ரசனை மிக்க வாழ்க்கைக்குப் பிரியாவிடை…

Vinkmag ad
ரசனை மிக்க வாழ்க்கைக்குப் பிரியாவிடை…
எஸ் வி வேணுகோபாலன்
Inline images 1
ழுத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்….எத்தனை மிருதுவான மனிதர் அவர்! கண்களில் பொங்கும் புன்னகையில் எளிய நகைச்சுவையும், வலிய ரசனையும்…. நினைக்க நினைக்க எத்தனை எத்தனை மெல்லிதயம் அவருடையது!
இருபத்தைந்து நிமிடங்களுக்குக் குறையாது, சில மாதங்களுக்குமுன் அவரோடு தொலைபேசியில் பேசக் கிடைத்த அந்த வாய்ப்பு! நான் தயங்கினாலும், அவர் ஆர்வத்தோடு நிறைய செய்திகளைப் பகிர்ந்த வண்ணம் இருந்தார்…அது சரி, அவரது தொடர்பு எண் எனக்கு எப்படி கிடைத்தது என்றால், அது ஒரு சுவாரசியமிக்க கதை. ஆனால் சுவாரசியம் அவருக்கு அல்ல!
மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்களது “அப்பாவின் டைப்ரைட்டர் ” நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வந்திருந்தார் அவர். சன்னமான குரலில் அவரது உரையை மிகவும் பாந்தமாக நிகழ்த்தவும் செய்தார். விழா நிறைவு பெற்றதும், கீழ்தளத்தில் சிற்றுண்டிக்காக அனைவரும் அழைக்கப்பட்டபோது தற்செயலாக அவரது கரம்பற்றி அழைத்துச் சென்றேன் நான். அவரை ஓரிடத்தில் இருத்திவிட்டு, அவருக்கான உணவுத்தட்டை எடுத்துச் சென்று கொடுத்தபடி, இனிப்பைத் தவிர்த்துவிட்டேன் என்றேன்…சரியாப்போச்சு, எனக்கு என்ன பிரச்சனை, சாப்பிடலாமே என்று நகைத்தார். ஆர்வத்தோடு இனிப்பும் சேர்ந்த சிற்றுண்டியை மிதமாக அருந்தியபின், எனது பையை யாரோ வாங்கிக் கொண்டார்களே, அது எங்கே என்று கேட்டார். மெதுவாக, அவரா, இவரா, இவரிடமா , அவரிடமா என்று தேடத் தொடங்கும்போது யாருக்கும் தெரியாது, அந்தப் பை கிடைக்கப் போவதில்லை என்று.
அதில் அவரது மொபைல் இருந்தது. அப்புறம் சில புத்தகங்கள். கொஞ்சம் பணம். நூல் வெளியீட்டு நிகழ்விலும் ஓர் அப்பாவி மனிதரிடம் வரிசையாக வந்து பார்த்த யாரோ உறவாடிக் களவாடிச் சென்றுவிட்டது இன்று வரை புதிர் அதிர்ச்சியாகவே நிற்கிறது. விழா நடந்த இடத்தில் அதற்குள் அடுத்த நிகழ்வுக்காக முற்றிலும் வேறுவகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலிலும் எல்லோரும் குடைந்து குடைந்து தேடியும் பை கிடைக்காத குறையோடு விடைபெற்றுச் சென்றார் அசோகமித்திரன். (மறுநாள் அதை முகநூலில் பதிவும் செய்துவிட்டிருந்தார்). அப்போது மிஸ்ட் கால் கொடுத்து எங்காவது ரிங் கேட்கிறதா என்று பலரோடு சேர்ந்து முயற்சி செய்கையில் என் அலைபேசியில் அவரது எண்ணைச் சேமித்துக் கொண்டேன்.
பின்னர், அவர் மிகவும் நேசிக்கும் அழகிய சிங்கர் ஏற்பாடு செய்திருந்த நவீன விருட்சம் நூறாவது இதழ் வெளியீட்டு விழாவில் உற்சாகமாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அழகிய சிங்கர் எனும் சந்திரமௌலி, 1975ல் சென்னைக்கு வந்து சேர்ந்த எனக்கு வாய்த்த முதல் நண்பர் என்ற குறிப்போடு, நாங்கள் இணைந்து நடத்திய கையெழுத்து பத்திரிகை முதல் மலர்த்தும்பி எனும் அச்சில் கொண்டுவந்த இதழ் வரையிலான செய்திகளோடு எனக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து நிமிட உரையை அந்தக் கூட்டத்தில் நான் நிகழ்த்தியதை அவரும் ஆர்வத்தோடு கவனித்திருந்தார். அடுத்த நாள் நான் அவரை அலைபேசியில் அழைத்தபோதுதான் அந்த நீண்ட உரையாடல் நடந்தது. ஜோல்னாப் பையோடு முன்வரிசையில் இருந்தீங்களே, கண்ணாடி போட்டுண்டு, அவரோடு நீண்ட நாள் நட்புன்னு பேசினீங்களே…நினைவிருக்கு என்றார்.
மெலிய நகைச்சுவை படரும் அவரது விவரிப்புகள், நெகிழ்வுமிக்க அவரது குரல், முப்பதாண்டுகளுக்குமுன் தீபாவளி மலர் ஒன்றில் அவர் எழுதி இருந்த தணிக்கைக்குழுவில் செயல்பட்ட அனுபவத்தின் ஹாஸ்ய குறிப்புகள் (சென்சார் போர்டில் மெம்பராமே, சங்கராபரணம் பார்த்திருப்பீர்களோ, இல்லை…மரோ சரித்ரா, இல்லை அதெல்லாம் தெலுங்கு செக்ஷன், நான் தமிழ்ப்படம்தான்… அப்ப ரஜினி, கமல் படமெல்லாம் பார்த்திருப்பீங்க…இல்ல இல்ல… என்ன படம்தான் பார்த்தீங்க பின்ன….ஆள் இல்லாத தீவில் சி ஐ டி 14 10 14, தட்டுங்கள் வெடிக்கும் என்பது மாதிரி ஏதோ படங்கள் பேரைச் சொல்வார் அசோகமித்திரன்…எதிரே இருக்கும் நண்பர், நாசமாப் போச்சு என்பார், அந்தத் தலைப்பில்கூட ஒரு படம் பார்த்த நினைவு என்று முடிப்பார் இவர்)…என நான் சில விஷயங்களைக் குறிப்பிட்டேன்… அவரோ பல பத்திரிகைகளில் எழுதிய அனுபவங்கள்…கதையைக் கொடுத்துக் காத்திருக்க வேண்டி வந்த நாட்கள், (ஒரு வருடம்வரை கூட!) பல விஷயங்களைச் சொல்லியபடி எனக்கு அவ்வளவா நினைவு இருப்பதில்லை என்றார் … நான் முதல்நாள் பேசிய விஷயங்களை பிசகாமல் நினைவு கூர்ந்தார். அழகிய சிங்கரோடு நேரில் ஒருமுறை வீட்டுக்கு வாங்களேன் என்று அழைக்கவும் செய்தார்.
ந்த ஜனவரி ஐந்தாம் தேதி இரவு, அழகிய சிங்கர் அவர்களுடைய தந்தை மறைந்தபோது மறுநாள் காலை அங்கே செல்கையில் அசோகமித்திரன் வந்திருந்தார். முடியாத நிலையிலும், எப்படியோ முதல் மாடி ஏறி வந்து மௌலியிடம் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், உங்களைத் தெரிகிறதே….கிருஷ்ணமூர்த்தியோ, இல்லியே என்று நெற்றியைச் சுருக்கி உள்ளே பெயர்களைத் துழாவிக் கொண்டிருந்தார். மௌலி அவரிடம் குனிந்து என் பெயரைச் சொல்லவும், ஆமாமாம் நினைவு இருக்கே, என் கூட ஒருநாள் ஃபோனில் கூடப் பேசினாரே …அவர் மார்க்சிஸ்ட்டுன்னா?” என்று கேட்டார்.
கீழே கவனத்தோடு படியில் இறங்கி வந்து, பாவம் அழகிய சிங்கர், அவர் அப்பா இவருக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்திருக்கார் அந்த நாள்ல இருந்து… என்று சொல்லிவிட்டுத் தமது மகனோடு புறப்பட்டுச் சென்றார். அந்த கால் டாக்சி ஓட்டுனரிடம் அவர் இன்னார் என்று பெயரைச் சொன்னதும், அவர் எழுத்தாளராச்சே சார், தெரியும் சார் என்று சொன்னதை மறக்க முடியாது. அதன் பின்னர் அவரைப் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வாருங்கள் என்ற அவரது வாஞ்சைமிக்க அழைப்புக்கு மரியாதை செய்யத் தவறிவிட்டேன்.
தமது காலத்து எழுத்து பற்றியும், எழுத்தாளர்கள் குறித்துமான அவரது பதிவுகள், பகிர்வுகள் அரிய செய்திகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு அளித்து வந்திருப்பவை. கடந்த ஆண்டு சார்வாகன் மறைந்தபோது அருமையான புகழஞ்சலி செலுத்தி இருந்தார். சாலிவாகனன் மறைந்தபோது அச்செய்தியை ஒரு நண்பர் சொன்ன முறையில் வல்லிக்கண்ணன் அதைச் சார்வாகன் என்று நினைத்து ஓர் இரங்கல் கட்டுரை எழுதி, அது பிரசுரமும் ஆகிவிட்டது. தன்னைப் பற்றிய இரங்கல் கட்டுரையைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த எழுத்தாளர்கள் இருவர். ஒருவர், சார்வாகன். இன்னொருவர் ஹெமிங்வே என்று அதிலும் ஒரு சுவாரசியமான குறிப்பைச் சேர்த்திருந்தார்.
அண்மையில் தடம் இதழில் வந்திருந்த அவரது நேர்காணலில், அவரது நகைச்சுவை பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில் மிகவும் சுவையானது…. உண்மையைச் சொன்னால் சட்டென்று அது நகைச்சுவை ஆகிவிடுகிறது என்றார். ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில் மேடைக்கருகே வைக்கப்பட்டிருந்த கூலரின் குளிர்ச்சியைத் தாங்க இயலாமல் தவித்திருக்கிறார். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டபோது, இது எனக்கு இப்போது மிகவும் தேவையாக இருக்கிறது என்று மைக்கில் சொன்னாராம், உண்மையைச் சொல்கையில் அது நகைச்சுவை உணர்வைத் தூண்டிவிடுகிறது என்றிருக்கிறார்.
உண்மையின் அருகே குடியிருப்பது எப்போதும் ரசனை மிக்க வாழ்க்கையாகவே இருக்கும். அன்பின் பிரியாவிடை அய்யா உங்களுக்கு!
**************

News

Read Previous

இஸ்ரோவின் சாதனை

Read Next

மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீந்தில் கொடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *