வீரபாண்டிய கட்டபொம்மன்

Vinkmag ad

 

தென்னாட்டு  சிங்கம்

தென்னாட்டு சிங்கம்

 

 1760ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்து அந்த மண்ணிற்கு பெருமை சேர்த்தவர். பாளையத்தை ஆண்டு வந்த ஜெகவீர கட்டபொம்மன் மன்னனுக்கு ஊமைத் துரை, துரைசிங்கம், வீரபாண்டியன், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற ஐந்து பிள்ளைகள். இதில் ஜெகவீர கட்டபொம்மனின் மறைவுக்குப் பிறகு 1790ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி ஆட்சியில் அமர்ந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில், ஆங்கிலேயர்களின் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது.

இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலான பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.

அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன்,

‘‘நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?’’

‘‘வரி, வட்டி, திரை, கிஸ்தி எதற்கு கொடுக்கவேண்டும். எங்களோடு வயலுக்கு வந்தாயா£? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது.

போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியாக்கினான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு ‘‘எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்’’ என்று முழங்கியவாறு தூக்கு மேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏறிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது.

தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, 1799ஆம் அக்டோபர் 19ஆம் தேதி கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

News

Read Previous

விலையில்லா பொருள்கள் வழங்கல்

Read Next

கொளுந்துரை, தெற்கு மூக்கையூரில் கட்டாயம் தேவை சமுதாயக்கூடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *