முதல் இடம் தாண்டி, முன்னேறுங்கள்..!

Vinkmag ad

உனக்கும் ஓர் இடம் உண்டு – 2

முதல் இடம் தாண்டி, முன்னேறுங்கள்..!

 — கவி. முருக பாரதி

கடந்த முறை வந்த பயிற்றுநர், இம்முறையும் வருவாரா என்று ஆவலோடு காத்திருந்தனர், அந்தப் பிரபலமான நகைக்கடையின் கிளை மேலாளர்கள். பயிற்றுநர் வந்தார். அனைவரையும், ஒரு வட்டமாக – ஆனால், ஒருவர் பின் ஒருவராக நிற்கச் சொன்னார். “முதலில் நிற்பவர் மட்டும் கைதூக்குங்கள்..!” என்றார். யார் முதலில் நிற்பவர் என்று எப்படி முடிவு செய்வது..? எல்லோரும் பயிற்றுநரையே உற்றுப் பார்த்தார்கள்.

பயிற்றுநர், மறுபடி சொன்னார்… “ம்..! முதலில் நிற்பவர் கை தூக்குங்கள்..!” என்று. சிறிய தயக்கத்திற்குப் பின், ஒருவர் கை தூக்கினார். பயிற்றுநர் மற்றவர்களை ஏதோ கேள்வி கேட்பது போலப் பார்த்தார்.  பின்னால் இருந்தவர்களைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அனைவருமே, கை தூக்கினர்.

எல்லோரையும் பாராட்டிவிட்டு, மூன்று கேள்விகளைக் கேட்டார், அந்தப் பயிற்றுநர்.

1)    வாழ்க்கை எனும் வட்டத்தில், இன்னார்தான் முதல் இடம் என்று யார் முடிவு செய்வது..?

2)    முதலில் தொடங்குவதாலேயே ஒருவர், முதல் இடம் பெற்றுவிட முடியுமா..?

3)    உங்களுக்குப் பின்னால் யாரேனும் இருந்தால்தான், நீங்கள் முதல் இடம் பெறுகிறீர்களா..?

     முதல் கேள்வியைப் படமாக, உங்கள் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். அதுவே பல பாடங்களைத் தரும்.

     எது முதல் இடம்..? யார் நம்பர் ஒன்..? – யோசியுங்கள்..!

     தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில், நம்பர் ஒன் பேட்ஸ்மேன் யார்..? – நீங்கள் விராட் கோலி என்று பதிலளித்தால், அவரை விட ரோஹித் சர்மா சிறந்தவர் என்கிறார், விகடனில் எழுதிய ஒரு கட்டுரையாளர். எது சரி..?

     உலகின் நம்பர் ஒன் பணக்காரர் யார் என்று கேட்டால், எப்படிக் கணக்கிடுவது..? மொத்தச் சொத்து மதிப்பிலா, நிகர வருமானத்தின் அளவிலா, சந்தை மதிப்பிலா..?

     உலகின் செல்வாக்கு மிக்க நம்பர் ஒன் தலைவர் யார்..? காலப் ஆய்வறிக்கை அல்லது டைம்ஸ் பத்திரிகை – யாருடைய மதிப்பீட்டை ஏற்றுக் கொள்வது..?

     எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எளிமையானது. முதல் இடம் என்பது ஒரு மாயை. குறித்த காலத்தில், குறிப்பிட்ட சிலரால் இன்னார்தான் நம்பர் ஒன் என்று குறிக்கப்படுகிறது. அதற்கும், உங்கள் குறிக்கோளுக்கும் தொடர்பிருக்க வேண்டிய அவசியமில்லை. இதை உங்கள் மனதில் குறித்துக் கொள்ளுங்கள்..!

     தயவு செய்து, முதல் இடத்தைக் குறி வைக்காதீர்கள். உங்கள் குறிக்கோளுக்கு முதல் இடம் கொடுங்கள். நீங்கள் நினைத்ததை அடைவதுதான் வெற்றி. மற்றவர்கள் தர வரிசையைப் பொறுத்தது அல்ல. மற்றவர்களின் மதிப்பீடுகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், உங்கள் மதிப்பு மாறாது.

     இப்போது, இரண்டாவது கேள்வியை சிந்தியுங்கள்..! முதலில் தொடங்குபவருக்கு, மற்றவர்களை விட, ஒரு முனையளவு வாய்ப்பு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது மட்டுமே முதல் இடத்தைப் பெற்றுத் தந்து விடாது.

     டெஸ்ட் கிரிக்கெட்டில், தொடக்க வீரராக இறங்கிய கவாஸ்கருக்கு சாதிக்க அதிக வாய்ப்புகள் இருந்தது உண்மைதான். ஆனால், அவரின் சாதனைகள் உட்பட, ஏராளமான சாதனைகளை முறியடித்த சச்சின், நான்காவது வீரராக களம் இறங்கியவர் என்பதை மறக்கக் கூடாது.

     இன்னும் சொல்லப் போனால், முதலில் தொடங்குபவரை விடப் பின்னால் தொடங்குபவர்களுக்கே, வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாகத் தொழிலில். உதாரணம்… முன்னுதாரணத் தொழிலதிபர் பில் கேட்ஸ்.

     இப்போது, மூன்றாவது கேள்வியை எண்ணிப் பாருங்கள்..! யாரேனும் பின்னால் இருப்பதால்தான் ஒருவர் முதல் இடம் பெறுகிறார் என்ற பார்வை, முக்கியமானது. மாணவர்களிடம் நான் விளையாட்டாக சொல்வேன்… “வகுப்பில் எல்லோரும் 0 மதிப்பெண் எடுத்து, நீ 1 மதிப்பெண் பெற்றால், நீதான் நம்பர் 1” என்று. அதாவது, நான் உயர்ந்தவனாக இருப்பது குறித்து அக்கறை கொள்வதை விட்டு விட்டு, மற்றவர்கள் குறைவாக இருக்க வேண்டும் என்று வேண்டத் தொடங்கி விடுவதுதான், இந்த “முதல் இடம்” எனும் கருத்தில் இருக்கும் பேராபத்து.

     இந்த மூன்று கேள்விகளின் முடிவாக, முதல் இடம் பெற வேண்டாம் என்கிறீர்களா..? என்று என்னைக் கேட்டால், என் பதில் எளிமையானது. முதல் இடம் என்பது மற்றவர்களும் காலமும் வழங்குவது. அதைக் கவனத்தில் கொள்ளாமல், உங்களின் முன்னேற்றம் குறித்தே அக்கறை கொள்ளுங்கள் என்பதுதான்.

     நீங்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் முன்னேறிய இடத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால், முன்னேற்றம் என்பதுதான், மனித இனத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

     கவனம்..! நான், வளர்ச்சி குறித்துப் பேசவில்லை. மரம் வளரும்; ஆனால், மரம் முன்னேறாது. ஏனென்றால், வளர்ச்சி என்பது இயல்பாக நடப்பது. நம் வயது அதிகரிப்பது போல. ஆனால், முன்னேற்றம் என்பது, நம் முயற்சியினால் அடைவது.

வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கிய நோக்கம் முன்னேறுவதுதான். பயணம் என்பதே ஒரே இடத்தில் இருப்பது அல்ல; முன்னேறுவதில்தான் அடங்கி இருக்கிறது. மற்றவர்களை முந்துவது அல்ல; நாம் இருந்த இடத்தில் இருந்து முன்னேறுவது. நீங்கள் தற்போது எந்த இடத்தில் இருந்தாலும் சரி. அங்கிருந்து தொடங்கி, மிகப் பெரிய, மிக உயர்ந்த இடத்தை உங்களால் அடைய முடியும். வெறும் நம்பிக்கை வார்த்தைகள் அல்ல; அறிவியல் பூர்வமாக நிரூபிக்கிறேன்.

மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைய, மிகப் பெரிதாய் சாதிக்க, நீங்கள் மிகப் பெரிதாகத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொடக்கம் மிகச் சிறிதாகக் கூட இருக்கட்டும். ஆனால், முறையாக, சீராக, தொடர்ச்சியாக (மும்மந்திரங்கள்) முன்னேறிக்கொண்டே இருந்தால், பல சாதனைகளை உடைக்க முடியும். புதிய சரித்திரத்தைப் படைக்க முடியும்.

இதை, டொமினோ உத்தி (Domino Strategy) என்கிறார்கள். டொமினோ என்பது, செவ்வக வடிவிலான, கல் போன்ற ஒரு பொருள். வரிசையில் வைத்தால், ஒரு டொமினோ-வால், அதைப்போல ஒன்றரை மடங்கு பெரிதான இன்னொரு டொமினோ-வைக் கீழே தள்ள முடியும். எனவே, மிகச் சிறிய அளவில் (5 மி.மீ.) உள்ள டொமினோ-வில் தொடங்கினால், 29 டொமினோக்களைக் கொண்டு, அமெரிக்கா-வின் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தையே கீழே தள்ள முடியும் என்கிறார், ஒரு யூ-டியுப் பதிவாளர். (For video:https://www.youtube.com/watch?v=y97rBdSYbkg)

நீங்கள் மேலும் புரிந்து கொள்வதற்காக, வணிக ரீதியிலான ஒரு கணக்கைச் சொல்கிறேன். கடந்த ஒரு வாரத்தில், நீங்கள் 100வாடிக்கையாளர்களைப் பெற்று இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும், வெறும் 10 சதவீதம், உங்கள் வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொண்டே வந்தால், (இரண்டாவது வாரம் 110, மூன்றாவது வாரம் 121…), ஒரே ஆண்டில், உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 14,000 ஆகியிருக்கும். இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் பேர் ஆக உயர்ந்து நிற்கும்.

     இவை மயங்க வைக்கும் கற்பனை என்று எண்ணி விடாதீர்கள்..! பெருவெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர், இந்த வழிமுறையைத்தான் பின்பற்றியுள்ளார்கள். முன்பே சொன்ன மும்மந்திரங்களைப் பின்பற்றினால், உங்களாலும் முடியும்..! முதல் இடத்தைத் தாண்டி, வெகுதூரம் முன்னேற முடியும்..!

ஒரு சின்ன டெஸ்ட். இந்தக் கட்டுரையில், “மு” என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகள் எத்தனை..? அவற்றை எழுதிப்பாருங்கள். முன்னேற்றத்தின் முகவரி தெரியும். அதை அடைவதற்கான இன்னொரு உத்தியை, அடுத்த பகுதியில் வழங்குகிறேன்.

News

Read Previous

பரிணாமக் கோட்பாடு தவறா?

Read Next

அரபி இலக்கியம்

Leave a Reply

Your email address will not be published.