விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன்

Vinkmag ad

நூல் அறிமுகம்

விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன்

ஆசிரியர்: கே.ராஜூ

மதுரை திருமாறன் வெளியீட்டகம்,

தி.நகர் சென்னை-17 செல்:78717 80923

விலை: ரூ.130/=

பேராசிரியர் ராஜூ தமிழகக் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமானவர். முப்பதாண்டு காலம் ஆசிரியர் இயக்கத்தில் தன்னலமின்றி உழைத்தவர். தென்மாவட்டங்களில் கல்லூரி ஆசிரியர்களின் துயர்துடைத்த மூட்டா சங்கத்தின்  அனைத்துப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆசிரியர் பணியிலிருந்து  ஓய்வு  பெற்றபின் எழுத்துப் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். புதிய ஆசிரியன் என்ற பல்சுவை மாத இதழின் ஆசிரியராக அதனைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார். இத்துடன் தீக்கதிர் நாளிதழில் வாரந்தோறும் அறிவியல் கதிர் என்ற தலைப்பில் அறிவியல் சம்பந்த உண்மைகளைத் திரட்டி சிறப்புக் கட்டுரைகளை எழுதி வருகிறார். இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாகவும் கொண்டு வந்துள்ளார்.

இவ்வரிசையில் நான்காவது நூலாக வெளிவந்துள்ளது “விவசாயம், சுற்றுச்சூழல், உடல் நலன்” எனும் நூல். மூட்டா இயக்கத்தில் தீவிரச் செயல்பாட்டாளாராக இருந்தபோதே பேராசிரியர் மாடசாமியுடன் இணைந்து ”புதிய கல்விக் கொள்கை” என்ற புத்தகத்தையும், பின்னர் அவர் தனித்து ”புதிய பொருளாதாரக் கொள்கை” என்ற ஆய்வு நூலையும் எழுதியுள்ளார்.

 

“காந்தி படுகொலை பேசப்பட வேண்டிய உண்மைகள்” இவரின் காத்திரமான படைப்பு. காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை எழுப்பிக் கொண்டிருக்கும் இந்நாட்களில் அனைவரும் படிக்க வேண்டிய அரிய நூலாகுமிது.

”விவசாயம், சுற்றுச்சூழல், உடல் நலன்” எனும் இந்நூலில் இம்மூன்று தலைப்புகளிலும் அறிவியல் பூர்வமான செய்திகளைத் திரட்டிக் கொடுத்துள்ளார். ஏற்கனவே வெளிவந்துள்ள ”தேலீஸ் முதல் ராமகிருஷ்ணன் வரை…,” ”சூடேறும் பூமியும் ஆற்றல் நெருக்கடியும்”, ”அறிவியல் உலா” ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து இப்புத்தகமும் அறிவியல் உண்மைகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. அறிவியல் பாடத்தில் பயிற்சி இல்லாதவர்களும் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் எளிய மொழியில் ஆழமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளது நூலின் சிறப்பு. ”பஞ்சத்திலிருந்து மீண்ட மாளவி” எனும் முதல் கட்டுரை ஆப்பிரிக்க நாடான மாளவி மேற்கத்திய நாடுகளின் அறிவுரைகளை மீறி விவசாயத்திற்குரிய மான்யம் அளித்து நாட்டின் விவசாயத்தை செழிப்பாக்கிய அதிசயத்தை விளக்குக்குகிறது. இதேபோல் மரங்களாலான வேலி, பூஜ்ய விவசாயம், பருவ மழை தவறினாலும் கவலை வேண்டாம் என்று விவசாயம் குறித்து வியப்பூட்டும் செய்திகளை நூலின் முதல் பகுதியில் சொல்லுகிறார். சுற்றுச் சூழல் பற்றிய இரண்டாம் பகுதியில் கடல் வளம், கார்பன் சுழற்சி, மின்னணுக் கழிவுகள், நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் போன்ற அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பல விஷயங்களையும் காண்கிறோம். மூன்றாம் பகுதியான ”உடல் நலன்”; பெருகி வரும் நீரிழிவு நோய், பறவைக் காய்ச்சல், புத்துயிர் பெறும் இதயம், பரவிவரும் தொற்றுநோய்கள், அயோடினின் மகத்துவம் என்ற முப்பது தலைப்புகளில் உடல் நலம் குறித்த முக்கியமான செய்திகளைத் தருகிறது.

 

 

அறிவியல் கட்டுரையில் நகைச்சுவைக்கு இடமேது; என்றுதானே நாம் நினைப்போம். அதுவும் சாத்தியாமாகிறது பேராசிரியர் ராஜூவுக்கு. அவருக்கே உரித்தான மெல்லிய நகைச்சுவை கட்டுரைகளின் இடையே ஊடாடுவது வாசிப்பை இனிமையாக்குகிறது. பேராசிரியர் வெ.பா.ஆத்ரேயா தனது அணிந்துரையில் பேராசிரியர் ராஜூவின் “எளிய நடை. ஆழமான, கூர்மையான கருத்துக்களை மென்மையாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாணியில் அனைவரும் ஏற்கும்படிக் கொண்டு செல்லும் பாங்கினைப் பாராட்டுகிறார். மதுரை திருமாறன் வெளியீட்டகம் புத்தகத்தைப் பொழிவுடன் நிறைய விளக்கப் படங்களுடன் கொண்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது. அறிவியல் தொழில்நுட்பம் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள இவ்விருத்தொன்றாம் நூற்றாண்டில்  அறிவியல் குறித்த ஞானம் அனைவருக்கும் தேவைதானே. இதனைப் பூர்த்தி செய்யும் முகத்தான் கொண்டுவரப்பட்டுள்ள இப்புத்தகம் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

—-பேரா.பெ.விஜயகுமார்

News

Read Previous

வெளிப்படை விஞ்ஞானம்

Read Next

சர்வதேச பெண்கள் தினம்

Leave a Reply

Your email address will not be published.