உறக்கம்

Vinkmag ad

உறக்கம் 

உடலின் ஓய்வுக்குத் தேவை உறக்கம் 
அதிகம் உறங்குபவன் சோம்பேறி
உள்ளம் உறங்கினால் நிம்மதி. 
மூளை உறங்கினால் முட்டாள் .
விழிப்புடன் உறங்கினால் வெற்றியாளன் . 
உறங்கப்  பாடுவது தாலாட்டு. 
உறக்கத்தைக் கெடுப்பது பாராட்டு. 
உறங்காமையும் ஒரு நோயாகும்
உறங்காதிருந்தால் அற்பாயுளாகும்  ..
அளவோடுறங்கின் ஆற்றல் பெருகும்.  
இரக்கம் 
இரக்கம் என்பது மனித நேயம் .
இரத்தலை வளர்ப்பது இரக்கமேயாகும்  .
ஈதல் செய்ய இரக்கம் கொள்க 
தகுதியுடையோர்மேல்  இரக்கம் கொள்க 
ஏய்ப்பவன் மேல் கொள்ளும் இரக்கம் 
ஏமாளியென்ற பெயர் கொடுக்கும். 
துரோகியின்மேல் கொள்ளும் இரக்கம் 
துன்பத்தையே என்றும் கொடுக்கும். 
சக்திக்கு மீறி காட்டும் இரக்கம் 
சந்தியில் கொண்டுவந்து நிறுத்தும். 
தயக்கம் 
நல்லது செய்ய, வேண்டாம் தயக்கம் 
அல்லது செய்ய , வேண்டும் தயக்கம் 
முயற்சி செய்யக்  கொள்ளும் தயக்கம் 
முன்னேற்றத்தை முழுதும் கெடுக்கும். 
உண்மை சொல்லக்  காட்டும் தயக்கம் 
உள்மனம் என்றும் உன்னை அரிக்கும் .
உதவி செய்யக்  காட்டும் தயக்கம் 
உறவுகள் அகல வழியை வகுக்கும். 
ஐயம் கேட்க கொள்ளும் தயக்கம் 
அறிவு வளரத்  தடையாய் இருக்கும். 
மயக்கம் 
ஆண்களுக்கு  வரும் ஆதிக்க  மயக்கம் 
பெண்களுக்குப் பொன்னின் மேல் மயக்கம் . 
அரசியலார்க்கு என்றும்  பதவி மயக்கம். 
காமுகருக்குச்  சிற்றின்ப மயக்கம் .  
முற்றும் துறந்தவருக்கு முக்தியில் மயக்கம்.   
பகவானை நம்புவோர்க்கு பக்தி மயக்கம். 
மதுவின் மயக்கம்  மதியைக் கெடுக்கும் 
மங்கை மயக்கம் மதிப்பைக்  கெடுக்கும் 
பணத்தின் மயக்கம் பண்பைக் கெடுக்கும் .
அகந்தை மயக்கம் அன்பைக் கெடுக்கும். 
காதலின் மயக்கம் கண்ணை மறைக்கும். 
 
வர்க்கம் 
உழைக்கும் வர்க்கமாக இரு -அது 
உயர்வை என்றும் கொடுக்கும்- அண்டிப் 
பிழைக்கும் வர்க்கமாயிருந்தால் 
அவமானம்தான் கிடைக்கும். 
அதிகாரவர்க்கத்தின் ஆட்டமெல்லாம் 
சிலகாலம்தான் நடக்கும். 
சதிகாரவர்க்கத்தின் திட்டங்களை  
சட்டம் ஒருநாள்  தடுக்கும். 
வர்க்கபேதங்கள் பாராதவரை 
வையகமென்றும் மதிக்கும். 
வர்க்கபேதத்தை தூண்டிடுவோரை 
வருங்காலம் இனி மிதிக்கும் .
மக்களுக்காக வாழ்பவர்தானே 
மரியாதைக்குரிய வர்க்கம். 
நாமும் அப்படி வாழ்ந்துவந்தாலே 
 நானிலம் நமது சொர்க்கம். 
 
கலக்கம் 
பிறந்தது முதலாய் , இறப்பது வரையில் 
சிலபேருக்கு எதிலும் கலக்கம் .
கலக்கத்தோடு காரியமாற்றின் 
தவறுகள் அதிகம் வருவது வழக்கம் . 
இழப்புகளுக்குக் கலக்கம் கொண்டால்  
இழந்தவை எப்படி திரும்பக் கிடைக்கும்.  . 
கலக்கம் கொண்ட மனதில் என்றும் 
நிறைந்திருக்கும் நிறைய  குழப்பம் . 
அறிவும், தெளிவும், துணிவுமிருந்தால் 
அகத்தில் என்றும் வேண்டாம்  கலக்கம் . 
தன்னம்பிக்கை இருப்பவர் மனதில் 
தயக்கம் கூட  வந்திடத் தயங்கும் .
  
அன்புடன் 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
29.7.2020
 
  

News

Read Previous

தமிழகக் கிராமியக் கலைகளும் பண்பாடும்

Read Next

வாசல்

Leave a Reply

Your email address will not be published.