இஸ்ரோவின் சாதனை

Vinkmag ad

அறிவியல் கதிர்

இஸ்ரோவின் சாதனை
பேராசிரியர் கே. ராஜு

இந்திய விண்வெளி சரித்திரத்தில் 2017 பிப்ரவரி 15ஆம் நாள் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நாளாக அமைந்தது. உலக அளவில் விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகவும் அதிக செலவின்றியும் நிறைவேற்றக் கூடிய நிறுவனம் என இஸ்ரோ (Indian Space Research Organisation) ஏற்கனவே அடையாளம் பெற்றுவிட்டது. 2016 ஜூன் மாதத்தில் ஒரே ராக்கெட்டில் 20 கோள்களை இந்தியா அனுப்பி உலக கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பியதன் மூலம் உலக சாதனை நிகழ்த்தி மற்றுமொரு மகுடத்தைச் சூட்டிக் கொண்டது இஸ்ரோ. இதற்கு முன்னர் ஒரே ராக்கெட்டில் 37 கோள்களை 2014 ஜூன் மாதத்தில் விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்திருந்த ரஷ்ய விண்வெளி சாதனையை இந்தியா முறியடித்து இந்தியர்களைப் பெருமிதமடைய வைத்துள்ளது.
104 கோள்களைத் தாங்கிய இஸ்ரோவின் ராக்கெட் பிஎஸ்எல்வி-சி37 (Polar Satellite Launch Vehicle-C37)  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ராக்கெட் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 20 நிமிடங்களுக்குள்ளாக ஒன்றன்பின் ஒன்றாக அந்தக் கோள்கள் கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் (சுமார் 520 கி.மீ.) பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்திவிடப்பட்டன.
சுமார் 320 டன்கள் எடையுள்ள இந்த பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட்தான் இதுவரை நாம் அனுப்பிய ராக்கெட்டுகளிலேயே எடை கூடியது. மையத்திலிருந்து புறப்படும்போது அதன் உயரம் 44.4 மீட்டர்கள். முதலில் அதன் முக்கிய செயற்கைக்கோள் கார்டோசாட்-2 வரிசை விண்ணில் ஏவப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவின் ஐஎன்எஸ் 1ஏ, ஐஎன்எஸ் 1பி ஆகிய இரு நானோசெயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. இந்திய கோள்கள் மூன்றைத் தவிர, 96 கோள்கள்  அமெரிக்காவையும், ஐந்து கோள்கள் இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, கஜகஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளையும் சேர்ந்தவை.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சாதனை உலக ரெக்கார்டு படைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் நிகழ்த்தப்பட்டதல்ல, உற்பத்தித்திறனை அதிகரித்து அதிக அளவில் பலன்கள் பெறவேண்டும் என்பதற்காகவே என்கிறார் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்.
104 கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்துவது சிக்கல்கள் நிறைந்த சவால் மிகுந்த பணியாகவே இருந்தது.  ஒன்றன் பின் ஒன்றாக கோள்கள் ஏவப்பட்டபோது, ஒவ்வொரு கோளுக்கும் கொடுக்கப்பட்ட சுழற்சியின் (spin) காரணமாக அவை வெவ்வேறு கோணங்களில் ஏவப்பட்டன. மணிக்கு 27,000 கி.மீ. வேகத்தில் செல்லும் கோள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் இருப்பதை இந்த முறையில்  உத்தரவாதப்படுத்த வேண்டியிருந்தது.
இந்தக் கடினமான பணியைப் புரிந்துகொள்ள எளிமையாக இப்படி விவரிக்கிறார் தில்லி விக்ஞான் பிரச்சார் அறிவியலாளர் டி.வி.வெங்கடேஸ்வரன் : ஒடும் பேருந்திலிருந்து கீழே குதித்தால் பஸ்ஸோடு கொஞ்ச தூரம் ஓட வேண்டுமல்லவா? அதிலும் ஐந்தாறு பேர் அடுத்தடுத்துக் குதித்தால், முதலில் குதித்தவர் பேருந்தோடு ஓடி வரும்போது இரண்டாவதாகக் குதிப்பவரோடு மோதிவிடக்கூடும். எனவே குதிப்பவர்கள் அடுத்துக் குதிப்பவரின் பாதையிலிருந்து விலகி ஓடவேண்டும் என்கிறார் டிவிவி.
மேலே அனுப்பப்பட்ட முக்கிய செயற்கைக்கோள் கார்டோசாட்-2 வரிசை பல நிறங்களையும் தொலைதூரத்திலிருந்தே  பதிவு செய்யக்கூடிய தனிப்பட்ட திறன் கொண்ட காமெராக்கள் பொருத்தப்பட்டவை. இக்கோளிலிருந்து கிடைக்கும் பிம்பங்களை வரைபடங்கள் தயாரித்தல், கடற்கரை நிலப்பகுதியைப் பயன்படுத்துதல்-கட்டுப்படுத்தல், சாலைகளின் வலைப்பின்னலைக் கண்காணித்தல், நீர் விநியோகம் செய்தல், புவியியல் தகவல்களைப் பயன்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். செயற்கைக்கோள்களின் அளவை மிகவும் குறைக்க முடியும் என்பதை இந்தியாவின் ஐஎன்எஸ் 1ஏ, ஐஎன்எஸ் 1பி ஆகிய இரு நானோசெயற்கைக் கோள்களும் நிரூபித்துள்ளன. ஐஎன்எஸ் 1பி, ஒரிகாமி காமெரா பொருத்தப்பட்ட நானோகோள். பொருளின் அளவை மிகப் பெரிதாக்கிக் காட்டக்கூடியது அந்த காமெரா. அது மட்டுமல்ல, பிம்பத்தை மிக நுணுக்கமாகக் காண்பிக்கக்கூடியதும் கூட. ஆட்களையோ பொருள்களையோ தேடல், மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பயன்படும் கருவிகளை புரட்சிகரமாக மாற்றியமைக்க இத்தொழில்நுட்பம் உதவும் என்கிறார் செயற்கைக் கோள்கள் பயன்பாட்டு மைய இயக்குநர் டாக்டர் தபன் மிஸ்ரா.
இந்த ராக்கெட்டோடு இஸ்ரோ இதுவரை 226 செயற்கைக் கோள்களை ஏவிமுடித்திருக்கிறது. அவற்றில் 179 கோள்கள் அயல்நாடுகளைச் சேர்ந்தவை.
மிக விரைவில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட GSLV-Mk III-D1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ. இந்தியக் குழு இன்டஸ், ஜப்பானியக் குழு ஹகுடோ ஆகிய இரு குழுக்களும் தயாரித்துள்ள சந்திரனின் பரப்பை ஆய்வு செய்ய இருக்கும் ரோவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 28 அன்று ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளன. இவற்றோடு, அடுத்த ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்துவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது இஸ்ரோ.
தொடர் சாதனைகளை நிகழ்த்த இருக்கிறது இஸ்ரோ. வாழ்த்துவோம்!
(உதவிய கட்டுரை : 2017 மார்ச் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் ஹசன் ஜவைத் கான் எழுதியுள்ள தலையங்கம்)

News

Read Previous

சிந்தனை உறக்கம்!

Read Next

ரசனை மிக்க வாழ்க்கைக்குப் பிரியாவிடை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *