பரிணாமக் கோட்பாடு தவறா?

Vinkmag ad

அறிவியல் கதிர்

பரிணாமக் கோட்பாடு தவறா?
பேராசிரியர் கே. ராஜு

“டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக தவறானது. அதனை பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். மனிதன் இந்த பூமியில் எந்தக் காலத்திலும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் கூறவில்லை” என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் அதிரடியாகப் பேசியுள்ளார். ஜனவரி 19 அன்று ஔரங்காபாதில் அனைத்திந்திய வைதிக சம்மேளன நிகழ்ச்சியில் பேசும்போது இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

அத்துடன் நில்லாமல் “நான் அடிப்படை ஏதும் இல்லாமல் இதைக் கூறவில்லை. டார்வினுடைய கொள்கைக்கு உலகம் முழுதும் எதிர்ப்பு இருக்கிறது. நான் கலைப்பிரிவு பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. தில்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிஎச்.டி. பட்டம் வாங்கியவன். நானும் அறிவியல் மனிதன்தான்” என்று கூறி தனது கருத்துக்கு வலியூட்ட முயன்றிருக்கிறார் சத்யபால் சிங். நமக்கோ “நானும் ரவுடிதான்” என்று வடிவேலு ஒரு படத்தில் அலப்பறை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது! கிராஃபிக்சில் காண்பிப்பது மாதிரி நமது முன்னோர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குரங்கு மனிதனாக மாறியது என்று விஞ்ஞானிகள் சொல்வதாக அவர் புரிந்து வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. பரிணாம மாற்றம் நிகழ லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. இப்படிப்பட்டவர் மனிதவள மேம்பாட்டுத் துறையில் அமைச்சராக இருக்கிறார் என்பது தற்போதைய ஆட்சி என்ற ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று விவரமறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

சத்யபால் சிங்கின் கூற்றினை விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. “உயிரினங்களின் பரிணாமம் என்பது அனைத்து உயிரின செயல்முறைகளுக்கும்  ஆதாரமானது.. அடிப்படையானது. அது எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது மனித மனத்தினால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது” என்கிறார் பெங்களூரு ஐஐடியின் மூலக்கூறு மறுஉற்பத்தி, வளர்ச்சி மற்றும் மரபியல் துறையின் தலைவர் சந்தியா எஸ். விஸ்வேஸ்வரையா.

1800 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கீழ்க்கண்ட கடிதத்தை சிங்கிற்கு அனுப்பியுள்ளனர். சமூகவலைத்தளங்களிலும் அதை வெளியிட்டுள்ளனர்.

“விஞ்ஞானிகளும், அறிவியல் பரப்புரை செய்வோரும், பொதுமக்களில் அறிவியல் சார்ந்து சிந்திப்போருமான நாங்கள் உங்கள் கூற்றைக் கண்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம். பரிணாமக் கொள்கை அறிவியல் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறானது. மாறாக, ஒவ்வொரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பும் சார்லஸ் டார்வினுடைய கூர்த்த மதிக்கு வலுவூட்டவே செய்கிறது” என்று செல்கிறது கடிதம்.
“இது கல்வித் துறைக்கு தர்மசங்கடம் மட்டுமல்ல அத்துறையின் உயர்ந்த பதவிக்கே அவமானம்” என்கிறார் பயோகான் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரன் மஜும்தார்.

இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA), அறிவியல் பிரிவுகளின் தேசிய அகாடமி (NAS), அறிவியலின் இந்திய அகாடமி (IAS) ஆகிய மூன்று அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சத்யபால் சிங்கின் கூற்றைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆட்சியாளர்களிடமிருந்து எழும் அறிவியலுக்கு புறம்பானதொரு கருத்தினைக் கண்டிக்க அவர்கள் முதன்முறையாக முன்வந்துள்ளனர். “அமைச்சருடைய கருத்துகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. டார்வின் மிக முக்கிய பங்களிப்பைச் செய்த பரிணாமக் கோட்பாடு நன்கு நிரூபிக்கப்பட்ட கோட்பாடு. பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளில் எந்த அறிவியல் சர்ச்சையும் கிடையாது. பரிணாமக் கோட்பாடு எடுத்துவைத்த பல கருதுகோள்கள் பரிசோதனைகளாலும் கூர்ந்து நோக்கிச் சேகரித்த தகவல்களாலும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டவை. இந்த பூமிக் கிரகத்தில் மனிதர்கள், பிற மனிதக் குரங்குகள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்று அல்லது ஒரு சில ஆதி மூதாதையரிடமிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவை என்பது பரிணாமக் கொள்கையிலிருந்து நமக்குக் கிடைத்த முக்கியமான நுண்ணறிவு. பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களிலிருந்து பரிணாமக் கொள்கையை நீக்குவதோ, அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளைக் கூறி அதை நீர்த்துப் போகச் செய்வதோ பிற்போக்கானதொரு நடவடிக்கையாகவே இருக்கும். டார்வின் முன்மொழிந்த பரிணாமக் கொள்கையின்படி நடைபெற்ற இயற்கையின் தேர்வு  பின்னர் விஞ்ஞானிகளால் நன்கு செழுமைப்படுத்தப்பட்டு, நவீன உயிரியல், மருத்துவம் மட்டுமல்ல அனைத்து நவீன அறிவியல் துறைகளிலும் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் அது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடு” என்கிறது அந்த அறிக்கை.

நாட்டில் பரவலாக உள்ள அறிவியல் நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் மாணவர்களும் அமைச்சர்  தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமைச்சருடைய கருத்து அறிவியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அதில் ஆள்வோரின் அரசியலும் இருக்கிறது. என்னது.. அறிவியலில் அரசியலா என்று கேட்காதீர்கள். அரசியல் இல்லாத இடம் ஏதாவது இருக்கிறதா? கலீலியோவை சிறையில் வைத்தது அன்றைய மதவாத அரசியல். இன்று உண்மையான அறிவியலை போலி அறிவியல் கொண்டு தாக்குவது இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் மதவாத அரசியல். அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

News

Read Previous

மரம்

Read Next

முதல் இடம் தாண்டி, முன்னேறுங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *