வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே!

Vinkmag ad

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே!

( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

சிறு குழந்தைகளை போட்டோ ஸ்டூடியோவிற்கு படம் பிடிக்க செல்லும்போது, எப்படி நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, ஸ்மைல் ப்ளீஸ் என்பார் போட்டோகிராபர் என்பதும், அப்படியும் அந்த குழந்தை சிரிக்காவிட்டால் ஒரு சாக்கிலேட்டினை கையில் வைத்துக் கொண்டு சிரி இந்த சாக்கிலேட்டு தருகிறேன் என்பார். அந்த குழந்தையும் சிறிது சிரித்தவுடன் ஒரு க்ளிக் என்ற சத்தத்துடன் அவர் காரியம் முடிந்து விடும். இதேபோன்று தான் சிலர் எப்போதும் முகத்தினை கடு கடுப்பாக வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்து நண்பர்கள் விளையாட்டாக சொல்வார்கள், அவருக்கு சிரிப்பதற்கு காசு கொடுக்க வேண்டுமென்று. அப்படிப் பட்டவர்களிடமிருந்து கவலையை எப்படி விரட்டி சாதாரண மனிதராக செய்வது என்று அறிவு சார்ந்த மனோதத்துவ அறிஞர்கள் சில வழிமுறைகளை சொல்லியுள்ளார்கள், அவைகள் என்னென்ன என்று கிழே பட்டியலிடுகிறார்கள். அவைகளை நாம் காணலாம்.

கவலைகளுக்கு மனோதத்துவ நிபுணர் கிறிஸ்டின் புஹார் தன்னுடைய ‘The worry workout’ என்ற புத்தகத்தில் மூன்று காரணங்களை சொல்லியுள்ளார். அவைகள் : 1) கவலை 2) மன அழுத்தம், 3) பதட்டம் ஆகியவற்றினை குறிப்பிடுகிறார்.

1) கவலை ஏற்பட முக்கிய காரணமாக வாழ்க்கையில் ஏற்பட்ட அல்லது ஏற்படுகின்ற நேர்மறை எண்ணெங்கள் ஆகும்

2) மன அழுத்தம்: நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற அழுத்தங்களால் நமது செயல் முறைகளில் மாற்றம் ஏற்படுகின்றது.

3) பதட்டம் எவ்வாறு ஏற்படுகின்றது என்றால் நமது அன்றாட வாழ்க்கையில் கவலை ஏற்படும்போது மனதளவில் மற்றும் உளவியல் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு அதனால் ஒரு பாதுகாப்பின்மை பின் தொடரும்போது பதட்டம் ஏற்படுகின்றது.

கவலை மனதளவில் இருக்கும்போது மன அழுத்தத்தினால் இதயத் துடிப்பு அதிகமாகிறது. அதனுடைய பக்க விளைவுகள் தூக்கமின்மை, மற்றும் அன்றாட நடவடிக்கையிலிருந்து மாறுபட்ட நடவடிக்கையாக பதட்டம் ஏற்படுகின்றது.

கவலையின் அளவு: ஒரு மனிதனுக்கு கவலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு அளவிடவேண்டும்என்றால், உங்களுடைய அலுவகத்தில் ஒரு முக்கியமான பெரிய கருத்தரங்கு வைத்திருப்பார்கள். அதற்காக நீங்கள் இரவு, பகல் என்று பாராமல் கண் விழித்து அறிக்கை தயார் செய்யும்போது இரவு தூக்கத்தினை மறந்து, காலம்தாழ்த்தி உணவருந்தி, நோய்களுக்கான அன்றாட மருந்து வகைகளை காலந்தாழ்த்தி எடுக்கும்போது படபடப்பு ஏற்பட்டு சில சமயங்களில் உடல் சுகவீனமாவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு துயர சம்பவம் நடந்துவிட்டால் உலகமே  இருண்ட மாதிரி நினைத்து கவலை கொள்வீர்கள். அவைகள் எல்லாம் எல்லார் வாழ்க்கையிலும் நடப்பது தான் என்று நினைத்து உங்கள் வாழ்க்கையினை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் கவலைகளால் நன்மையையும் நடக்கக் கூடும், அவைகள் என்னெவென்றால் உணவினை நேரத்தோடு உண்பீர்கள், மருந்தினை காலம் தாழ்த்தாது எடுத்துக் கொள்வீர்கள். கார் ஓட்டும்போது சீட் பெல்ட்டினை காவலர்கள் பிடிப்பார்கள் என்று மாட்டிக் கொள்வீர்கள். இரு சக்கர வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிவீர்கள். வெளியில் நடமாடும் போது முகக் கவசம் மறக்க மாட்டீர்கள். நீங்கள் படுக்கப் போகுமுன் தேவையான லைட்டுகளைத் தவிர மற்றவையினை அனைத்து விடுவீர்கள். சமையல்  கேஸினை மூடி விடுவீர்கள். வெளியூர் செல்லும்போது பூட்டு சரியாக பூட்டினோமா என்று பூட்டினை பல தடவை இழுத்துப் பார்ப்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர் புஹார் கூறுகின்றார்.

சில சமயங்களில் தேவையில்லாமல் கவலைப் படுவீர்கள். ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து சிந்திப்பீர்கள் என்றால் ஆகா நாம் அப்படி கவலை கொண்டிருக்கக் கூடாது என்று தெளிவாகும்.

கவலைகளை எவ்வாறு சமாளிப்பது:

சில சமயங்களில் பல வேலைகளை ஒரே நேரத்தில் இழுத்துப் போட்டு செய்வீர்கள். அதனால் ஒரு வித படபடப்பு ஏற்படும். அதேபோன்று ஒரே நேரத்தில் செய்ய வேண்டுமென்றால் ஒரு பட்டியலிட்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என்று அமைதியாக தீர்மானியுங்கள். அப்படி தீர்மானித்தால் உங்கள் படபடப்பு குறையும் என்று, மனோதத்துவ நிபுணர், ‘வந்திதா துபே’ கூறுகிறார்.

சில சமயங்களில் நமது சக்திக்கு மேல் உள்ள காரியங்கள் செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக கவலை ஏற்படும். அதனைத் தொடர்ந்து பயம் ஏற்படுவதும் இயற்கையே. அதுபோன்ற நேரத்தில் எப்படி எட்டாமல் இருக்கும் திராட்சை கனியினை தாவி, தாவி களைத்து பலிக்காத நரி ,’சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று சென்று விடுகின்றதோ அதேபோன்று அப்படிப் பட்ட சமயங்களில் அகலக் கால் வைக்காமல் இருப்பது நன்று.

நம்மை சுற்றி குழப்பமான சம்பவங்கள் ஏற்படும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். அதனை முன்னிட்டு தொலைக் காட்சியினை பார்ப்பதும், செல்போன் தகவல்கள் பார்ப்பதும் என்ற அமைதியின்னைக்கு ஆளாக நேரிடும். அந்த நேரத்தில் எது சரியான தகவல் என்று பகுத்தறிந்து அமைதியாக செயலில் இறங்க வேண்டும் என்று கொல்கத்தா மனநல ஆஸ்பத்திரி சீனியர் டாக்டர் ஜாய் ரஞ்சன் கூறுகிறார்.

நமக்கு வயதாகும்போது நோய்களால் சங்கடப் பட வேண்டுமே, அப்படி வந்தால் நமது மருத்துவ செலவிற்கு என்ன செய்ய முடியும் என்று இப்போதே நினைத்து குழம்பி இருக்கக் கூடாது. அது காலன் செய்யும் செயல் என்று அதனையும் எதிர் நோக்க தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் கோபம், ஏமாற்றம் போன்ற எதிர் மறையான செயல்கள் எதிர் கொள்ள நேரிடும். அவைகளெல்லாம் ஒவ்வொரு சராசரி மனிதனும் எதிர்கொள்ளும் செயல்கள் தான் என்று எண்ண வேண்டும். அவைகள் எல்லாம் நீங்கள் மட்டும் தான் சந்திக்கின்ரீர்கள் என்று எண்ணக் கூடாது என்று மனோதத்துவ நிபுணர் துபே கூறுகின்றார். ஒரு காகிதத்தை எடுத்து வருகின்ற ஐந்து வருடங்களில் என்னென்ன காரியங்களுக்காக கவலைப் பட வேண்டியிருக்கும் என்று பட்டியலிட வேண்டும். அவைகளில் ஒரு சில தான் நீங்கள் கவலைப் பட வேண்டியதாக இருக்கும். ஆகவே வாழ்க்கையினை கவலைப் பட்டே காலந்தாழ்த்தக் கூடாது.

கனடா நாட்டில் , ‘Quiet company’ என்ற தியான கூடத்தினை நடத்தும், ‘எமிலி திரிங்'(Emily Thring) என்ற நிபுணர் சொல்லும்போது உங்கள் கவலையைப் போக்கும் மருந்து என்னெவென்றால் தியானம் மூலம் மனதினை ஓர் அமைதி நிலைக்கு கொண்டு வருவதுதான் என்கிறார். மூச்சினை இழுத்து வெளியே விடுவதும், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழியினையும் அவர் சிறந்த மருந்தாக சொல்கின்றார்.

நீங்கள் சமீப காலமாக செய்தி தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் கொரானா நோய், அதனால் பாதித்தவர், இறந்தவர் என்ற பட்டியல் உலகிலே நீண்டு கொண்டே போகின்றது என்று அறிவீர்கள். கொரானா நோய் பாசிட்டிவ் என்றால் நாம் செத்து விடுவோம் என்ற எதிர்மறையான நடவடிக்கைகளில் இறங்கி சிலர் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு வந்து விடுவதினையும் காணலாம். மனிதனைப் படைத்த இறைவன் நோய்களுக்கான மருந்துகளையும் கண்டு பிடிக்கும் திறமையையும் கொடுத்திருக்கின்றான் என்ற போது பின்பு ஏன் அந்த கோழைத் தனமான முடிவையும் எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் மரணத்தினையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் பழங்குடியினரிடையே voodu என்ற ஒரு பழக்கம் இருக்கின்றது. அது என்னவென்றால் ஒரு குற்றம் நடந்து விட்டால் அந்த பழங்குடியின் தலைவர் தலைமையில் கிராம மக்கள் கூடுவர். தலைவர் ஒரு பொம்மையினை கொண்டு வரச் சொல்லுவார். பொம்மை வந்ததும் ஒரு நீண்ட ஊசியினை எடுத்து அந்த பொம்மையின் நெஞ்சுப் பகுதியில் செலுத்துவார்.  அதன் பின்பு அவர், ‘குற்றம் செய்தவர் வருகிற ஞாயிறு இரவுக்குள் இறந்து விடுவார்’ என்று சொல்லுவார். பின்பு ஊர் மக்கள் களைந்து செல்வார்கள். அவர் சொல்லியபடி குற்றம் செய்தவரும் ஞாயிறுக்குள் இறந்து விடுவார். அவர் உடம்பினை பரிசோதனை செய்தால் அதில் எந்த வித விஷமும் இருக்காது. பின்பு எப்படி இறக்கின்றார் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தும்போது குற்றம் செய்தவர் தவறு செய்து விட்டோம் என்ற மன நிலையில் பயத்தினால் இதயத் துடிப்பு அதிகமாகி இறந்து விடுகின்றார் என்று கண்டு பிடித்தனர்.

அமெரிக்காவில் ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அப்போது அந்த கைதியினைக் கொண்டு விஞ்ஞானிகள் சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அதற்கான அனுமதியும் பெற்றார்கள் அந்த கைதி தூக்கிலப் படுவார் என்பதிற்குப் பதிலாக விஷ கருநாகம் தாக்கிக் கொல்லப் படுவார் என்று அறிவிக்கப் பட்டது. அதனை கைதிக்கும் தெரிவிக்கப் பட்டது. ஒரு விஷப் பாம்பினையும் கைதிக்கு முன்பு கொண்டு வரப் பட்டது. அதனைத் தொடர்ந்து கைதியின் கண்ணை இறுக மூடி கட்டப் பட்டது. கைதியினை ஒரு நாற்காலியில் அமரவைத்து நாகமும் அவருடைய கையில் நாற்காலியோடு சேர்த்துக் கட்டப் படும்படி அமைக்கப் பட்டது. அதன் பின்பு நாகம் கைதியின் கையில் கொத்துவது போல சிறிய ஊக்கால் குத்தப் பட்டது. அந்தக் கைதி அலறியபடி இரண்டு நிமிடங்களில் இறந்து விட்டார்.

மருத்துவர் அவரது பிரேதத்தினை பரிசோதித்தார்கள். என்னே ஆச்சரியம் அவர் உடம்பில் பாம்பு கொத்துவதுபோல  ஒரு விஷம் இருந்தது. அந்த விஷம் எங்கிருந்து வந்தது, அவர் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று ஆய்வு நடத்தப் பட்டது. என்னே ஆச்சரியம் அந்த விஷம் அவர் உடம்பிலிருந்தே தயாரிக்கப் பட்டதாகும் என்றால் நம்புகிறீர்களா

இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் நாம் எடுக்கும் ஒவொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உள்ளுக்குள்  உருவாக்கின்றது. அதன் படி உங்கள் உடல் ஹார்மோனை உருவாகின்றது. 90 சதவீத நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணெங்களால் உருவாகும் நோய் எதிர்ப்பு குறைதலே ஆகும்.

நாம் இப்போது கொரானா கால நெருக்கடியில் இருக்கின்றோம்  நோய் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே என்று அஞ்சாமல், சிறு நோய் வந்தாலும் நமக்கு கொரானா நோய் வந்து விட்டது என்று பதட்டப் படாமல், இவ்வளவு காலம் நாம் நோய்களை, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டோம், இதுவும் அதுபோன்ற ஒன்று தான் என்று நினைத்து நமது வாழ்க்கை வாழவதிற்கே, பயந்து சாவதற்கு அல்ல மாறாக சிரித்து மற்றும் சிந்தித்து வாழ்வதிற்கே என்ற மன தைரியத்தோடு வாழ வேண்டும் என்று வீறு நடைபோடுவோமா?

 

News

Read Previous

இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

Read Next

உலக ஒளிப்பட நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *