ஸிரனோ கற்பனை செய்ததுபோல் பயணம் சாத்தியமா?

Vinkmag ad

(2006ஆம் ஆண்டு எழுப்பட்ட கட்டுரை மீண்டும் உங்கள் முன்)

ஸிரனோ கற்பனை செய்ததுபோல் பயணம் சாத்தியமா?

17-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஸிரனோ டி பெர்ஜெராக் என்ற பிரான்ஸ் தேசத்து எழுத்தாளருக்கு ஒரு விபரீதக் கற்பனை தோன்றியது. பூமியிலிருந்து அப்படியே வாணம் கிளம்புவதுபோல் மேலே கிளம்பி காற்றுவெளியில் சில மணி நேரம் தொங்கினாற்போல் நின்றால் போதும். பூமி கிழக்காகச் சுற்றிவரும்போது கனடாவில் இறங்கி விடலாம் என்று நினைத்தார். “பூமியில் பயணம் செய்து ஏன் களைப்படைய வேண்டும்? எரிபொருளும் மிச்சம். மேலே காற்றினிடையே வட்டமிட்டுக் கொண்டே இருந்தால் நீங்கள் சேரவேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி விடலாம். அவ்வளவுதான்” என்றார் ஸிரனோ.

இத்தனை மலிவான பயணமா? இது பிரமாதமான ஐடியாவாக இருக்கிறதே-அடடா, இத்தனை நாள் இது நமக்குத் தோன்றாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்.  பிளேனில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்யலாம் என்ற யோசனை பார்த்திபன் சொல்லும்வரை தனக்குத் தெரியாமல் ரெண்டு தடவை டிக்கட் வாங்கிட்டேனே என்று ஒரு படத்தில் வடிவேலு ஆதங்கப்படுவார் அல்லவா, அதுபோன்றதுதான் இந்த கற்பனையும். ஸிரனோ கூறிய மாதிரி பயணம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஏன்?

நாம் காற்றில் உயரக் கிளம்பும்போது பூமியிலிருந்து நம்மைப் பிரித்துக் கொள்ள முடியாது. அப்போதும் அதனுடன் கட்டுண்டேதான் இருப்போம். விஷயம் என்னவெனில், பூமி சுழலும்போது காற்று மண்டலம் தன்னுடன் சேர்ந்த எல்லாவற்றையும்-மேகங்கள், விமானங்கள், பறவைகள், பூச்சிகள் என-சுமந்துகொண்டு பூமியுடன் சேர்ந்தே சுழலுகிறது. நல்லவேளை என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்படி காற்று மண்டலம் பூமியுடன் சேர்ந்து சுற்றாவிட்டால் மாபெரும் சூறாவளியினால் நாம் எந்நேரமும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்போம் ! நின்று பேசவே நேரம் இருக்காது-முடியவும் முடியாது. காற்று வீசும்போது நாம் அசையாமல் நின்று கொண்டிருப்பதற்கும், நாம் பயணிக்கும்போது காற்று அசைவற்றிருப்பதற்கும் வித்தியாசம் கிடையாது. ரயில்வே ஸ்டேஷனில் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் கிளம்பும்போது நம்முடைய ரயில் கிளம்பிவிட்டது போல் தோன்றுகிறது. ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது ஜன்னல் வழியாகப் பார்த்தால், மரங்களும் தந்திக் கம்பங்களும் எதிர்த் திசையில் ஓடுவதுபோல் தெரியும். இதெல்லாம் ஒப்பீட்டு அசைவு (relative motion) வகையைச் சேர்ந்த அசைவுகள்.

நாம் ஒரு இடத்தில் அசையாமல் நின்றுகொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அசையாமல் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். உண்மையில் நாம் அசையாமல் இல்லை. அதிவேகமாகச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம். பூமி சுற்றிவரும்போது நாமும் அதனுடன் சுற்றி வருகிறோம். பூமி சுழலுவதால் நாமும் சுழலுகிறோம். ஆனால் இந்த அசைவுகள் நமக்கு அசைவுகளாகத் தெரிவதில்லை. ஏன்? நாமும் பூமியுடன் சேர்ந்து பயணம் செய்வதால்தான்.

இதை இன்னொரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். நீங்கள் அதிவேகமாகச் செல்லும் ஒரு ரயிலில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது மற்ற பொருட்களின் அசைவை வைத்துத்தான் ரயில் வேகமாகச் சென்றுகொண்டிருப்பது உங்களுக்குத் தெரிகிறது. ஜன்னல் கதவுகளை அடைத்து விடுவோம். அப்போதும் ரயில் செல்லும் `டக்கு புக்கு-கடபுடா  சத்தத்திலிருந்துதான் ரயில் போவது உள்ளே இருக்கும் உங்களுக்குத் தெரியவரும். அந்த சத்தமின்றி ரயில் ஓடினால் உள்ளே இருக்கும் உங்களுக்கு பயணம் செய்கிறோம் என்பதே தெரியாது ! அசையாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பது போல்தான் தெரியும். இப்போது நம்முடைய பூமியை ஒரு ஓடும் ரயிலாக நினைத்துக் கொள்ளுங்கள். பூமி சுற்றிவரும்போது எந்த கடபுடா சத்தமும் இல்லாததால் பூமி சுற்றுவது நமக்குத் தெரிவதில்லை. நமது அசைவும் நமக்குத் தெரிவதில்லை.

News

Read Previous

கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..

Read Next

அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *