உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு!

Vinkmag ad

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு!
1
கத்தும் குரலில் காற்று வருமோ
கடலை மலையை கலக்க வருமோ
செத்த பின்பும் மூச்சு விடுமோ
சிறுதீ யுடலை தீண்ட விடுமோ
மத்தி னிடையே மாக்கட லாமோ
வனிதை சொல்லும் வற்கட மாமோ
வித்தை மறந்த வீணர் தாமே
மேவும் வினையோ மேயும் மடியே!
2
முயற்சி ஒன்றே முழுதுடல் பயனே
முனிவர் என்றும் முழுதும் விழலே
உயர்வு ஒன்றே உரிமை உலகே
உள்ளக் கனவு உண்மை உழைப்பே
அயர்வு மில்லை அரிதே கல்வி
ஐயன் குறளே அறிவுப் பள்ளி
புயலும் மழையும் புன்னகைக் கொடையே
புரிந்த மனமே பூட்டு மேறே!
3
சிறுவர் சிறுமி சிற்றில் தேரே
சேர்ந்து பழக சிந்தைச் சிறகே
துறக்கம் இல்லை தூவினை யோடே
தொல்தமி ழாளா தோணி கடலே
உறங்கும் உலகோ ஊமை வானோ
ஊக்கம் ஒன்றே உயர்மதி யூனே
பிறக்கும் நாளும் சிறக்க வாழ
பெய்வளை மாதே பிள்ளைப் பேறே!
4
அறமும் பொருளும் அன்புப் பாலம்
அடைந்த மனமே ஆற்ற லாகும்
முறத்தைப் போலே நேவும் நாளும்
முத்துப் பிறக்க முழங்கு மோலம்
பறவை வானில் சிறகை விரிக்க
பார்வை மண்ணே பாய்புலி கண்ணே
உறவை போற்றும் உரிமை மாதே
உயிரும் நீயே உலகு மில்லே!
5
சண்டை வம்பு சச்சர வுண்டு
சாகத் துணியும் சாகச முண்டு
மண்டை உடையும் மல்லல் மனையோ
மனிதம் போற்ற மதியுடம் பாடே
கெண்டை மீனும் கெளுத்தி தானும்
மேயும் பொய்கை மென்னீர் வைகை
உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு
உண்டோ பிரிவு இரவு பகலே!
6
மொண்டு கொடுக்க மோக மழையே
முற்றும் வீணே மொள்ளாக் கிணரே
சிண்டு படியும் பண்டு கொடையோ
சேர்த்து அணைக்க சிரிப்பு தடையோ
வண்டு சோலை வரிவளை மாதே
கண்டும் ஏனோ காம மிலையோ
உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு
உண்டோ பிரிவு இரவும் பகலே!

பாவலர் சீனி பழனி, சென்னை. 05-07-2021.

News

Read Previous

இளம் தென்றல்

Read Next

கொரோனா சட்னி…….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *