வைட்டமின் சி – அற்புதமானதொரு வேதிப்பொருள்

Vinkmag ad

வைட்டமின் சி – அற்புதமானதொரு வேதிப்பொருள்
பேராசிரியர் கே. ராஜு
     வைட்டமின் சி நம் உடல்நலனுக்கு மிகவும் தேவையானதொரு உயிர்ச்சத்து. அதற்கு மிக சுவையானதொரு வரலாறும் உண்டு. ஸ்கர்வி என்ற நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உடலினுள்ளும் வெளியேயும் ரத்தக் கசிவு, தசைகள் பலவீனமடைவது, ஈறுகளில் வலி, பற்கள் ஆடுவது, எலும்பு மூட்டுகளில்  வலி, வீக்கம், புண்கள் ஆறுவதில் தாமதம் போன்ற அறிகுறிகளை வைத்து ஸ்கர்வி பாதிப்பை அறியலாம். முற்காலத்தில் நீண்ட கடற்பயணங்களை மேற்கொண்ட மாலுமிகள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். வைட்டமின் சி பற்றாக்குறையின் காரணமாக வருவதுதான் இந்த ஸ்கர்வி. வைட்டமின் சி பற்றாக்குறை எலும்பு இணைப்புக்களில் உள்ள சவ்வினை பலவீனப்படுத்திவிடுகிறது. வாஸ்கோ ட காமா போர்ச்சுகலிலிருந்து இந்தியாவுக்கு கடல் மார்க்கமாகப் புறப்பட்ட 1497ஆம் ஆண்டிலேயே ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும் தன்மை ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களுக்கு உண்டு என்பதை  மாலுமிகள் அறிந்திருந்தார்கள். அதனால் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் போர்ச்சுகீசியர்கள் பழங்கள், காய்கறித் தோட்டங்களை உருவாக்கினார்கள். ஆனாலும் கி.பி. 1500-லிருந்து 1800க்குள் சுமார் 20 லட்சம் மாலுமிகள் ஸ்கர்வி நோய்க்குப் பலியானார்கள். இந்த நோயின் காரணமாக 1499ஆம் ஆண்டில் தனது பணியாளர் குழுவின் 170 பேர்களில் 116 பேர்களை வாஸ்கோ ட காமா இழந்தார் என்றும் 1520ஆம் ஆண்டில் தனது பணியாளர் குழுவின் 230 பேர்களில் 208 பேர்களை மெகல்லன்  இழந்தார் என்றும் ஜோனாத்தன் லாம்ப் எழுதினார். இதிலிருந்து அந்நாட்களில் கடற்பயணங்கள் உயிருக்கு உலைவைக்கக் கூடிய ஆபத்தான பயணங்களாக இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இத்தனைக்கும் ஸ்கர்வி என்பது ஒரு புதிய நோய் அல்ல. கி.மு. 460-லிருந்து 380 வரை வாழ்ந்த மேற்குலக மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போக்ரடீஸ் இந்த நோயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்கர்விக்கு மூலிகை வைத்தியம் பற்றி பழங்காலத்திலேயே சில இனக்குழுவினர் அறிந்திருந்தனர் என்று சில மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் சி-யைக் கண்டுபிடித்த பெருமை ஆல்பர்ட் ஜென்ட் க்யோர்க்யி (1893-1986) என்ற ஹங்கேரி விஞ்ஞானியையே சேரும். 1937 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. அதே ஆண்டு வால்டர் நார்மன் ஹாவொர்த் என்ற விஞ்ஞானிக்கும் வைட்டமின் சி-யின் வேதியியல் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு  அளிக்கப்பட்டது என்பதிலிருந்து வைட்டமின் சி-க்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். வைட்டமின் சி தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய, புளிப்புச் சுவையுடைய வெண்மையான படிக வடிவில் உள்ள பொருள். அது சிறுகுடலில் எளிதில் உள்வாங்கப்பட்டு, ரத்தத்திலிருந்து நேரடியாக கல்லீரலையும், அங்கிருந்து உடலின் பல்வேறு பாகங்களையும் சென்றடைகிறது. வைட்டமின்களிலேயே அதிக நிலைத்தன்மை இல்லாதது வைட்டமின் சி-தான். வைட்டமின் ஏ, இரும்புச் சத்து போன்ற பிற ஊட்டச் சத்துக்களுடன் எடுத்துக் கொள்ளப்படும்போது, வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வைட்டமின் சி அடங்கிய காய்கறிகளையும்  பழங்களையும் உட்கொள்ளுவது மிக அவசியம்.

News

Read Previous

கருமலில் செயல்பாட்டிற்கு வருமா மகளிர் சுகாதார கழிப்பறை?

Read Next

எழுதுகோல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *