வெளிப்படை விஞ்ஞானம்

Vinkmag ad

அறிவியல் கதிர்

வெளிப்படை விஞ்ஞானம்
பேராசிரியர் கே. ராஜு

விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் பிரேசில் ஆய்வாளர்களும் தங்களுக்குக் கிடைக்கும் அறிவியல் தகவல்களையும்  எடுக்கும் முடிவுகளையும் ஒவ்வொரு நாளும் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். டேவிட் ஓக்னர், ஜார்ஜ் ஒசாரியோ ஆகிய இரு தலைமை ஆய்வாளர்கள் தங்களது இந்தப் புதுமையான முயற்சியை பிப்ரவரி 15 அன்று தொடங்கினர். மூன்று இந்திய ரீசஸ் குரங்குகளிடம் ஜிகா வைரஸ் (டெங்கு மாதிரியான நோயைத் தரும் ஒரு நோய்க்கிருமி) எப்படி செயல்படுகிறது என்பதுதான் அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருள். அண்மைக்காலமாக கபாலச் சுருக்கம் (microcephaly) போன்ற நோய்கள்  ஜிகா வைரசுடன் இணைத்துப் பார்க்கப்படுகின்றன.  உண்மையிலேயே  ஜிகா வைரசினால்தான் கபாலச் சுருக்கம் உருவாகிறதா என்பதைக் கண்டுபிடிக்க முயல்வதுதான் ரீசஸ் குரங்குகளிடம் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வின் நோக்கம். எதிர்காலத்தில் ஜிகா வைரசினால் உருவாகும் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க இந்த ஆய்வுகள் உதவும்.
இந்த ஆய்வாளர்கள் தங்களை ஜிகா பரிசோதனை அறிவியல் குழு (ZEST) என அழைத்துக் கொள்கின்றனர். பரிசோதனை தொடங்கி ஒரு வாரத்தில், தகவல்கள் கிடைத்தவுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற நோக்கத்தை அவர்கள் உண்மையிலேயே செயல்படுத்திவருவது தெளிவாகிவிட்டது. இதில் ஒரு வெளிப்படைத் தன்மை இருக்குமாறும் பார்த்துக் கொள்கிறார்கள். “இது அறிவியல் வரலாற்றில் ஒரு தனிச்சிறப்புடைய முக்கியமான மைல்கல். பொதுமக்களின் உடல்நலன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையில் உடனடியாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். அப்படிப் பார்க்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவர் எவ்வளவு விரைவில் கற்றுக் கொள்கிறோமோ அந்தளவுக்கு இதில் முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த தகவல்களை விரைவாகப் பகிர்ந்துகொள்வது தங்களுடைய ஆய்வில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டு இலக்கை விரைவில் அடைவதற்கு உதவும்” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறப்பு ஆய்வாளர் கோயன் வான் ரோம்பய். பேராசிரியர் ரோம்பயின் குழு  கருவுற்றிருக்கும் ரீசஸ் குரங்குகளில் ஜிகா வைரசை ஊசி மூலம் செலுத்தி ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. பொதுவாக ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ரகசியமாகப் பாதுகாத்து வைத்து கிடைக்கும் ஆய்வு முடிவினை வெளியிட்டு தங்களுடைய புகழையும் கௌரவத்தையும் நிலைநாட்டிக் கொள்ளவே விரும்புவார்கள்.  ஆனால் இந்த கூட்டு உழைப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அதைப் புறம் தள்ளிவிட்டு ஜிகா அரக்கனிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் உன்னதப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
“எங்களது தகவல்களை மற்ற விஞ்ஞானிகள் எப்படியோ கவர்ந்து சென்றுவிடுவார்களோ என்ற கவலை எங்களுக்கு இல்லை. அவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய ஆய்வுத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அமெரிக்காவின் தேசிய உடல்நலன்  இன்ஸ்டிட்யூட்தான் அளிக்கிறது. எங்களுடைய ஆய்வு முடிவுகள் விரைவாக மக்களைச் சேருவது  பொருத்தமானதே. காரணம், எப்படியிருப்பினும் ஆய்வு நிறுவனத்தின் நிதிச் சுமையைச் சுமப்பவர்கள் வரிசெலுத்தும் மக்கள்தானே” என வினவுகிறார் பேராசிரியர் டேவிட் ஓக்னர்.
இந்த வெளிப்படை விஞ்ஞான முன்முயற்சி, பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வாளர்களிடையே இருவழிக் கற்றல்முறைக்கு வித்திட்டுள்ளது. 2015 செப்டம்பரில் உலக சுகாதார நிறுவனமும் மருத்துவ இதழ்களின் சர்வதேசக் குழுவும் வெளிப்படையான அறிவியல் தகவல்களை இதழ்களில் பிரசுரிப்பது தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளனர். அதன்படி மருத்துவ இதழ்கள் பொது சுகாதாரம் சம்பந்தமான தகவல்களை தாமதமின்றிப் பிரசுரிக்கத் தொடங்கியுள்ளன. ஜிகா தொற்றுநோய் தொடர்பான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் 24 மணி நேரத்திற்குள் இணையத்தில் பதிவேற்றும் பணியை செய்யத் தொடங்கியுள்ளது. விஞ்ஞானிகளின் பாராட்டுதல்களுக்குரிய இந்தப் புதுமையான முயற்சியை வரவேற்போம்.
(உதவிய கட்டுரை : 2016 பிப்ரவரி 26 தேதியிட்ட தி ஹிண்டு நாளிதழில் ஆர். பிரசாத் எழுதிய கட்டுரை).

News

Read Previous

நட்பு

Read Next

விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *