இன்பம்

Vinkmag ad
இன்பம்  என்பது இப்படிப்பட்டதெனில் ,

அகரத்தின் முதல் எழுத்து ‘அ ‘ எனும்  போழ்து   தமிழ் இன்பம்
அம்மாவின் கைபிடித்து  ‘அம்மா  ‘ எழுத தமிழன்னையின்   இன்பம். .
தவம் செய்வது தனிமனித இன்பம்
மாதவம் செய்வது மனிதாபிமான இன்பம்.
திருக்குறள்  படிக்கப் படிக்க இன்பம்
திருக்குர்ஆன் கேட்க கேட்க இன்பம் .
திருமறையாம் விவிலியத்தில் தமிழ்  இன்பம்
வேதமறையில் இயேசுவின் பிறப்பு  வரலாறும்  இன்பம்.
செந்தமிழ் கேட்பது செவிக்கு இன்பம்
செம்மொழி கற்பது கற்பவருக்கு  இன்பம்.
கண்விழித்தவுடன் தன்  கைகளைப் பார்ப்பது இன்பம்
கரம் இழந்தவர்க்கும் , கால் இழந்தவர்க்கும்,
கண்விழி இழந்தவர்க்கும்  ‘ நம்பிக்கை ‘ இன்பம்.
கருணை என்னும்  காருண்யம் இன்பம்.
 கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கு   பறப்பதில்  இன்பம்
 கூட்டுக்குள்  அடைபட்ட பட்டுப்புழுவுக்கு  உலகம் காண்பதில் இன்பம்.
அறம் ,பொருள் இரண்டும் அறவாழ்வின் இன்பம்
இன்பத்துப்பாலோ  இவ்விரண்டின் தேடுதல்  இன்பம் .
இளமைத் துள்ளலில் சிற்றின்பமே பேரின்பம்
இன்பத்துப்பாலை  விடுத்தாலும் திருக்குறள்  இன்பம்.
 மணற்பரப்பில்  நண்டுக்கு  கால்  புதைத்து ஓடுவது  இன்பம்
மணலில் வீடு கட்டி விளையாட நமக்கும்கூட  இன்பம் .
மணலில் நிற்கும் நம் கால் தொடும் அலைகளின்  சுகத்தில் நிற்க  இன்பம்
மனது நிறைய ஆசைகளுடன்  தொடுவானம் தெரியாத  கடலின்  நீளம் இன்பம்.
அலையில்   ஆண்  அலை, பெண் அலை  காண இன்பம்
ஆள் உயர  ஆண் அலையில் ஆரத்தழுவும்  பெண் அலையின் இன்பம் .
மீன்களை ரசிப்பதில் மனிதனுக்கு இன்பம்
மீனவன் வலையில் மாட்டாமல் இருப்பது மீனுக்கு இன்பம்.
மண்ணுக்கும்  மழைத்துளியில்   நனைவதில்  இன்பம்
மழைத்துளிக்கோ அருவியாக வீழ்வதில் இன்பம்.
மலையரசனாம் பாறைகளுக்கு  மனிதர்களால் பதவி இன்பம்
மலையேறி ஆயாசத்தில் ஓய்வெடுக்க உட்கார்ந்த  சிம்மாசனமும் இன்பம்.
மரங்களுக்கு மனிதர்களின் அன்பும்,  பறவைகளின்  இளைப்பாறுதலும்  இன்பம்
மரங்கள்  வளர்த்த  பிரபஞ்சத்திற்கும், பல்லுயிர்மைகளுக்கும்  பழங்கள் இன்பம் .
கவலைகள் மறைந்து போதல் மகிழ்ச்சியின்   காலத்தில்  இன்பம்
கமலையின் தண்ணீர்  விடுவிப்பில் வாய்க்கால்  தொடுவது இன்பம்.
மனம் என்னும் மலர்த்தடாகத்தில் நல்ல சிந்தனை இன்பம்
மனமுவந்து  தர்மம் செய்வது தார்மீக இன்பம் .
தண்ணீரில் தண்டு நீட்டத்தில்  உயர்ந்து நிற்பதில் தாமரைக்கு இன்பம்
தண்ணீர் முத்துக்கள் பட்டும்படாமல் தவழ்வது  தாமரை இலையின் இன்பம்.
கவிஞனுக்கு  நொடியில் உருவாகும்  சொற்களின்   வினாடிநேர  இன்பம்
கவிதைக்கோ கவிஞர்களின் சிந்தனையில்  சொற்களின் வரிகள் இன்பம்.
உயிர், மெய், உயிர்மெய் என்று உருவெடுத்த’ அம்மா’  சொல்லும் இன்பம்
உயிரெழுத்தாம்  இரண்டெழுத்தில் ‘குரு ‘ வழியில் கல்வி இன்பம் .
குறிலும், நெடிலும்  சேர்ந்த ‘பிதா’ வினால் பிறப்பின்பம்
நெடிலும் நெடிலும்  சேர்ந்த ‘மாதா ‘ வினால் மழலை இன்பம்
பட்டாம்பூச்சிகளுக்குப்  பறந்து திரிந்து  பூவில்  அமர்வது  இன்பம்
பறவைகளுக்கு வானில் பறப்பதும்,  மரத்தில் கூடு கட்டுவதும் இன்பம்.
யானைகளுக்கு ஏகாந்தமான  வனத்தில்  நடப்பது இன்பம்
யானைகளை சாகசம் செய்விப்பதில் மனிதனின் தனி  இன்பம்.
பூக்களுக்கு பூத்துக் குலுங்கும் செடி, கொடி ,மரம்  இன்பம்
பூவையருக்கோ பூவைக் சூடும்  பின்னல் சடையும் இன்பம்.
மண்ணுக்குள் பிறப்பெடுக்கும் வைரத்துக்கும் இன்பம்
கடலுக்குள்  சிப்பிக்குள் பிறப்பெடுக்கும் முத்துக்கும் இன்பம்.
வைகை மைந்தன்  முத்துவின் வைரவரிகளில் தமிழ் இன்பம்
வைரமுத்துவின்  நாவில் விளையாடும் சொற்களின் இன்பம் .
பழங்கதைகளை  இளையவர்க்குச்  சொல்வது  முதியவர்களின் இன்பம்
பழமையின்  வழியில் புதுமையும் படைப்பது இளையவரின் இன்பம்.
பனியில் நனைவதில் தரைப்புற்களுக்கும் ‘தை’யின்  இன்பம்
பனியின் துளிகள்  வெண்பஞ்சாக புல்லின் நுனியில்   இன்பம்.
பல்லவி பாடும் பனித்துளிகள் கண்டு ரசிக்க இன்பம்
பல்லவியும் பாடும் மார்கழி மாத ‘ பண் ‘  இசையும் இன்பம் .
மதி நிறைந்த நன்னாளின்   மார்கழியில் திருப்பள்ளியெழுச்சி இன்பம்
மதி நிறைந்தவ்ர்க்கும் மதிப்பளிக்கும் மார்கழி இசையரங்குகள்  இன்பம்.
பிறைமதி பார்க்கும் ரம்ஜான், பக்ரித்    நோன்பின் இன்பம்
பிறந்ததினம்  கொண்டாடும் ‘மிலாடி நபி’ நாளும் இன்பம் .
ஈத் ‘ தினத்தில் எளியவர்க்கு   உதவுதல் செல்வத்திற்கு இன்பம்
ஈகையின் மகிமையை உலகுக்கு உணர்த்திய நாள்  ‘ஈத் ‘திருநாள் இன்பம்.
‘சிறுபஞ்சமூலம் ‘ நூலின்  ஐந்து இன்பங்கள்
‘கண்’ களின் வழி இன்பம் —     இரக்கம் கொள்ளுதல்
‘கால்’ களின் வழி இன்பம் —    பிறரிடம் இரந்து செல்லாமை
‘எண் ‘ களின்  வழி இன்பம் —  முடிவைத் துணிந்துரைத்தல்
‘பண் ‘ களின் வழி இன்பம் —-  இசை கேட்போர் நன்றெனப் புகழுதல்
‘அரசனின் ‘ இன்பம் —————குடிமக்களை வருந்தாமல் காப்பது .
கையெழுத்தைக் கண்டு உறவுகளை  அருகாமையில் உணர்வது கடித இன்பம்
கணினியின் துணையுடன்   மின்னஞ்சலில்    தகவல் தொழில்நுட்பம்  (e -mail ) இன்றைய இன்பம் .
மக்களுக்குத் தொண்டு செய்வது மன்னனின்-மகேசனின்  இன்பம்
மண்ணிற்குப் பெருமை செய்வது மன்னனின் மக்களுக்கு இன்பம்.
புத்தராக, ஏசுவாக,  நபிகளாக  நாமெல்லாம்  வாழ்வதில் இன்பம்
 புது ஆற்றலுடன் மனிதர்களின் நல்வழியில்  பின்தொடர்ந்து  வாழ்வது இன்பம்.
பிரபஞ்சம்  மனிதனுக்குக்  கொடுத்த  கொடையே  ‘இயற்கை ‘
பிரபஞ்சத்தில்  மழையின் நீர்  பிரவாகமாகும் நீர்வீழ்ச்சிகள் !
இயற்கையைக் காப்பாற்றுவதில்  ‘இன்ப நாள் ‘ கொண்டாடுவோமா ?

இந்திரன் விழா எடுத்த விழாவாக “சுற்றுச்சூழல் காப்போம் ”  இன்பமாக!.

News

Read Previous

சென்னையில் நூல் வெளியீட்டு விழா

Read Next

வழிவகுத்து நின்றிடட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *