மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு!

Vinkmag ad

மருத்துவம்: தொழிலல்ல, தொண்டு!

முன்பெல்லாம் மக்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கை உணவை உண்டு வாழ்ந்தனர். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிணிகட்கு நாட்டு மருந்தையே நாடினர் நகர்ப்புறங்களிலோ குடும்ப மருத்துவர் மட்டுமே மருத்துவச் சிகிச்சைஅளிப்பர். நீரிழிவு, இதய நோய், புற்று நோய்த்தாக்கம் சிற்றூர்களில் அறவே இல்லை. நகரத்தில் ஆயிரத்தில் ஒருவர்க்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்ட நிலையிருந்தது.
இக்காலத்தில், துரித உணவு முறை, அவசர கதியில் செல்லும் வாழ்க்கைமுறை, உணவில் கலப்படம், உடல் உழைப்பின்மை, சுற்றுச் சூழலால் ஏற்படும் மாசு இவற்றால் பிணி பல்கிப் பெருகி மக்களை வாட்டுகிறது. பொருள் வசதிபடைத்தவர் தவிர மற்றவர் அரசு மருத்துவ மனைகளையே நாடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிறந்த சிகிச்சை அளித்தாலும் மருத்துவச் செலவு மிக அதிகம். சிறு நோய்க்குக் கூட பல ஆயிரம் கொடுத்து சிகிச்சை பெறும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். சாதாரண காய்ச்சல் என்றால் கூட தேவையற்ற இரத்தப் பரிசோதனை, அலகீட்டு வரைவி(C.T.Scan) போன்ற ஆய்வுகள் செய்த பின்னர்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகள் பொருள் வசதி படைத்தவர்கள் என்று அறிந்து விட்டால் அதிகக்கட்டணம் உள்ள சிறப்பு அறைகளைக் கொடுத்து பணம் கறக்கிறார்கள். இதில் நடுத்தர வருக்கத்தினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். படித்தவர்கள்  காப்பீட்டு நிறுவன உதவியால் ஓரளவு நிலைமையைச் சமாளிக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் இன்று வர்த்தக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன என்பதே உண்மை.
அக்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருந்தார். உடல் நலிவடைந்தால் அவரைத்தான் பார்ப்பார்கள். சிலரால் செல்ல இயலாவிடின் அழைத்தால் அவரே இல்லத்திற்கு வந்து சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்துச் செல்வார். இன்று குடும்ப மருத்துவர்கள் அருகிவிட்டனர்.
தற்காலத்தில் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், தலைவலி என்றாலே  சிறப்புநிலை மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதால் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. பரிசோதனை முடிவதற்குள் ஒருமாத வருவாயை எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒருசில மருத்துவர்களே வருவாயை எதிர்பார்க்காமல் சேவையில் ஈடுபடுகிறார்கள். அப்பணி ஏழை, எளியவர்களுக்குப் பயன்பட வேண்டும்           விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும். விபத்து வழக்குகள் குறித்து பயப்படக் கூடாது. விபத்தில் காயம் அடைந்தவர்களை எந்த இடத்திலும் சிகிச்சைக்காகச் சேர்க்கலாம், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்டம் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கட்கு மருத்துவர்கள் தயங்காமல் உதவ முன்வர வேண்டும்.
மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினால், நோயைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம். செலவை எதிர் நோக்கும் அச்சவுணர்வே நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது.
இந்தியாவிலேயே மருத்துவப்பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரியான மரு. முத்துலட்சுமி(ரெட்டி)தான் மருத்துவ மனைகளில் பெண் மருத்துவர்களை நியமிக்க வழிவகை செய்தார். மேலும், புற்று நோயை ஒழிக்க ஆய்வுக்கழகம் அமைத்ததும் அவர்தான். ஒவ்வொரு மருத்துவரும் அவரை நினைவில் கொள்ள வேண்டும். அவர் மருத்துவம் தொடர்பாக எழுதிய நூல்களை மருத்துவக் கல்லூரியில் பாடப்புத்தகங்களாக வைக்க வேண்டும்.
மருத்துவம் என்பது தொழில் அல்ல; அது ஒரு சேவை. இதனை மருத்துவர்கள் உணர வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளை அன்புடன் அணுகி, அவரை சோதித்து, நோயின் தன்மை குறித்து உறவினர்களிடம் தெளிவாக விளக்க வேண்டும். இளம் மருத்துவர்கள் தங்களைவிட மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.
நோயாளிகள் மருத்துவர்களை தெய்வமாகவே நினைக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செயற்பாடு இரக்கமற்ற நிலையில் இருப்பதைப் பார்க்க நெஞ்சம் நோகிறது.
சில மாதங்கட்கு முன்னர், எண்பது வயதைக் கடந்த இதய நோயாளி ஒருவர், மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், பணம் கொண்டுவர மறந்து விட்டார். மருத்துவரின் செயலர், அம்முதியவரை மீண்டும் வீட்டுக்குப் போய்த் தொகையை எடுத்து வரவேண்டும் என்று சொல்லி அவர் மருந்துச் சீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டார். மனம், உடல் சோர்ந்து அம்முதியவர் வீட்டுக்குப் போய்ப் பணம் கொண்டு வந்த பிறகே மருத்துவர் சிகிச்சையளித்தார்.
ஆனால், அதே சமயம்  சிகிச்சையோடு அன்பையும் ஒரு சேர அளித்துக் காப்பாற்றும் மருத்துவர்களும் இருக்கின்றனர். அத்தகைய பரந்துவிரிந்த மனம் அனைவர்க்கும் இருந்தால், எளியோரும் முதியோரும் மனச்சுமையின்றி தம் நாள்களைக் கழிப்பர். மருத்துவர்கள் தாங்கள் செய்வது தொழிலன்று; மனித உயிர்களைச் காக்கும் மகோன்னதமான சேவை என்பதை என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.
சமூகம் நோய்ப்பிடியிலின்று தங்களை விடுவித்துக் கொள்ள, மருத்துவம் பற்றிய புரிதல் உணர்வுடன், சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணி நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக் கேற்ற உணவு முறை உடற்பயிற்சி, யோகா, போன்றவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதும் சிறந்த சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்களை உருவாக்குவதும், மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்குத் தரமான சிகிச்சையளிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டியது மருத்துவர்களின் கடமை.
–  தி.வே.விசயலட்சுமி
தினமணி நாள் 27.10.2018

 

News

Read Previous

புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்!

Read Next

இனி பேரிச்சம் பழ கொட்டைகளை வீசாதீங்க அது சக்கரை வியாதி, கிட்னி பாதிப்பை போக்கும்

Leave a Reply

Your email address will not be published.