உலக நாடக நாள்

Vinkmag ad

உலக நாடக நாள்

மார்ச் 27

உலக நாடக தினம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.

நான், ராமர், அப்துல் நாசர் மூன்று பேரும் ஒரே பெஞ்ச். வகுப்பு ஆசிரியர் மரியாதைக்குரிய
திரு லுக்மன் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையின் படி வகுப்பு சார்பாக ஒரு நாடகம் நடத்த முடிவு செய்தோம்.

நானும் நண்பன் அப்துல் நாசரும் சேர்ந்து நாடகத்திற்கான ஸ்கிரிப்டை எழுதினோம். அதற்கு பெரும் துணையாக இருந்தவர் மரியாதைக்குரிய திரு லுக்மன் ஹக்கிம் சார் அவர்கள்.

ஒரு வயிற்று வலி நோயாளி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்.

அறுவை சிகிச்சை நாள் அன்று மருத்துவரும், செவிலியரும் எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என பேசிக்கொண்டதை மறைந்திருந்து கேட்கும் நோயாளி திடுக்கிட்டு, மருத்துவமனையிலிருந்து ஓட்டம் பிடிப்பது போன்ற கருத்தில் உருவாக்கப்பட்ட நகைச்சுவை நாடகம்.

ராமர் மருத்துவராகவும் அப்துல் நாசர் செவிலியராகவும், நான் நோயாளியாகவும் நடித்தோம்.

நாடகப் பாத்திரங்கள் தேர்வு கனகச்சிதமாக பொருந்தியதாக சொன்னார்கள்.

எடுப்பான வயிறுடன் நண்பன் ராமர் மருத்துவர் போலவே இருந்தான்.

நெடுநெடு என வளர்ந்து, ஒல்லியான தேகத்துடன், மீசை அரும்பாத முகத்துடன், செக்க சிவந்த மேனியுடன் நாசர் செவிலியராகவே மாறிவிட்டான்.
(முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை செவிலியர் அக்கா ஒருவரிடம் அவனுக்கு செவிலியர் யூனிபார்ம் வாங்கி வந்தோம்)

என்னை சொல்லத் தேவையில்லை. என்னை விட நோயாளிகள் கொஞ்சம் ஆரோக்கியமாக இருப்பார்கள். அதனால் நான் நோயாளி வேஷத்துக்கு சரியாக இருந்தேன்.

அதுதான் என் முதல் மேடை நாடக அரங்கேற்றம். நான் முதலில் எழுத முயற்சித்ததும் அந்த நாடகத்தை தான்.

நாடகம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று

செவிலியராக நடித்த நண்பன் அப்துல் நாசர் அரபு நாட்டில் உள்ளான்.

மருத்துவராக நடித்த நண்பன் ராமர் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு நோயாளியாக படுத்து உள்ளான்

நோயாளியாக நடித்த நான் செவிலியராக உள்ளேன்.

“நிலை மாறும் உலகு”

உலக மேடையில்
மனித கதாபாத்திரத்தில்
அனைவரும் நடிகர்களே

உலக நாடக தின வாழ்த்துக்கள்

பா. திருநாகலிங்க பாண்டியன்
மதுரை

News

Read Previous

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி

Read Next

பத்ர் போர் தந்த பாடம்

Leave a Reply

Your email address will not be published.