தினமணியைத் தொடாதே தீட்டு

Vinkmag ad

தினமணியைத் தொடாதே தீட்டு

சாவுமணி!
~
ஒரு பக்கம் மோடியும் அமித்ஷாவும் போட்டி போட்டுக் கொண்டு தமிழின் தொன்மையை வளமையை பாராட்டுகிறார்கள். தன் உரைகளில் குறளோ சங்க இலக்கியமோ சொல்வதை வழமையாகக் கொண்டிருக்கிறார் பிரதமர்.

இவை எல்லாமே நடிப்பு! இவர்களுக்கு தமிழர் மீதோ, தமிழ் மீதோ , தமிழ் இலக்கியங்கள் மீதோ, மதிப்பு, பற்று எதுவும் கிடையாது என்பதே உண்மை!

கொரோனாவை காரணம் காட்டி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சில பகுதிகளை குறைத்தார்கள். அப்படி
10ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்திட்டத்தை ,
குறைத்தபோது, இவர்கள் முதலில் கைவத்தது திருக்குறளில்தான்.

அதுபோல திருக்குறளை சமஸ்கிருத நூல்களோடு தொடர்புபடுத்தி ‘Thirukkural An Abridgement of Sastras’ என்ற நூலை தொல்லியல் துறை ஆய்வாளர் இரா. நாகசாமி என்பவர் எழுதினார். இது குறளை சமஸ்கிருத மயமாகச் சித்தரிக்கும் ஆய்வு நூல்.

இதற்காக நாகசாமிக்கு பாஜக அரசு,
பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வள்ளுவருக்கு காவி போர்த்தி மகிழ்கிற கூட்டமே ஆர்எஸ்எஸ் கூடாரம்.

அதன் கைத்தடிதான் தினமணி.
அதில் ஒரு இழிபிறவி திருக்குறளை மநுவோடு ஒப்பிட்டு குதூகலிக்கிறார்.

‘சதுர்வர்ணம் நமா சிருஷ்டம்’ என புளகாங்கிதமடைகிற பகவத்கீதை போன்றதுதான் மநுநீதியும் . ஆனால் ‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்’
என சனாதனத்தின் மீது காறித்துப்பும்
நூல் குறள்.

‘வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவர நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி!’ என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார். குறளை நன்குணராது தினமணியில் குறுக்குசால் ஓட்டியிருக்கிறார் ஆர்.நடராஜன் என்கிற ஆர்எஸ்எஸ்காரர். இவர் வள்ளுவரை மநுவைப் போன்ற ஒரு ஆணாதிக்கவாதியாகக் காட்ட தினமணியில் சிரமப்பட்டிருக்கிறார்!

பிறப்பிலிருந்து இறப்புவரை ஆணின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியவள் பெண் என்கிறான் மநு. ஆனால் நம் வள்ளுவனோ ‘சிறைகாக்கும் காப்பு
எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை’ என பெண்ணைக் கொண்டாடுபவன்!

இன்னொரு குறளில் ‘சோர்விலாள் பெண்’ என்று பெண்ணைப் போற்றுகிறான் வள்ளுவன்.

பரத்தை என்கிற சொல்லே குறளில் கிடையாது. மாறாக ‘வரைவின் மகளிர்’ என்கிறார் வள்ளுவர்.

பெண்ணுக்கு அவளின் உடல் மீது உள்ள உரிமையை நிலைநாட்டும் சொல் இது. இன்று திருமா ‘அத்து மீறு’ என்கிறார் அல்லவா! அப்படி குடும்பம் என்கிற வரையறையை மீறிய பெண் (அ) குடும்பம், திருமணம் போன்ற வரையறைக்கு வெளியே இருக்கும் பெண் என்பதைக் குறிக்கும் வகையில்தான் ‘வரைவின் மகளிர்’ என்கிறார் வள்ளுவர்.

பரத்தை என்று பெண்ணை சொல்லாத வள்ளுவர் பரத்தன்
(‘நண்ணேன் பரத்த நின் மார்பு ‘- குறள் 1311) என்று ஆணை அழைக்கிறார்.

மநு ஆங்கிலத்திலெல்லாம் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்கிறார் நடராஜன். குறள் உலகில் 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

மநு ஒரு மத நூல் . குறள் அப்படி இல்லை. அது உலகப் பொதுமறை.

கல்யாணத்தை பிள்ளை பெறும் ஏற்பாடாக சனாதன மதம் கருதிய காலத்தில், ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனச் சிந்தித்தவரே வள்ளுவர். living together எனும் சுதந்திர முறையாக திருமணத்தை சிந்தித்தவர் வள்ளுவர். அவரா பெண்ணடிமை பேசியவர்?

பெண்ணை இழிவுபடுத்துகிற மநுவை, ஓரிரு குறள்களை தவறான பொருளில் சுட்டிக் காட்டி, பெண்ணைக் கொண்டாடுகிற வள்ளுவனோடு சமன் செய்ய முனைகிறது தினமணி.

தினமணிக்கு, தமிழர் சாவு மணியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது!

News

Read Previous

தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்

Read Next

இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *