எலந்தப் பழச்சிறுவர்கள்

Vinkmag ad

எலந்தப்பழச்சிறுவர்கள்
———————–
ஐபில் கிரிக்கெட் இறுதிச்சுற்றை எட்டிவிட்டது. “எவன் குடும்பம் எக்கேடு கெட்டால் என்ன? அவருக்கு கூலி அஞ்சு ரூபா கதையாக” உலகமே கொரோனாவால முடங்கினாலும் இந்த கிரிக்கெட் அதன் வழக்கமான வருமானத்தை விடவில்லை.

சிறு வயதில் நாங்கள் “கிட்டி” என்ற விளையாட்டு விளையாடுவோம். விடுமுறை நாட்களில் அம்மன் கோயில் திடலில் கிட்டி விளையாட்டு களை கட்டும்.

நன்றாக செதுக்கப்பட்ட ஒரு முழம் கிட்டி கம்பு. இருபுறமும் கூர்மையாக்கப்பட்ட அரை சாண் அளவு குச்சிக்கு கிட்டிப்பிள்ளை எனப் பெயர்.

கீழே இருக்கும் குழியை நோக்கி வரும் கிட்டிப்பிள்ளையை வந்த திசையிலேயே கிட்டிக்கம்பால் அடித்து ஆட வேண்டும். அடித்த வேகத்தில் வரும் கூரான அரைசாண் குச்சியை எதிரில் உள்ளவர்கள் பிடிக்க வேண்டும்.

கண்பார்வை கூர்மை, தோளில் வலிமை, நெஞ்சில் வீரம் இந்த விளையாட்டிற்குவேண்டும். காரணம் கொஞ்சம் அசந்தாலும் கிட்டிப்பிள்ளை கண்ணைக்கிழித்துவிடும்.

நாங்கள் மேல் சட்டை கூட இல்லாமல் களமாடுவோம்.

நண்பன் மூசா இதில் கெட்டிக்காரன். மூசா அடிக்கிறான் என்றால் நூறடி தள்ளி நிற்கவேண்டும். பிடிப்பதும் இயலாத காரியம்.அந்த அளவு அவனது ஆட்டத்தில் கணித்தல்,வேகம் இருக்கும்.

இதற்கு துணிச்சல் இல்லாமல் சில பணவசதி படைத்த சிறுவர்கள் கிண்ணத்தில் இருக்கும் எலந்தப்பழத்தை தின்றுகொண்டே வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு சன்னல் வழியே வேடிக்கை பார்ப்பார்கள்.

கிட்டி விளையாட்டின் மறு உருவமே கிரிக்கெட்.

கிட்டிக்கம்பைவிட பத்து மடங்கு அகலத்தில் பேட் மற்றும் கூர்மையான கிட்டிப்பிள்ளைக்கு பதிலாக உருண்டையான பந்து கிரிக்கெட்டில் அவ்வளவுதான்.

ஆபத்தான அந்த விளையாட்டை நாங்கள் மேல்சட்டை இல்லாமல் விளையாடினோம்.

இப்போது கிரிக்கெட் வீரர் தலை,முகம், கை, மார்பு,கால் மற்றும் கால்களுக்கு இடையிலும் கவசங்கள் அணிந்து ( இந்த கவசங்கள் எங்களுக்கு கிடைத்திருந்தால் எங்கள் காட்டில் இருந்த தேன் எல்லாவற்றையும் எடுத்திருப்போம்) விளையாடுவதை பார்த்தால் அன்று வீட்டுக்குள் இருந்து கிட்டி விளையாட்டை வேடிக்கை பார்த்த எலந்தப்பழச்சிறுவர்கள் தான் இப்போது கிரிக்கட் விளையாடுபவர்கள் எனப்புரியும்.

வசதியானவர்கள் கிட்டி விளையாட்டை
வசதியாக்கி, வணிகமாக்கி
வளமாக விளையாடுகிறார்கள்

மூசா புரோட்டா மாவு பிசைந்து கொண்டிருக்கிறான்.
பா.திருநாகலிங்க பாண்டியன்

கீழச்சிறுபோது

News

Read Previous

ஒளவையார் வழங்கிய கொன்றைவேந்தன்

Read Next

இசைஞானியும் தென்றல் காற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *