இன்றையச் செய்திகள்..

Vinkmag ad

இன்றையச் செய்திகள்.. (கவிதை) வித்யாசாகர்



கள்ளச்சாராயம்

அறுபத்தினாலு பேர்
கள்ளச்சாராயம் குடித்து மரணம்;
அறுபத்தினாலு குடும்பங்களின்
அழுகைக்கு
தீர்வில்லா
நம் கொடூர மௌனம்..

எதற்கும் வருத்தமின்றி
திறந்திருக்கும் டாஸ்மாக்;
பலரின் கொள்ளிக்கு முன்பே
முதல் தீயிட்ட அரசு..

குடிக்க விற்றுவிட்டு
குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்;
குடியினால் குடி முழுகும்
கண்ணீரில் நேரும் மரணம்..

புரியாத திட்டங்களும்
திட்டமில்லா வாழ்க்கையுமாய் நாம்;
நம் கண்முன்னே
நம்மால் அழியும் உலகு..
—————————————————————————

விபத்து

ங்கே ரயில் கவிழ்ந்தது
அங்கே பேருந்து இடித்துச் சிதறியது
நான்கு பேர் காயம்
ஆறு பேர் மரணம்

அச்சச்சோ!!
கண்களை மூடிக் கொள்கிறேன்
மனது பதறிக்கொண்டேயிருக்கிறது.,

முட்டாள்கள் என்றோ
பாவிகள் என்றோ
பாவம் என்றோ யாரைச் சொல்வது?

நாமெல்லோருமே
மாறாதவரை
மாற்றிச் சிந்திக்காதவரை
மரணங்களும் காயங்களும் தொடரும்..

ஒருநாள்
நம்மையும் அந்த பேருந்தோ
ரயிலோ
மரணமோ காயமோ தொடலாம்

தொடும்முன் யோசித்தால் அந்த
நான்கு பேரோ
ஆறு பேரோ
இனி காப்பாற்றப் படலாம்..
—————————————————————————

தகாத உறவு

கள்ளக்காதல்
அடுத்த வீட்டு மனைவி ஓட்டம்
கணவன் பிடிபட்டான்

அசிங்கமான நம்
அடையாளம்..

காதல் என்பது
அன்பென்று மட்டும் அறியப்படுகையில்
காமம் என்பது
அங்கங்கே
அதுவாக மட்டும் இருந்துக்கொள்ளும்..

உடம்பிற்கு
வாசனைதிரவியம் பூசிக்கொள்ளும் அறிவு
அதைச் சோற்றில்
போட்டுக்கொள்ளாத அறிவு
காதலையும் உரிய இடத்தில்
காட்டிக்கொள்ள வளர்தலே உயர்வு..

கண்ணியமும்
பண்பும்
உயர்ந்து நிற்கையில்
காதல் கரைபடுவதில்லை..

காதல் கசந்திடாத மனது
அதைக் கண்டவரிடத்தில்
காட்டிக்கொள்வதில்லை..

காதல் கொள்வது
மனதும் மனதும் கொள்வது
உடலும் உடலும் தொடுவதல்ல

விருப்பட்டவரிடத்திலெல்லாம்
கடைவிரிப்பதல்ல,
விரும்பியவரிடம் கண்களால் பேசி
உரியவரிடத்தில் மட்டும்
உயிரோடு பேசுகிறது காதல்..

விரும்புவதையெல்லாம்
அடைவது காதலல்ல
பேராசை

விரும்பினாலும்
அளவோடிருக்கும் அன்புதான்
காதல்..

காதல் பிசகல்ல
பிசகிக் காதலிப்பது பிசகு..
—————————————————————————

அரசியல்

அவர் கட்சி தாவினார்
இவர் விலகினார்
அவர் அவரிடம் சண்டை
இவர் அவருக்கு திடீரென ஆதரவு
மந்திரி வெளிநடப்பு
முதலமைச்சர் சொத்துக்குவிப்பு

யார் இவர்களெ ல்லாம்?

இவர்கள் யாராக
இருக்கவேண்டும்?

இவர்கள் யாராக இருந்தால்
இப்படியெல்லாம்
நடக்காது.. ?

நாம் யார்?

நமக்கு எது சரி?

நமக்கு யார் வேண்டும்?

நமது பொறுப்பு என்ன ?
நமது பலமென்ன ?

அரசியல்
நாமுண்ணும் சொறல்ல
நமை ஆளும் தீ..

வெளிச்சம் தருவதும்
வீட்டை எரிப்பதுமாய்
நிகழும் ஒன்று..

நாம் வாழுவதை
திசைமாற்றும் ஆயுதம்..

நம்மை யாராக ஆக்கவேண்டுமென
முடிவுசெய்ய
நாமாக்கிய இருக்கை; நம்மைத்
தூக்கிநிறுத்தும் இரு கை..

நாம் நேரே பயணிக்க
வழி தரும் நிலத்திற்கு ஈடு
நம் மண்ணின் பெருமை..

நாம் படிக்கவேண்டிய
அணுகக் கூடிய
ஆளத்தகுந்த திறன்..

வருபவருக்கு வழிவிட்டு
வழிநடத்தி
வெல்பவரை வாழ்த்தும் கம்பீரம்..

வெற்றி
தோல்வி
கருதாது
அலசி
பொதுநலன் பேணும் நடுநிலை..

நடுநிலையூரிய மண்ணிலிருந்து
முளைக்கலாம்
நமக்கான அந்த விதை..

அல்லது
இதுபோன்ற செய்திகள் விளைந்திடாத
நாளேட்டின் நிலை..
———————————————————————————-
வித்யாசாகர்

News

Read Previous

சென்னையில் போதிதர்மா குறித்த சர்வதேச கருத்தரங்கு

Read Next

கவியரசு கண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *