இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

Vinkmag ad

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை..

இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

பேராசிரியர் கே. ராஜு

இந்திய கல்வித் துறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் கவனத்தைக் குவிக்க ஸ்டெம் கல்வி (STEM Education)  என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. எதையும் கேள்விக்குட்படுத்தித் தெளிவு பெறும் இளம் சிந்தனையாளர்கள், பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்போர், அடுத்த தலைமுறைக்கான கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை ஓர் ஆரோக்கியமான ஸ்டெம் கல்வித் திட்டம் உருவாக்க வல்லது. கடந்த சில ஆண்டுகளில் ஸ்டெம் கல்வியின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. மிக அதிகமான எண்ணிக்கையில் விஞ்ஞானிகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்த மாற்றம் மிக முக்கியமானது

 

பொதுவாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை வளர்ந்துவரும் அதே நேரத்தில் ஸ்டெம் வேலைவாய்ப்புகள் தற்போது வேகமாக வளர்ந்து வருவதை இளைஞர்கள் கவனிக்க வேண்டும். ஸ்டெம் பட்டதாரிகளின் எண்ணிக்கையையும் தாண்டி அந்த வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் படித்தவர்களிடையே உருவாகும் வேலை வாய்ப்புகளில் 80 சதமானவை ஏதோ ஒரு வடிவத்தில் கணிதத்தையும் அறிவியலையும் சார்ந்தே இருக்கும் என தேசிய அறிவியல் ஃபவுண்டேஷன் கணித்துள்ளது. கடந்த காலத்தில் தேர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக கல்வி இருந்ததால் புதியன கண்டறிதல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல், படைப்பாற்றல் என வரும்போது மாணவர்களின் திறன்கள் முடக்கப்பட்டே இருந்தன. ஸ்டெம் திட்டத்தில் தயாராகும் மாணவர்கள் இந்த குறையைத் தீர்த்துவைப்பார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

 

ஸ்டெம் துறைகளில் குழந்தைகள் சராசரியாக தங்களது எட்டு வயதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். காரணம், அந்த வயதில் தொழில்நுட்பம், புதிய கருவிகள், வேடிக்கையான பொம்மைகள், கார்ட்டூன்கள் எல்லாம் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கத் தொடங்குகின்றன. ஆனாலும் ஒரு தொழில்நுட்பத்தைபயன்படுத்துபவர்” என்ற நிலையிலிருந்துகண்டுபிடிப்பாளர்” என்ற நிலைக்கு உயர்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஸ்டெம் திட்டத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் கொணர்வதற்கும் வகுப்பறைகளில் அதற்கு உயிர் கொடுத்து வருங்காலத் தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதற்கும் தேவையான கருவிகளையும் நிதியையும் வழங்குவது மிக முக்கியமானது. “ நீயே செய்து பார் 

 (do it yourself – DIY)”  வழிமுறையின் மீது குழந்தைகள் ஆர்வம் கொள்வதை உத்தரவாதப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக ஸ்டெம் ஆர்வலர்கள் பல புதிய உத்திகளை பரிசோதித்துப் பார்த்து வருகின்றனர்.

 

புதிய சிந்தனையாளர்களை இளம் பருவத்திலேயே உருவாக்கிவிட வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவது சற்று கடினமானதே. பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும் பாடத்திட்டத்தையும் உருவாக்குவது, குழந்தைகளுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் அளிப்பது ஆகியவை ஸ்டெம் கல்வியை அமுல்படுத்துவதில் மிகப் பெரிய சவால்களாக விளங்குகின்றன. போதுமான நிதியைப் பெறுவது எப்போதுமே சவாலான விஷயம்தான். மாணவர்கள் பரிசோதனைகளைச் செய்து பார்க்கத் தேவையான இடவசதியை ஏற்படுத்தித் தரவும், DIY வழிமுறைக்குத் தேவைப்படும் கருவிகளையும் சிறந்த கணினிகளையும் வாங்கவும் பள்ளிகளுக்குத் தேவை.. பணம்! ஸ்டெம் கல்வியை அமுல்படுத்த வேண்டுமானால் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள்.

 

ஸ்டெம் கல்விக்கு மனரீதியானதொரு தடையும் இருக்கிறது. ஸ்டெம் கல்வியைக் கொணர்வதால் மாணவர்கள் தாங்கள் படிக்க வேண்டிய பாடங்களிலிருந்து திசைதிருப்பப்படுவார்கள்உரிய காலத்தில் அவர்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை முடிக்க இயலாது என்ற பெரும்பான்மையான ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழக்கப்பட்டுவிட்ட சிந்தனையிலிருந்து அவர்களை விடுவிப்பது, ஸ்டெம் கல்வித்திட்டம் பற்றிய பரிசோதனைக்கு மற்றுமொரு சவாலாகவே இருக்கும். ஸ்டெம் வழிமுறைக் கற்றலின் விளைவாக குழந்தைகளிடம் உருவாகும் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கண்கூடாக அவர்களைக் காணவைப்பதுதான் இந்த சவாலைச் சமாளிப்பதற்கு ஒரே வழி.
உலகெங்கும் உள்ள பல நாடுகள் ஸ்டெம் கல்வித் திட்டத்திற்குத் தேவையான தேசியப் பாடத்திட்டங்களையும் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் மத்திய மாநில அரசுகளும், பள்ளி நிர்வாகங்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் புதிய மாற்றத்திற்குத் தயாராக வேண்டிய தருணம் இது.

News

Read Previous

இந்தி பற்றி அதிகம் அறியப்படாத 10 உண்மைகள்!

Read Next

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே!

Leave a Reply

Your email address will not be published.