விருந்தோம்பல்

Vinkmag ad
விருந்தோம்பல்
— சொ.வினைதீர்த்தான்
இன்றைக்கு மானிட உறவு (Human relations) கற்பிப்பவர்களும், வாடிக்கையாளர் உறவுகள் (Customer Relations) பேசுபவர்களும் மேலை நாட்டு அறிஞர்கள் நூல்களையும் அதனைப் பார்த்து நம்மவர்களின் வான்கோழி ஆட்டத்தையும் வியந்து கூறுகிறோம்.
ஆனால், நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக நமக்குக் காலந்தோறும் தந்த இலக்கியச் செல்வத்தில் தேடினால் தேடாததும் கிடைக்கிறது. தெளிவில்லாததும் தெளிவாகிறது!
விருந்தினனாக ஒருவன் நம் இல்லத்திற்கு வரும்போது ஒன்பது செயல்களை நாம் கைக்கொள்ள வேண்டும் என்கிறது அதிவீரராமபாண்டியர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய காசிக்காண்டம் நூலின் “இல்லொழுக்கம்” பகுதி.
“விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
     வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
     எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
     போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
     ஒழுக்கமும் வழிபடும் பண்பே”
    — இல்லொழுக்கம் (பா எண் : 17)
காசிக்காண்டம் – அதிவீரராம பாண்டியன்
பொருள்:
விருந்தினராக ஒருவர் இல்லத்திற்கு வந்தால் அவர்களை.. .. ..
1. வியந்து உரைத்தல்,
2. நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்,
3. முக மலர்ச்சியுடன் அவரை நோக்குதல்,
4. வீட்டிற்குள் வருக என வரவேற்றல்,
5. எதிரில் நிற்றல்,
6. மனம் மகிழும்படி பேசுதல்,
7. அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்,
8. விடைபெறும்போது வாயில்வரை தொடர்ந்து செல்லுதல்,
9. நன்றி கூறி வழியனுப்புதல்
ஆகிய இந்த ஒன்பதும்  விருந்தோம்பல் செய்யும் வழிகளாகும்.
இவை அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்தால் மனித உறவு செழிப்பதும், வாடிக்கையாளர் மகிழ்வதும் உறுதி!

News

Read Previous

ஏந்தல் நபியே …..

Read Next

மூளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *