவசாயம் தழைத்திடவும், விவசாயி நலம்பெறவும்
இவையெல்லாம் செய்வதே , இனிதான வாழ்த்தாகும்.
 உழவர்தின வாழ்த்துக்கள் ,தமிழர்தின வாழ்த்துக்கள்,
 பொங்கல் நல்வாழ்த்துக்கள், பொங்கட்டும் இன்பமிங்கே .
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .

News

Read Previous

இரட்டை சொற்கள்!

Read Next

கலைந்த மேகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *