சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண் கல்வி நிலை

Vinkmag ad
1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புப்படி, சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண்கல்விநிலை  பற்றிய புள்ளிவிவரங்கள்:
1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155 – ஜனசங்கை)  கணக்கெடுப்புப்படி  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் ஏறக்குறைய பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்.
ஆண் பெண் , மணமானவர்,  மதப் பின்னணி பற்றிய மக்கட்தொகை  விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  கிறிஸ்துவ நாடார்கள் (சுமார் இரண்டு லட்சம் பேர்), கிறிஸ்துவர்கள் என்ற பிரிவுக்குள் கணக்கெடுக்கப் பட்டுவிட்டதாகவும், நாடார் குலத்துடன் சேர்க்கப்படவில்லை என்பதும் மேலதிகத் தகவல்.  சென்னை மாகாண கணக்கெடுப்பின் படி நாடார்களின் எண்ணிக்கை 6,52,652 .  இதே ஆறரை லட்சம் எண்ணிக்கையில் உள்ள நாடார்கள் தமிழகம் தவிர்த்து உலகில் பிற இடங்களிலும் இருப்பர் எனவும், எனவே ஆக மொத்தம் உலகளாவிய அளவில் 13 லட்சம் நாடார்கள் இருக்கக்கூடும் என்ற கணிப்பு கூறப்படுகிறது.
சென்னை மாகாண வாழ் நாடார்களில்  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கையும்  பத்தில் ஒருவர் என்ற விகிதமே, மாகாண நிலையையே  இது ஒத்திருக்கிறது.   நாடார்குலப் பெண்களில்  நூறில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். மொத்தம் 2500 ஆங்கிலம் படிக்கத் தெரிந்த நாடார்குல மக்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும்  88  மட்டுமே.,
1901 மற்றும் 1911 மக்கட்தொகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது 1901 இல் 1000 த்தில் 1 பெண்(கள்) படித்திருந்தனர் என்ற நிலை,
அடுத்த பத்து ஆண்டுகளில்…1911 இல் 1000 த்தில் 7 நாடார் குலப் பெண்கள் படித்திருந்தனர் என்று  உயர்ந்திருந்தது.
ஆனால் இது அதற்கடுத்த பத்து ஆண்டுகளில், 1921 இல்  1000  த்தில் 15  நாடார் குலப் பெண்கள் படித்தவர் என்ற அளவிற்கு உயர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனினும்  நூறு  நாடார்குலப் பெண்களில் ஒருவர் மட்டுமே படித்தவர் என்பதே ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழக நாடார்குலப் பெண்களின் கல்விநிலை என்பது வருந்தத் தக்க புள்ளிவிவரம்.  இதே நிலைதான்  மற்ற குலப் பெண்களுக்கும் என்பதையும் எளிதில் நாம் கணிக்கலாம்.
நாடார்குலப் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு திருமணமானவர்கள், திருமணமானவர்களிலும்  ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர்  கைம்பெண்கள். அதாவது,  நூற்றில் 14 நாடார் குலப் பெண்கள் கைம்பெண்கள். இதைப் பெண்களின் பரிதாப நிலை என்கிறது நாடார் குலமித்திரன்.  பெண்களைவிட ஆடவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு நாடார்கள் பலர் தொழில் நிமித்தமாக அயல்நாடு செல்லும்பொழுது குடும்பத்தையும் அழைத்துச் செல்லாததும் ஒரு காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
நாடார்களில் பெரும்பாலோர் விவசாயம், கைத்தொழில், வணிகம் என்று வாழ்வாதாரம் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.  வேலை பார்ப்பவர் எண்ணிக்கை குறைவு என்றும் அதிலும் நாடார்களில்  உயர் அதிகாரி என்ற நிலை  இல்லாது இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.  கல்விநிலையங்கள் அதிகரித்தும், கல்வியின் தேவை பற்றிப் பரவலாக அறிவுறுத்தப்பட்டும்  நாடார்குல கற்றோர் எண்ணிக்கை வருத்தம் தருவதாக உள்ளதாக இந்த இதழ் அறிவிக்கிறது.  பெற்றோர்களை நாடார்குல முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை காட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் தந்துதவிய இதழ்:
நாடார் குல மித்திரன் – 1923 – ஜனவரி  மாதத்தின் 1வது இதழ்

News

Read Previous

எளிதில் தமிழ் படிக்கும் திறனைப் பெற உதவும் ஒரு செயலி

Read Next

விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்

Leave a Reply

Your email address will not be published.